பறவை நோக்குபவர்களைப் பல வகையாகப் பிரிக்கலாம். சிலர் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திவிடுவார்கள். சிலர் அவற்றைப் பட்டியலிட்டு அவற்றின் பண்புகள், வாழிடத்தின் நிலை போன்றவற்றை விவரமாகக் குறிபெடுத்துக் கொள்வார்கள். சிலர் அவற்றைப் படமெடுப்பார்கள். இன்னும் சிலர் ட்விச்சர்ஸாக இருப்பார்கள்.
அதாவது, இதுவரை அவர்கள் வாழ்நாளில் எத்தனை வகையான பறவைகளைப் பார்த்திருக்கிறோம் என்பதைக் குறித்து வைத்துக்கொண்டு, அந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவே, தாம் இதுவரை பார்க்காத பறவைகளைக் குறிவைத்து அரிய பறவைகளைப் பார்க்க நெடுந்தூரம் செல்வார்கள். சற்றே அதீத ஆர்வமுள்ள இது போன்ற பறவை ஆர்வலர்களைத்தான் ஆங்கிலத்தில் ‘ட்விச்சர்ஸ்’ (Twitchers) என்கிறோம்.
பறவை ஆர்வலர்கள் மத்தியில் இந்த ட்விச்சர்ஸுக்கு அதிக மதிப்பு இருக்காது. சில ட்விச்சர்ஸ் அவர்கள் பார்க்க நினைத்த பறவையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்பதற்காகப் பொறுப்பற்ற பல குறுக்குவழிகளைக் கடைப்பிடிப்பதுதான் இதற்குக் காரணம். எனினும், பொறுப்புள்ள ட்விச்சர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நான் பெரும்பாலும் பறவைகளை அவதானிப்பவனாகவும், போகும் இடங்களில் எல்லாம் பறவைகளைப் பார்த்துப் பட்டியலிடுபவனாகவும், எப்போதும் பறவைகளின் காதலனாகவுமே இருப்பவன். ஆனால், நானும் சில நேரம், பொறுப்பான வழியில் ட்விச்சிங் (Twitching) செய்வதுண்டு.
காணக் கிடைத்த கடல் பறவை
அண்மையில் நான் செய்த ட்விச்சிங் ஆங்கிலத்தில் Lesser Noddy (லெஸ்ஸர் நாடி) என அழைக்கப்படும் சாம்பல்தலை ஆலாவைப் பார்க்கச் சென்றதுதான். பழவேற்காடு ஏரிப் பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதக் கடைசியில் சென்னையைச் சேர்ந்த ‘தி நேச்சர் ட்ரஸ்ட்’ அமைப்பின் பறவை ஆர்வலர்களால் இந்தப் பறவை பார்க்கப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டது. அது முதல் பலர் அங்கே படையெடுத்து அந்தப் பறவையைக் கண்டு களித்தனர்.
இது ஒரு கடல் பறவை. நிலப் பகுதிகளுக்கு வெகு அரிதாகவே வரும். ஆனால், இந்தப் பறவையோ மாதக்கணக்கில் அங்கேயே இருந்தது. ஆகவே, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு அதிவிரைவுப் பயணம் மேற்கொள்வதென முடிவு செய்தேன்.
கடலுக்குள் படகில் சென்று கடல் பறவைகளைப் (Pelagic birds) பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை. பழவேற்காடு ஏரி என அழைக்கப்பட்டாலும் அது ஒரு கடற்கரைக் காயல் பகுதிதான். பார்க்கப் போவதும் ஒரு கடல் பறவைதான். எனவே, இதையே எனது கடல் பறவைப் பயணமாக நினைத்துக்கொண்டேன்.
காயல் பகுதியில் ஆங்காங்கே இருக்கும் மணல் திட்டுக்களில்தான் ஆலாக்களும் பல விதக் கடலோரப் பறவைகளும் அமர்ந்திருக்கும். போகும் வழியெல்லாம் இந்தப் பறவை தென்படுமா நமக்கு நல்வாய்ப்பு இல்லாமல் போய்விடுமா என ஒரு விதக் கலக்கத்துடனேயே பயணம் செய்தேன்.
சற்றுத் தொலைவு சென்றவுடன் தூரத்தில் ஒரு மணல் திட்டு தெரிந்தது. இருநோக்கியை வைத்து அந்த இடத்தைக் கண்களால் துழாவியபோது சாக்லேட் நிறத்தில் ஒரு பறவை, திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டு ‘லெஸ்ஸர் நாடி’ என உரக்கக் கத்திவிட்டேன். அந்தக் கணத்திலிருந்து அனைவரின் கவனமும் எதிரே இருந்த அந்தச் சாம்பல் தலை ஆலாவின் மீதுதான் இருந்தது.
மூழ்காமல் பிடித்த இரை
வெகுநேரம் தனது உளி போன்ற கூரான கரிய அலகால் உடலைக் கோதிக் கொண்டிருந்தது. அந்தத் திட்டின் அருகில் இருந்த வெள்ளை நிற ஆலாக்கள் சில, பழுப்பு நிறத்தில் இருந்த இந்த ஆலாவைத் துரத்துவதுபோல அருகில் பறந்து வந்தன. அப்போதெல்லாம் அவற்றுடன் சண்டைக்கு நிற்காமல் ஒதுங்கிப் போய் அமர்ந்துகொண்டது.
சற்று நேரம் கழித்து, அங்கிருந்து புறப்பட்டு அந்த இடத்தைச் சுற்றிப் பறந்தது. ஓரிடத்தில் இறக்கைகளை ‘படபட’வென அடித்து நீரின் மேற்பரப்பில், அலகால் எதையோ பிடித்தது. தூரமாக இருந்ததால் என்னவென்று தெரியவில்லை. சிறிய மீனாகத்தான் இருக்க வேண்டும். இரையைப் பிடித்தவுடன் அங்கேயே விழுங்கி மீண்டும் தனது தேடலைத் தொடர்ந்தது.
ஆலா வகைப் பறவையாக இருந்தாலும் நீரில் மூழ்காமலேயே அதன் இரைதேடும் விதத்தில் மாறுபட்டே இருந்தது. ஆசை தீரப் பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். சற்றுத் தொலைவு சென்றபின் இன்னும் ஒரு சாம்பல்தலை ஆலாவையும் கண்டோம்.
அறியப்படாத ‘ஆலா’ ரகசியம்
திரும்பி வரும் வழியில் கடல் பறவையான இந்த நாடி (Noddy) எதற்காக இங்கே வந்திருக்கும் என யோசித்துக்கொண்டே வந்தேன். இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் இவை அருகில் உள்ள கடலோரப் பகுதிகளுக்குச் சென்று வருவது இயல்பே. எனினும், இந்த ஆலாக்கள் தமிழ்நாட்டுக் கடலோரங்களில் மாதக்கணக்கில் இருப்பதென்பது இதுவரை அறியப்படாத ஒன்று.
நான் கண்ட இரண்டு பறவைகளுமே முதிர்ந்தவையைப் போல் தோற்றம் அளித்தாலும், அவற்றின் சிறகுகள் அனைத்தும் முழுமையாகச் சிறந்த நிலையில் இல்லை. ஒன்றுக்கு இறக்கையில் சில சிறகுகளும், இன்னொன்றுக்கு வால் சிறகுகள் நைந்துபோனது போலவும் இருந்தது. பல நாட்கள், பல மைல் தூரம் பறப்பதால் இப்படி ஆகியிருக்கும். இந்த ஆலாக்கள் புதிய சிறகுகள் முளைத்த பின் உறுதியான இறக்கைகளுடன் இங்கிருந்து பறந்து செல்லக்கூடும்.
எது எப்படியோ, இந்தச் சாம்பல் தலை ஆலாவை நாடிச் சென்ற காரணத்தால்தான் கடலில் படகில் சென்று பலவிதப் பறவைகளைக் கண்டுகளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த அழகான ஆலாக்கள் பலரது வாழ்நாள் பட்டியலில் (life list) மட்டுமல்ல; மனத்திலும் இடம்பிடித்திருக்கும் என்பது நிச்சயம்!
கட்டுரையாளர், பறவையியலாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago