உயரும் கடல் மட்டம் - அலையாத்திக் காடுகளுக்குப் பாதிப்பு!

By ந.வினோத் குமார்

‘பருவ நிலை மாற்றங்களால் கடல் நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் எல்லாம் மூழ்கும். சுனாமியின்போது பெரிய அபாயங்களைத் தடுத்த அலையாத்திக் காடுகள் அதிகம் இருக்கும் பிச்சாவரம் பகுதியும் அதில் ஒன்று. அந்தக் காடுகளும் அவற்றைச் சார்ந்து இருக்கும் இருளர் இன மக்களும் கடல் மட்ட உயர்வினால் அதிகம் பாதிப்படைவார்கள். எனவே அவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்கிறார் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆய்வு மாணவர் சலீம் கான்.

சமீபத்தில் உலக அளவில் புகழ்பெற்ற விண்வெளி நிறுவனமான ‘நாசா’ உலகம் முழுக்க தலை சிறந்த 40 ஆய்வுகளைத் தேர்வு செய்தது. இந்த ஆய்வுகள் அனைத்துமே பருவநிலை மாற்றம் தொடர்பானவை. அந்த 40 ஆய்வுகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்புத் துறையின் ஆய்வு மாணவர் சலீம் கானின் ஆய்வும் ஒன்று. இந்தியாவில் இருந்து மட்டுமல்ல தெற்காசியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆய்வு இவருடையது மட்டும்தான்.

‘‘நாசா நிறுவனம் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றம் தொடர்பான தலைசிறந்த 40 அல்லது 50 ஆய்வுகளை ஆண்டுதோறும் தேர்வுசெய்து வருகிறது. அவ்வாறு தேர்வான ஆய்வுகளைச் செய்த மாணவர்களை அமெரிக்காவுக்கு அழைப்பார்கள். அங்கு பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, இத்துறையில் மேலும் பல ஆய்வுகளைச் செய்வதற்கு வழிகாட்டுதல்களைப் பெற முடியும். இந்த வருடம் ‘நாசா’ தேர்வு செய்த 40 மாணவர்களுடன் சேர்த்து கடந்த பத்தாண்டுகளில் தேர்வான மாணவர்கள் சுமார் 500 பேர் வரை இருப்போம். எங்களை ‘அடுத்த தலைமுறை பருவ நிலை மாற்ற ஆய்வாளர்கள்’ என்று அழைக்கிறார்கள்’’ என்கிறார் சலீம் கான்.

பொறியியல் படிப்பை இடை நிறுத்தம் செய்துவிட்டு, பிளாண்ட் பயோலஜி மற்றும் பிளாண்ட் பயோடெக்னாலஜி படிப்பைத் தேர்வு செய்து படித்த இவர், 2007-ம் ஆண்டு அலையாத்திக் காடுகளைப் பற்றி பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் வழிகாட்டுதலின் கீழ் ஆய்வு ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வு, அவருக்கு ஐ.நா. அமைப்பின் சிறந்த இளைஞர் விருதைப் பெற்றுத் தந்தது.

அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்புத் துறையின் முதல் ஆய்வு மாணவரான இவர் பருவநிலை மாற்றத்தால் தமிழக பகுதியில் கடல் மட்டம் உயர்வது பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.

‘சுமார் 1,070 கி.மீ. நீளமுள்ள தமிழக கடற்கரையின் மையமாக அலையாத்திக் காடுகள் அதிகம் இருக்கும் பிச்சாவரம் பகுதி இருக்கிறது. அதுதான் என் ஆய்வுக்கான களம். கடந்த 92 ஆண்டுகளின் சென்னையின் சராசரி கடல்மட்ட உயர்வை ஆராய்ந்தபோது ஒவ்வொரு வருடமும் 0.23 மிமீ அளவுக்கு அந்த மட்டம் உயர்ந்திருக்கிறது’’ என்கிறார்.

கடல் மட்ட உயர்வை அளப்பதற்கு ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கே உரிய செயல்வடிவம் ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவுக்கென சொந்தமாக அப்படி ஒரு செயல்வடிவம் இல்லாததால், இவர் நியூஸிலாந்தில் பயன்படுத்தும் செயல்வடிவத்தைப் பெற்று ஆய்வு செய்திருக்கிறார்.

‘‘இந்த ஆய்வில் 2100-ல் பிச்சாவரம் பகுதியில் கடல்மட்டம் அதிகபட்சமாக 50.33 சென்ட்டிமீட்டராகவும், குறைந்தபட்சமாக 30.50 சென்ட்டிமீட்டராகவும் உயரும் எனத் தெரியவந்துள்ளது. அவ்வாறு கடல் மட்டம் உயர்ந்தால் பிச்சாவரம் பகுதியில் வெள்ளார் மற்றும் கொள்ளிடத்துக்கு இடையில் உள்ள 21 குக்கிராமங்கள் கடலில் மூழ்கும். இந்த கிராமங்களில் விவசாயம், மீன்பிடிப்பு மற்றும் கடல்சார் வேளாண்மை ஆகியவற்றைச் செய்துவரும் மக்கள் இருக்கிறார்கள். அத்துடன் இருளர் இன மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். கடல் மட்டம் உயர்ந்தால் இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்’’ என்கிற சலீம் கான் அந்தப் பாதிப்புகளில் இருந்து தப்புவதற்கான வழிகளையும் தன் ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘‘நன்னீர் மற்றும் உவர்நீர் ஆகிய இரண்டிலும் வளரும் தன்மை கொண்ட அலையாத்திக் காடுகள் கடற்கையில் அதிகமாகக் காணப்படும். இந்த அலையாத்தி மரங்களின் வேர்கள் பூமிக்குக் கீழே சென்று மீண்டும் மேல் நோக்கி வளரும் தன்மை கொண்டவை. இந்த வேர்கள் மூலமாக அலையாத்தி மரங்கள் சுவாசிக்கின்றன. கடல் மட்டம் உயர்ந்தால் இந்த மரங்கள் அனைத்தும் நீருக்குள் மூழ்கும். மேலும் வேர்கள் மூலமாக சுவாசிக்கவும் முடியாது. இப்படி இந்த காடுகள் மூழ்கிவிட்டால் சுனாமி போன்ற சமயங்களில் அலைகளை ஆற்றுப்படுத்த காடுகள் இல்லாமல் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். காடுகளையும் அங்கு வாழும் இருளர்களையும் பாதுகாக்க இயற்கை சார்ந்த மக்களை மையமாகக் கொண்ட வழிகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, அலையாத்திக் காடுகளின் பரப்பை விரிவாக்கலாம். கரையில் இருக்கும் அலையாத்திக் காடுகளை நிலம் நோக்கி வளர்க்கலாம். இதனால் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு அதிகரிப்பது மட்டுமின்றி இருளர்களையும் இடம்பெயராமல் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் சலீம்.

‘ஒவ்வொரு நாடும் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தேசிய அளவில் திட்ட நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அந்தத் திட்ட நடவடிக்கைக்குக் கீழ் 8 குறிக்கோள்கள் இருக்கின்றன. இவற்றுடன் இந்த ஆய்வில் குறிப்பிட்டிருக்கும் ஆலோசனைகளையும் சேர்த்துக் கொண்டால் பருவநிலை மாற்றம் தொடர்பான தகவமைப்பு நடவடிக்கைகளை மிக நல்ல முறையில் செயல்படுத்த முடியும்’ என்கிறார்.

‘‘இயற்கை சார்ந்து மக்களை மையமாகக் கொண்ட வழிகளை பருவநிலை மாற்றம் தொடர்பான தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று என் ஆய்வில் சொன்னதற்காகத்தான் ‘நாசா’ என்னைத் தேர்வு செய்திருக்கிறது’’ என்றார் சலீம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்