சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் எதிரே உள்ள இக்சா மையம், வெயிலின் கடுமை சற்றே தணிந்திருந்த, மே மாதம் 4-ம் தேதி. தமிழ் சுற்றுச்சூழல் ஆர்வலனான நானும் நண்பர்களும் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக பேசி வந்த ஒரு விஷயத்துக்காகக் கூடியிருந்தோம். “தமிழ் சுற்றுச்சூழல் சொற்களஞ்சியம்” ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டமே அது.
சுற்றுச்சூழல் எழுத்து சார்ந்த ஆர்வம், ஆங்காங்கே வலுவாகத் துளிர்விடத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், மொழிபெயர்ப்போ, நேரடி எழுத்தோ, நாங்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால்: துறை சார்ந்த சரியான சொற்களைத் தேடுவதுதான். மேலும் தமிழ் போன்ற நீண்ட மரபும் வளமும் நிறைந்த ஒரு மொழியை, சரியாகப் பயன்படுத்த நாம் அறிந்திருக்கிறோமா? தமிழின் வீச்சை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்விகளே, சொற்களஞ்சியம் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின. துரதிருஷ்டவசமாக, குழந்தை இலக்கியம் போல தமிழில் அதிகம் கவனம் பெறாத எழுத்துத் துறைகளில் ஒன்றாக, சுற்றுச்சூழல் துறையும் இருக்கிறது.
காலனி ஆதிக்கத்தின் விளைவாக நமது மரபுச்செல்வங்கள் பலவற்றை தொலைத்தது மட்டுமில்லாமல், அவற்றின் அருமையையும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம். நமது அறிவையும் வளங்களையும் காலனி ஆட்சி இரண்டாந்தரமாகப் பார்த்தது, நம்மையும் அப்படிப் பார்க்க பழக்கப்படுத்தி விட்டது. அவர்களுக்கு இயற்கை மூலாதாரங்களும் நமது உழைப்பும் மட்டுமே தேவைப்பட்டன. அவர்களது கண்ணோட்டத்தில் உருவான மெக்காலே கல்வி முறையையே இன்று வரை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அது, நமது மண்ணின் மரபையும் வளங்களையும் மதிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாகத்தான் ஓட்டகச்சிவிங்கி, நீர்யானை, பென்குவின் என்று நம்மிடையே வாழாத உயிரினங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதும், நம்மிடையே வாழும் கூகை (எளிதாகக் காணக்கூடிய ஆந்தை வகை), அலங்கு (Anteater) போன்ற விலங்குகளை அதிசய உயிரினங்களாகப் பார்க்கும் பார்வையும். குறைந்தபட்சம் பழங்குடிகள், கிராம மக்கள் இவற்றை எப்படி விளிக்கிறார்கள் என்பது பற்றிக்கூட பெரும்பாலோருக்குத் தெரியாது. இது இன்னும் பல படிகள் வளர்ந்து உயிரினங்கள் பயங்கரமானவை, கொடூரமானவை, ஆட்கொல்லிகள், நமக்கு போட்டியாளர்கள் என்ற பார்வையும் ஊடகங்கள் வழி வலிந்து திணிக்கப்படுகிறது.
நமது முன்னோர்களுக்கு மாறாக, எவ்வளவு தூரம் சுற்றுச்சூழலில் இருந்தும், இயற்கையில் இருந்தும் நாம் விலகியிருக்கிறோம் என்பததையே, உயிரினங்களைப் பற்றிய இந்த நவீன அறியாமை உணர்த்துகிறது. இதை சீர்செய்வதற்கு அவசியத் தேவை, காத்திரமான மொழி. அந்த மொழியை அடிப்படையாகக் கொண்டே, விழிப்புணர்வை பரவலாக்க முடியும். எப்படி ஆணாதிக்கம், சாதிச்சார்புகளைத் தாண்டி நமது மொழியை கட்டமைக்க வேண்டுமோ, அதுபோல சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட ஒரு மொழியை கட்டமைக்க வேண்டியதும் அத்தியாவசியம்.
