பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திற்கு எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் அதன் புதுப் பரிமாணம் ஒன்று என்னை ஆச்சரியப்பட வைக்கும். அந்த ஈர்ப்பு கொஞ்சம்கூடக் குறையவில்லை. பழவேற்காட்டுக்குப் போவதை நான் நிறுத்தவும் இல்லை.
நார்வேயைச் சேர்ந்த என் நண்பரும் காட்டுயிர் அறிஞருமான பேராசிரியருமான ஆட் ஜாக்கப்சனுக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு வருடமும் அவர் தமிழ்நாட்டுக்கு வருவதே, பழவேற்காடு பறவை சரணாலயத்துக்கு வரும் பறவைகளைக் காண்பதற்காகத்தான்.
பழவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர் நீர்நிலை. அத்துடன் நன்னீர், உப்பு நீர், குட்டைகள், சேற்றுத் திட்டுகள், வயல்வெளிகள் போன்ற பல்வேறு சூழல்தொகுதிகளை உள்ளடக்கி இருப்பதால், இங்குப் பல்லுயிர்கள் செழித்து வளர்கின்றன. தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தில் பரவி இருக்கும் இந்த ஏரி பல ஆயிரக்கணக்கான பறவைகளின் புகலிடமாக உள்ளது.
வலசை காலத்தில் (Migratory season) வெளிநாடுகளில் இருந்து வரும் பல வகைப் பறவைகள், ஆயிரக்கணக்கில் இங்குக் கூடுகின்றன. பழவேற்காடு ஏரிக்கு அருகில் உள்ள நெலபட்டு பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்கம் செய்துவரும் கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, நீர்க்காகம் போன்ற பறவைகள் இரைதேடும் இடமாகவும் பழவேற்காடு இருக்கிறது. மீன், இறால், நண்டு போன்றவை மட்டும் இல்லாமல் பல சிறு நீர்வாழ் உயிரினங்கள் இந்தப் பறவைகளுக்கு உணவாக அமைகின்றன.
ஏரியின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளதால் இங்குக் காணப்படும் பறவைகளும் மாறுபடுகின்றன. ஆரம்பாக்கம் பகுதியில் நீர் குறைவாகவும், சேற்றுத் திட்டுகள் (mud flats) அதிகமாகவும் உள்ளதால், உள்ளான், உப்புக்கொத்திகள் அதிகம் காணப்படும். அதேபோல் அண்ணாமலைச்சேரி பகுதியில் நீர் அதிகமாக இருப்பதால் வாத்து வகைகளும், ஆலா, விரால் அடிப்பான், கடல் பருந்து போன்ற வற்றையும் இங்கு காணலாம்.
பட்டைத் தலை வாத்து
இங்கு வரும் முக்கியப் பறவை இனம் பட்டைத் தலை வாத்து (பார்-ஹெடெட் கூஸ்). இது இமயமலைத் தொடரைத் தாண்டிப் பறந்து தென்னிந்தியாவை வந்தடையும் வலசைப் பறவை. இதைப் போல் பல பறவை இனங்கள் இங்கு வந்தாலும்கூட, பழவேற்காட்டை பூநாரை தேசம் என்றே சொல்லலாம்.
பூநாரைகள் சிறியதாகவோ, பெரிய கூட்டமாகவோ தங்கள் உயரமான இளஞ்சிவப்புக் கால்களைக் கொண்டு நீரில் நடப்பது, நீண்ட அலகை நீரில் துழாவியபடியே உணவை உண்பது, நாம் படகில் சென்றாலும் நமக்கும் அவற்றுக்கும் இடையிலான இடைவெளி குறையாமல் நகர்ந்து சென்றுகொண்டே இருப்பதைப் பார்ப்பது அற்புதமான அனுபவம். அவை பறக்கும்போது வெளித்தெரியும் சிவந்த இறகுகள், அவற்றின் அழகுக்கு மகுடம் வைத்தது போலிருக்கும்.
சில நேரங்களில் ஆயிரக்கணக்கான பூநாரைகள் இங்கே கூடுகின்றன. பெரிய பூநாரைகளுடன் சாம்பல் பழுப்பு நிறக் குஞ்சு பூநாரைகள் இருப்பதையும் காணலாம். இது பழவேற்காட்டில் மனிதர்கள் செல்ல முடியாத ஒரு பகுதியில் பூநாரைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கக் கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வெயில் காலம் தொடங்கும் சமயத்தில் வலசைப் பறவைகள் பழவேற்காடு ஏரியை விட்டுத் தங்கள் நாட்டுக்குத் திரும்பிவிட்டாலும், பூநாரைகள் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் காணப்படுவது அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
வருடாந்திர மழை அளவு, ஏற்ற அலை, வற்ற அலைகளால் (high tide, low tide) ஏற்படும் நீர்நிலை அளவுகளில் ஏற்படும் மாற்றங்களும் பறவைகளின் போக்குவரத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவு எங்குக் கிடைக்கிறதோ அங்கே அந்தப் பறவைகள் செல்கின்றன. அது மட்டுமல்லாமல் எந்தவிதக் கட்டுப்பாடும் அல்லாமல் மீன், இறால் பிடிப்பது, ரசாயன விவசாயம் செய்வதும், சில பகுதிகளில் வேட்டையாடுதலும் தொடர்ந்து வருவது பழவேற்காட்டில் வாழும் உயிரினங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
நீரின் அளவும் பறவைகளும்
இந்தக் காரணங்களை எல்லாம்விட, நீர் இருப்பைப் பொறுத்துத்தான் பறவைகளின் நடமாட்டமும் இருக்கும். இயற்கையாகவே வடக்கு பகுதியில் (ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டா) பூமிக்கு அடியில் உள்ள கண்டத்தட்டுகள் மேலே எழுந்துவருவதால், அங்குள்ள நீர் வேகமாகத் தெற்கு நோக்கிச் செல்கிறது.
இதனால் வண்டல் படிவு அதிகமாகி ஆற்று முகத்துவாரத்தை மூடுகிறது. இதனால் கடல் நீரும் நன்னீரும் கலப்பதால் உருவாகக்கூடிய ஆற்று முகத்துவாரத்தின் (estuary) சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் முகத்துவாரத்தைச் சார்ந்த உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு முகத்துவாரத்தில் சேரும் வண்டல் படிவை அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் உலக அளவில் நீர்நிலை, நீராதாரங்களைப் பாதுகாக்கும் ராமசர் உடன்படிக்கை (Ramsar Convention) மூலமாகப் பழவேற்காடு ஏரியைப் பாதுகாப்பதும் அவசியமாகிறது. ராம்சர் உடன்படிக்கைக்குத் தேவையான அனைத்து விதிமுறைகள் / தேவைகளைப் பழவேற்காடு ஏரி பூர்த்தி செய்கிறது. இருந்தும் சர்வதேச அளவில் மதிப்புமிக்க ராம்சர் அந்தஸ்து, இந்த ஏரிக்குக் கிடைக்காமல் இருப்பது ஏன் என்பது கேள்விக்குறியே. தமிழக, ஆந்திர வனத்துறைகள் இணைந்து இதற்கான முயற்சிகளை எடுத்தால் வலசை வரும் பறவைகள் மட்டுமல்லாமல், உள்ளூர் பறவைகளுக்கும் பழவேற்காடு ஏரி உகந்த புகலிடமாகத் திகழும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
- த.முருகவேள், இயற்கை ஆர்வலர்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago