புவி வெப்பமடைதல் பேச்சுவார்த்தை போகாத ஊருக்கு வழி

By ஆதி வள்ளியப்பன்

பருவம் தப்பிப் பெய்யும் மழை, ஒரே நாளில் பெய்து ஊரே வெள்ளக்காடாகும் கன மழை, வாட்டியெடுக்கும் வெப்பநிலை... இப்படி பல்வேறுபட்ட பருவநிலை பிரச்சினைகளை இணைக்கும் புள்ளி புவி வெப்பமடைதல். இந்தப் பிரச்சினை தீவிரமடைந்து வருவது நாம் அறிந்ததே.

ஆனால், பூமி வெப்பமடையக் காரணமாக இருக்கும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய உடன்படிக்கையை முடிவு செய்வதற்காக போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், வழக்கம்போல் இந்த முறையும் ஆரோக்கியமான முடிவு எடுக்கப்படவில்லை.

ஐ.பி.சி.சி. (காலநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசு குழு) கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 1850க்குப் பிறகு, அதாவது தொழிற்புரட்சிக்குப் பிந்தைய ஒவ்வொரு பத்தாண்டிலும் உலகின் சராசரி வெப்பநிலை உயர்ந்துகொண்டே வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 21ஆம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகள் (2000-2009) மிகவும் வெப்பமான பத்தாண்டுகளாக இருந்திருக்கின்றன.

கி.பி. 1750 முதல் பூமியின் வளிமண்டல மேற்படலத்தில் சேகரமாகிவரும் கார்பன் டை ஆக்சைடு வாயுவே, பூமியின் வெப்பநிலை கட்டு மீறி அதிகரிக்க முக்கியக் காரணம் என்பதை, இந்த புதிய அறிக்கையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் காலத்தில் கார்பன் டை ஆக்சைடு 40 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

மனித குலம் நாளையே கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை நிறுத்தினாலும்கூட, அடுத்த 1000 ஆண்டுகளைத் தாண்டி வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 20 சதவிகிதம் நிலைத்திருக்கும். இதில் பெரும்பகுதியை வெளியிட்டவை பணக்கார நாடுகள்தான்.

கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை சீக்கிரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால், பூமியிலும் பருவநிலைகளிலும் ஏற்படும் மாற்றத்தை அடுத்த சில நூற்றாண்டுகளில்கூட தவிர்க்க முடியாது என்று ஐ.பி.சி.சி. அறிக்கை கடுமையாக எச்சரிக்கிறது.

இப்படி கார்பன் டை ஆக்சைடால் பூமி வெப்பமடைந்துவருவதால், கடல் நீர் வெப்பமடைந்து விரிவடை யும். இதனால் 2100க்குப் பிறகும் தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால் கடற்கரையோர மக்களும் தீவு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். கிரீன்லாந்து பனிப்படலம் முற்றிலும் கரைந்து போகலாம்.

மேலும், இயற்கைச் சீற்றங்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகமாக இருக்கும். இனிமேல் உத்தரகண்ட் வெள்ளம், ஹையான் புயல் போன்று இயற்கைச் சீரழிவுகள் வெளிப்படுத்தும் தீவிரத்தை எதிர்கொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள். இப்படியாக நமது சந்ததிகளின் வாழ்க்கை முற்றிலும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

எனவே, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டைக் குறைப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே போவது எந்த வகையிலும் நல்லதில்லை. வரலாற்று ரீதியில் கார்பன் டை ஆக்சைடை மிக அதிகமாக வெளி யிட்ட அமெரிக்கா, இப்போது வரை அதைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த உடன்படிக்கையையும் ஏற்க மறுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்காலத்தில் வெளியிடவுள்ள கார்பன் டை ஆக்சைடைக் குறைக்க ஒப்புக்கொள்கிறதே ஒழிய, ஏற்கெனவே வெளியிட்டதை அல்ல.

இந்தப் பின்னணியில் பருவநிலை மாற்றம் பற்றி போலந்து தலைநகர் வார்சாவில் 19வது சர்வதேச மாநாடு நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் ஐ.நா. காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையின் (யு.என்.எப்.சி.சி.சி.) கீழ் 190 நாடு கள் கூடி, புதிய உடன்படிக்கை தொடர்பாக விவாதித்தன. 2015ஆம் ஆண்டில் உருவாகவுள்ள புதிய உடன்படிக்கைக்கான மாநாடு இது.

இதுவரை நடந்த எல்லா மாநாடுகளிலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைக்கும் கட்டுப்பாடுகளை ஏற்கப் பணக்கார நாடுகள் மறுத்தே வந்திருக்கின்றன. இந்த முறையும் அதுவே நடந்தது.

வார்சாவில், கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டைத் தடுப்பதில் பணக்கார, வளர்ந்துவரும் நாடுகளுக்கு இடையில் வேறுபாடு இருக்கக்கூடாது என்ற பணக்கார நாடுகளின் வலியுறுத்தலை, மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எதிர்த்தது. ஆனால், அந்த வேறுபாடு பெருமளவு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிட்டதே உண்மை. சில பணக்கார நாடுகள் ஏற்கெனவே குறைக்க ஒப்புக்கொண்ட கார்பன் டை ஆக்சைடு அளவுகளில் இருந்தும் பின்வாங்கியுள்ளன.

அதேநேரம், பருவநிலை மாற்றத்தால் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளே கடுமையான உயிரிழப் பையும் பொருட்சேதத்தையும் சந்திக்கும். இதற்குப் பணக்கார நாடுகள் இழப்பீடு வழங்குவது தொடர்பான செயல்முறையும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த மாநாடு போகாத ஊருக்கு வழி சொல்லியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்