புதிய துறைகளைப் பற்றிப் பேசும்போது ஆங்கில துறைசார் சொற்களை வெறுமனே மொழிபெயர்ப்பதைத் தாண்டி, அந்தச் சொற்களுக்கான உணர்வை சரியாக உணர்த்தும் வலிமையான சொற்களைத் தேடிப் போக வேண்டிய தேவை அவசியமாக இருக்கிறது. ஏற்கெனவே நம்மிடம் இருந்த மரபு சார்ந்த சொற்களை, பாரம்பரிய அறிவை பெருமளவு இழந்துவிட்டோம். இப்போது எஞ்சியிருக்கும் சொற்கள், அறிவை ஆவணப்படுத்தி பரவலாகப் பயன்படுத்தாவிட்டால், நிச்சயம் இவற்றுடனே நமது சூழலியல் உணர்வும் அக்கறையும் புதைக்கப்பட்டுவிடும்.
இந்த நிலையை சற்றேனும் அசைத்துப் பார்ப்பதற்கான “அணில் அளவு” முயற்சியாக, 15க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து கடந்த மே மாதம் ஒரே நாளில் நடத்திய இரண்டு நிகழ்வுகளைக் கருதலாம்.
பகலில் தமிழில் சுற்றுச்சூழல் சொற்களஞ்சியம் ஒன்றை உருவாக்குவதற்கான பணியைத் தொடங்குவதற்காக சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் கூடியிருந்தனர். மூத்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரனின் பேச்சுடன் தொடங்கி, கூட்டம் நடைபெற்றது. அநேகமாக தமிழின் முக்கிய சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள், புதிய செயல்திட்டம் ஒன்றுடன் கூடியது, இதுவே முதல் தடவையாக இருக்கும். சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த 25க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நீண்டகாலமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் இத்துறை சார்ந்து இயங்கி வரும் சு.தியடோர் பாஸ்கரன் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார், பல நேரங்களில் முக்கிய விஷயங்களை கவனப்படுத்தினார். க்ரியா தற்கால அகராதியின் இணை ஆசிரியர் கவிஞர் ஆசை, சுற்றுச்சூழல் அகராதியின் அடிப்படைகள் பற்றியும், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன் அதன் நடைமுறை அம்சங்கள் பற்றியும் பேசினர்.
சுற்றுச்சூழல் அகராதி ஒன்றை உருவாக்குவதான ஏற்பாட்டுடன் விவாதம் தொடங்கினாலும், முதல்கட்டமாக சுற்றுச்சூழல் சொற்களஞ்சியம் (Glossary) ஒன்றை உருவாக்குவது. பிறகு, அதை அடிப்படையாகக் கொண்டு அகராதியாக விரிவாக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இது அச்சுப் புத்தகமாக வருவதற்கு முன், கட்டற்ற ஆதாரமாக (Open Source) அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக Tamilbioterms என்ற இணையக் குழுமம் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் அதில் இணையலாம். மேலும், ஒவ்வொருவரும் குறிப்பிட்ட சில நூல்களை எடுத்துக்கொண்டு, அவற்றிலுள்ள சொற்களைத் தொகுப்பதன் அடிப்படையில் சொற்களஞ்சியத்தை படிப்படியாக உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம் மாலையில், சமீபத்தில் தமிழில் வெளியான 20 சுற்றுச்சூழல் நூல்கள் தொடர்பான மதிப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இலக்கியக் கூட்டங்களே தமிழகத்தில் ஆட்சி செலுத்தி வரும் நிலையில், சுற்றுச்சூழல் நூல்களுக்கான ஒரு மதிப்புரை கூட்டம், அதுவும் ஒரே நேரத்தில் 20 நூல்களுக்கான விமர்சனத்தை முன்வைத்த முதல் கூட்டமென்று இதைச் சுட்டலாம்.
காலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூடிப் பேசியபோதும் சரி, மாலையில் சுற்றுச்சூழல் நூல்களைப் பற்றிய மதிப்புரையைக் கேட்கக் கூடிய வாசகர்கள் என்றாலும் சரி, இரு தரப்பினரது சுற்றுச்சூழல் அக்கறை துலக்கமாக வெளிப்பட்டது. இந்த இரண்டு கூட்டங்களும் இரு வேறு வழித்தடங்களில் அமைந்தாலும், இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். “தமிழ் பசுமை எழுத்தை” அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கான வேலைகளை, பெரிய அளவில் முடுக்கிவிடுவதுதான் அது.
“மொழி - சுற்றுச்சூழல் தொடர்பு பற்றி வெகு சிலரே அக்கறை காட்டியுள்ளனர்… …சுற்றுச்சூழல் போன்ற ஒரு புதிய அக்கறையை ஒரு சமுதாயம் எதிர்கொள்ள வேண்டுமானால், துறைச் சொற்கள் மூலம் அதன் மொழி வலிமையூட்டப்பட வேண்டும். கலைச் சொல்லாக்கத்தில் கல்வியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். இதைத் திட்டமிட்டுச் செய்யாவிட்டால், பல பிரச்சினைகள் எழுகின்றன. ஒரு பொருளுக்கு வெவ்வேறு துறைச் சொற்கள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டு குழப்பம் நேரலாம். இதனால் புதிய கருத்தாக்கங்கள் மக்களுக்குப் போய்ச்சேருவதில் தடங்கல் உண்டாகும். அறிவியல்பூர்வமான புத்தகங்களை, கட்டுரைகளை எழுதுவதில் சிரமம் ஏற்படும். அரசு இதில் சிரத்தை காண்பிக்காவிட்டால் மொழி சரியாக உருவாகாது. அதுதான் தமிழில் இத்துறையின் இன்றைய நிலை. சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடலோ, இயக்கமோ இங்கு வளராததற்கு மொழி ஆயத்தப்படுத்தப்படாதது ஒரு காரணம் என்பது என் கணிப்பு.” - என்று 2009-ல் “சுற்றுச்சூழல் பற்றி தமிழ் நூல்கள்” என்ற கட்டுரையில் சு.தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டிருந்தார்.
ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. மாற்றத்துக்கான முதல் படி தொடங்கிவிட்டதாகவே நினைக்கிறேன். தமிழைப் போன்று சூழலியல் அக்கறையை ரத்த ஓட்டமாகக் கொண்டுள்ள ஒரு மொழி, 21ஆம் நூற்றாண்டில் அறிவியலை, சுற்றுச்சூழலை பேசத் திணறி வருவது காலத்தின் கொடுமை. ஆனால், நம்மைப் போன்ற தொன்மையும், வளமும் நிரம்பிய ஒரு மொழியை, தேவைப்பட்ட இடங்களில் நேர்ப்படுத்தினால், நாளை இந்த சமூகத்தின் மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுக்கப்போகிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி, இந்த மக்களின் மொழியிலேயே பேச முடியும். அது தீர்வை நோக்கி வேகமாக நகர்வதற்கான வாய்ப்பை, நம் மக்களுக்கு உருவாக்கித் தரும் என்பதில் சந்தேகமில்லை.
பசுமை நூல்களின் சங்கமம்
சமீபகாலமாக சுற்றுச்சூழல் புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் வர ஆரம்பித்துள்ளன. இதை உற்சாகப்படுத்தும் வகையில், இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் வெளியான 20 சுற்றுச்சூழல் நூல்கள் குறித்த மதிப்புரைக் கூட்டம் சென்னை இக்சா மையத்தில் “பசுமை சந்திப்பு” என்ற பெயரில் மே 4ம் தேதி, சனிக்கிழமை நடைபெற்றது. மூத்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன், பூவுலகின் நண்பர்கள் முல்லை சுந்தரராஜன், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன், பேராசிரியர்கள் த.முருகவேள், எஸ்.ஜெயகுமார், கவிஞர்கள் ஆசை, நக்கீரன், கோவை சதாசிவம், காட்டுயிர் ஓளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம், சதீஸ் முத்து கோபால் உள்ளிட்ட தமிழின் முக்கிய சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள், நூல்களைப் பற்றி பேசினர். தடாகம் பதிப்பகம் - பனுவல்.காம், க்ரியா பதிப்பகம், Nature Conservation Foundation, பூவுலகின் நண்பர்கள், பல்லுயிரிய பாதுகாப்பு நிறுவனம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், பதிப்பகங்கள் இணைந்து இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட புத்தகங்களின் முக்கியத்துவம்:
ப.ஜெகநாதன், ஆசை எழுதி க்ரியா பதிப்பகம் வெளியிட்ட “பறவைகள்” என்ற நூல், உயிரின வழிகாட்டி கையேடு என்ற புதிய துறைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பறவை அவதானிப்புக்கு உத்வேகம் தரும் நூல் இது. ச.முகமது அலி எழுதி, தடாகம் பதிப்பகம் வெளியிட்ட “அதோ அந்த பறவை போல”, பறவையியல் குறித்த முதல் தமிழ் நூல். அதிவிரைவாக அழிந்து வருவதாக சுட்டப்படும் சிட்டுக்குருவிகள் பற்றி ஆதி வள்ளியப்பன் எழுதி தடாகம் பதிப்பகம் வெளியிட்ட “சிட்டு”, குருவிகள் அழிந்து வருவதற்கான உண்மையான காரணங்களை பட்டியல் இடுகிறது. இந்த மூன்று நூல்களும் தமிழ்ப் பறவையியலுக்கு முக்கிய வரவு.
