வானகமே இளவெயிலே மரச்செறிவே 29: எங்கள் பறவை

By சு.தியடோர் பாஸ்கரன்

ஐம்பது ஆண்டுகளுக்குமுன், எங்கள் திருமண வரவேற்பின்போது அன்பரொருவர்  அளித்த  பரிசு  கொடைக்கானலில் அவருடைய  பங்களாவில் பத்து நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடு. 

முன்னதாக சாதாரண விடுதியில் ஐந்து நாட்களுக்கு முன்பதிவு செய்திருந்த எங்களுக்கு அது பெரும் மகிழ்ச்சி அளித்தது. நுழைவாயிலில் ‘ஹில் டாப்’  என்று பெயர் செதுக்கப்பட்டிருந்த   அந்த பங்களாவில் நுழைந்தபோது  வெள்ளைச் சீருடையணிந்த பட்லர் அன்புடன் வரவேற்றார்.

எங்கள் அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில்  மனதை ஈர்க்கும்  பறவையின் குரலொன்று கேட்டது. ‘பிக்கோ...கோ…பிக்கோ…கோ ‘ என. அதைத் தேடிப் போனோம். பங்களா தோட்டத்திலேயே ஒரு புதருக்கடியில்  தரையைக் கீறிக்கொண்டிருந்தன,  நாங்கள் அதற்குமுன் பார்த்திராத மூன்று பறவைகள்.  மைனா அளவிலான  அது  Palni Laughing Thrush (Garrulax delesserti) பறவை என்றும்,  இந்தப் பகுதியில் மட்டுமே வாழும் ஓரிடவாழ்வி (endemic) என்றும் கையேட்டைப் பார்த்துத் தெரிந்துகொண்டோம்.

அந்தப் பறவைக்கு உள்ளூர்  மக்களிடையே எந்தப் பெயரும் புழக்கத்தில் இல்லை. க.ரத்னம் தனது நூலில் இதை ‘பழனிச் சிரிப்பான்’ என்றே குறிப்பிடுகிறார். (பட்சிகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டும்போது ஏன் பொதுவாக ஆண் பால் பெயரே சூட்டப்படுகிறது, யோசிக்க வேண்டிய கேள்வி).

நாங்கள் அந்த ஊரில் சுற்றித் திரிந்த பத்து நாட்களில் எங்கே சென்றாலும்  இந்தப் பறவையின் ஒலி கேட்டுக்கொண்டேயிருந்தது. எங்கள் தேனிலவின் பின்னணி  இசை  மாதிரி இந்த ஒலி எங்கள் நினைவில் உறைந்துவிட்டது.

கொடைக்கானலான கொடிக்கானல்

மேற்கு மலைத் தொடர் பிரதேசத்தின் நடுவில் மழைக்காடுகளும், புல்வெளிகளும்,  பள்ளத்தாக்குகளும், அருவிகளும் சூழ்ந்திருக்கும் இடத்தில் கொடைக்கானல் அமைந்துள்ளது.

தொல் பழங்காலத்திலிருந்தே இங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக  இங்கு கல்திட்டை, குத்துக்கல் போன்ற  பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன.  இன்றும் புலையர், பளியர் போன்ற பழங்குடிகள் சிறு கிராமங்களில் வாழ்கிறார்கள்.

இங்கு வாழ்ந்திருந்த தமிழறிஞர் ஜோதிமுத்துவின் கருத்தில்  இந்த ஊரின்  சரியான பெயர் கொடிக்கானல். இங்குள்ள சோலைகளிலுள்ள ராட்சத வன்கொடிகளைப் (Liana) பார்த்தீர்களானால் பெயர்ப்பொருத்தம் புரியும் - கொடிகள் நிறைந்த  காடு.  

மதிகெட்டான்சோலையைப் போன்று ஒவ்வொரு சோலைக்கும் ஒரு பெயர் உண்டு.  அருகிலேயே பிரம்புக்கானல், வட்டக்கானல் என்ற  பெயர்களைக் கொண்ட கிராமங்களும்  உண்டு.

பல்லுயிர் வளத்தில் உலகின்  பத்தொன்பது முதன்மைப் பகுதிகளில் நம்முடைய மேற்கு மலைத் தொடரும் ஒன்று என அடிக்கடி வாசிக்கிறோம். இங்கு மலரும் குறிஞ்சி மலர் இப்பகுதியின்  தாவர செழுமைக்கு ஒரு குறியீடு என்றால், காட்டுயிர் வளத்துக்கு பழனிச் சிரிப்பான் பறவை ஒரு சின்னம். 

இங்குள்ள சோலை என்றறியப்படும் மழைக்காடுகள் (ஆங்கிலத்தில்  Shola) பல்லுயிரியத்தின் உறைவிடம் எனலாம்.  பல்லூழிக் காலமாக  வளர்ந்து செழுத்திருக்கும்   இம்மழைக்காடுகள்  எண்ணற்ற  உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றன. 

இன்றும் புதுப்புது   சிற்றுயிர்கள்  இந்தச் சோலைக்காடுகளில் கண்டறியப்படுகின்றன. பல நீரூற்றுகள் உற்பத்தியாகும் இடமும் இதுதான். தமிழக நதிகள்  எல்லாவற்றின் தோற்றமுமே மழைக்காடுகளில்தானே இருக்கிறது.

ஆங்கிலேயர் பதித்த கால்

ஆங்கிலேயர் காலத்தில்,  மதுரையிலிருந்து ஆங்கிலேய அதிகாரிகளும், யேசு சபை மறையாளர்களும் மலையில் ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது,   1817-ல்  லெப்டினண்ட் பி.எஸ். வார்ட் என்பவர் இப்பிரதேசத்தில் பயணித்தார்.

வில்பட்டு கிராமத்தையடுத்த இடம் தோதாகப்பட்டதால், அங்கு சில வீடுகள் கட்டப்பட்டன.  இந்த இடத்துக்கு மதராஸ் கவர்னர் டிரவெலியன் 1860-ல் வந்ததும்,  மதுரைக்கு 1875-ல் ரயில்பாதை பாவப்பட்டதும் கொடைக்கானலின் வளர்ச்சிக்கு உந்துதல் கொடுத்தன. 1889-ல் நகராட்சி ஆனது. 

மதுரை ஆட்சியராகப் பணியாற்றிய வி.எச்.லெனிங்கேவுக்கு இந்த ஊர் மிகவும் பிடித்துவிட்டது.  இவர்தான் இங்குள்ள பிரசித்தி பெற்ற ‘ஐந்து விரல்'  ஏரியை, ஒரு நீரோடையைத் தடுத்து  உருவாக்கியவர். ஒய்வு பெற்றபின் இங்கேயே அவர் தங்கிவிட்டார் .

இவர் வசித்த ‘பாம்பாறு ஹவுஸ்’ எனும் வீடு இன்றும் அதே பெயருடன் இருக்கிறது.  ராணுவ அதிகாரி  கோக்கர்,  ஊரின் தெற்குப்புற மலையின் ஓரத்தில் ஒரு சாலை அமைத்தார். கோக்கர்ஸ் வாக் (Coalker’s Walk) என்று அறியப்படும் இந்த இடத்திலிருந்து சமவெளியின் அழகிய தோற்றம் தெரியும்.  பனி மூட்டமற்ற ஒருவைகறையில்  இந்தச்  சாலையிலிருந்து   மதுரை அழகர்கோயில் கோபுரத்தை  இருநோக்கி மூலம்  நான் பார்த்திருக்கிறேன்.

சீரழித்த சுற்றுலா

பல்வேறு  மாநிலங்களில் பணிபுரிந்துவிட்டு, முப்பது ஆண்டுகள் கழித்துத் தமிழகம் வந்தபின், வாய்ப்பு கிடைத்தவுடன் ஒரு முறை கொடைக்கானல் சென்றிருந்தோம்.  சுற்றுலா என்ற பெயரில் ஊரை நாற அடித்திருந்தார்கள். 

எழிலார்ந்த ஏரியைச் சுற்றி ஒரு குட்டி ரயில் ஓடிக்கொண்டிருந்தது. (நீண்ட வழக்கு ஒன்றுக்குப்பின் அது நிறுத்தப்பட்டது  ஒரு நல்ல செய்தி). நாங்கள் தங்கியிருந்த பங்களாவை புட்டபர்த்தி சாய்பாபாவின் நிறுவனம் வாங்கியிருந்தது. வெளியேயிருந்துதான் பார்த்தோம்.

காட்டுயிர் பாதுகாப்பு மேம்பட்டால்  கொடைக்கானலில் காட்டெருதுகளையும் மான்களையும் எளிதாகக் காண முடிகிறது. பேரிஜம் ஏரிக்கு வாகனங்கள் போவது தடுக்கப்பட்டிருப்பதால், காட்டுயிர் நடமாட்டம் அங்கு அதிகரித்துள்ளது.  கருமந்தியின் முரசொலி போன்ற ஒலியைக் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரி காட்டுப்புறாவைக் காண முடிந்தது.

பழனிச் சிரிப்பான்கள் எங்கே?

ஆனால், எங்கள் பறவையின் ஒலியை எங்குமே கேட்க முடியவில்லை.  எண்ணிக்கையில் மிகவும் குறைந்துவிட்டாலும் அவை இங்கு இருக்கத்தான் செய்கின்றன என்றார் நண்பர் இயான் லாக்வுட் (Ian Lockwood).  கொடைக்கானலிலே பிறந்து வளர்ந்த இவர், இப்பிரதேசத்தைச் சுற்றி பிரசித்தி பெற்ற  பல ஒளிப்படங்களை எடுத்துள்ளார்.

ஊரைவிட்டுப் புறப்படும்முன் ‘ஹில்  டாப்’ பங்களா பகுதிக்கு மறுபடியும் சென்றோம். ஒரு பெரிய  தோசைக்கல் மாதிரி, ஒரு பள்ளத்தாக்கின் மேல் துருத்திக்கொண்டிருக்கும் பாறை  ஒன்று அங்கே இருக்கிறது. முன்பு தங்கியிருந்தபோது அந்தப் பாறையில் பலமுறை அமர்ந்திருக்கிறோம். கீழே பசுமை மாறாக்காடுகள் கண்முன் விரிகின்றன.

தொடுவானத்தில்  பெரியகுளம் சமவெளி  விசாலமாகத் தெரிகிறது. அங்கு  உட்கார்ந்து,   காட்டின்  அழகில் லயித்திருந்தபோது  வெகு அருகில் தரையைப் பிறாண்டும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால் இரு ‘பழனிச் சிரிப்பான்கள்' இரை தேடிக்கொண்டிருந்தன. அவற்றின் இனிய குரலை இம்முறை கேட்க முடியாவிட்டாலும், எங்கள் பறவைகளைத் திரும்பப் பார்த்த திருப்தியில் ஊர் திரும்பினோம்.

கட்டுரையாளர்,

சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: theodorebaskaran@gmail.comபழனிச் சிரிப்பான் படம்: என்.ஏ. நசீர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்