புதிய பறவை 04: இருவாச்சியின் இல்லம் கண்டேன்

By டாக்டர் வி.விக்ரம்குமார்

மரங்கள் அடர்ந்த மலைப்பாதை ஒன்றில், இலைகளின் கூட்டம் வெளியிட்ட வாசத்தை முகர்ந்தபடியே நகர்ந்துகொண்டிருந்தேன். இறகுகள் படபடக்கும் ஓசை கேட்க, தன்னிச்சையாகத் தலை நிமிர்ந்தது. கண்கள் நோக்கிய கோணத்தில் இரண்டு மலபார் சாம்பல் இருவாச்சிகள் (Malabar gray hornbill) அமர்ந்திருந்தன. இரண்டும் அங்கிருந்த மரம் ஒன்றின் பின்பகுதிக்குப் போவதும் வருவதுமாக இருந்தன. அப்படி அங்கு என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்குள் எழுந்தது.

சாலையை ஒட்டிய செம்மண் மேட்டில் ஏறினால் இருவாச்சி சென்று திரும்பும் மரத்தின் பின்பகுதியைத் தெளிவாகப் பார்த்துவிடலாம். அந்த மேட்டில் படர்ந்திருந்த கனத்த வேர்களைக் கைப்பிடியாகத் துணைக்கொண்டு ஏறிவிட்டேன். மரத்தின் பின்பகுதியைப் பார்வையிட்ட எனக்குப் பெருமகிழ்ச்சி. நீளவாக்கிலான குறுகிய மரப்பொந்து ஒன்று அந்த மரத்தில் தென்பட்டது. அந்த மரப்பொந்தை நோக்கி ஒரு இருவாச்சி தன் பெரிய அலகை நுழைப்பதும் பின் பக்கவாட்டில் எட்டிப் பார்ப்பதுமாக இருந்தது. மற்றொரு இருவாச்சி எங்கு சென்றது எனத் தெரியவில்லை.

பறவையின் சாம்பல் நிறம், மரப்பட்டைகளுக்கு ஈடுகொடுத்தது. நீண்டிருந்த அதன் கறுப்பு வெள்ளை வால் பகுதி… கம்பளி போர்த்தியது போன்ற அடிவயிறு… பின்பகுதியில் படிந்திருந்த லவங்கப்பட்டை நிறம்… எல்லாமே கண்களுக்கு விருந்தாக இருந்தன!

திரும்பவில்லை

இருவாச்சிப் பறவையின் காதலைப் பற்றியும் கூட்டில் வாழும் தன் இணைக்கு அது உணவூட்டும் அழகைப் பற்றியும் கேள்விப்படாத பறவை நோக்குபவர்கள் இருக்க முடியாது. அந்த கூட்டுக்குள்ளே ஏதேனும் இணைப் பறவை அல்லது குஞ்சுகள் தென்படுகின்றனவா… அன்புமொழிகள் பகிரப்படுகின்றனவா என்று கூர்ந்து கவனித்தேன். எனது கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. இருந்தாலும் மலபார் இருவாச்சியை அதன் இல்லத்திலேயே சந்தித்ததில் மகிழ்ச்சி!

சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட மலபார் இருவாச்சி, ஒரு மரத்தின் செந்நிறப் பழங்களைத் தேடித் தேடி சுவைக்கத் தொடங்கியது. பழங்களை அதன் அலகில் வைத்து உருட்டுவது, பின் உள்ளே தள்ளுவது எனத் தனது காலை உணவை அனுபவித்துச் சுவைத்துக்கொண்டிருந்தது.

அது இருந்த மரக்கவிகைக்குள் எங்கிருந்தோ நுழைந்த மலபார் அணிலைக் கண்டதும், மெதுவாக நகர்ந்த மலபார் இருவாச்சி வேறு மரம் நோக்கிப் பறந்து நகர்ந்தது. அடுத்த அரை மணி நேரம் அதன் இல்லத்துக்கு அருகிலேயே கால்கடுக்கக் காத்திருந்தேன். ஆனால், இருவாச்சி திரும்பவில்லை!

- கட்டுரையாளர், சித்த மருத்துவர், இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்