வசந்தகுமாரனின் மொழிபெயர்ப்பில், விடியல் பதிப்பகம் வெளியிட்ட புகழ்பெற்ற மார்க்சிய சூழலியல் அறிஞர் ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் “மார்க்சியமும் சூழலியலும்”, போப்புவின் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடாக வந்துள்ள ராமச்சந்திர குஹா எழுதிய “நுகர்வெனும் பெரும் பசி”, டாக்டர் எஸ்.ஜீவானந்தத்தின் மொழிபெயர்ப்பில், புகழ்பெற்ற ஜப்பான் இயற்கை வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகாவின் “இயற்கைக்குக் திரும்பும் பாதை” ஆகியவை குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள்.
பரிணாமவியலின் தந்தை டார்வினின் முதல் புத்தகமான “பீகிள் கடற் பயணம்”, பேராசிரியர் அப்துல் ரஹ்மானின் மொழிபெயர்ப்பில் அகல் வெளியீடாக முழுமையாக வெளி வந்துள்ளது. அதேபோல, சுற்றுச்சூழல் சேவைக்காக முதன்முதலில் நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற வங்காரி மத்தாய் பற்றி, பூவுலகின் நண்பர்கள் கொண்டு வந்துள்ள “மாற்றத்துக்கான பெண்கள்: வங்காரி மத்தாய்” என்ற தொகுப்பு, பெண்ணிய சூழலியலை பேசுகிறது.
நமது மண்ணின் மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரமாக இருக்கும் சூழலியல் சிதைக்கப்படுவது பற்றி இரண்டு புத்தகங்கள் பேசுகின்றன: மீனவர்களின் துயரத்தை கூறும் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதியுள்ள “அந்நியப்படும் கடல்” (கீழைக்காற்று வெளியீடு), மத்திய இந்தியாவின் கனிம வளம், இயற்கை வளம் சூறையாடப்படுவதால், பழங்குடிகளின் வாழ்க்கைக்கு நேர்ந்த அவலம் குறித்து ஜனகப்ரியா எழுதிய “உலரா கண்ணீர்” (புலம் வெளியீடு). இவை தவிர மறுபதிப்புகள் உள்ளிட்ட மேலும் 10 புத்தகங்கள் பற்றி பேசப்பட்டது.
பிழைபடு பொருள்கள்:
நீர்வீழ்ச்சி (Waterfalls) - அருவி
எறும்புத்தின்னி (Anteater) - அலங்கு
கடல்பசு (Dugong) - ஆவுளியா
சதுப்புநிலம் (Wetland) - கழுவேலி
டால்பின் (Dolphin) - ஓங்கில்
மாங்குரோவ் காடு (Mangrove Forest) - அலையாத்தி காடு
வனவிலங்கு (Wildlife) - காட்டுயிர்
மிருகம், விலங்கு (Animal) - உயிரினம்
உயிர் பன்மயம் / பல்லுயிர் பெருக்கம் (BioDiversity) - பல்லுயிரியம்
பறவை பார்த்தல் (Bird Watching) - பறவை அவதானிப்பு
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago