பிழைப்பின் பொருட்டு நாளும் மரணத்தை எதிர்கொள்பவர்கள் கடலோடிகள். கடல் மரணங்கள், எப்போதும் புதிர்கள்தான். கணிப்புக்கு அப்பாற்பட்ட கடலின் பண்பு, மரணத்தைக் கடல்சார் வாழ்க்கையின் பிரிக்க இயலாத கூறாகப் பிணைத்து நிற்கிறது.
நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். கடலுக்குள் செல்லும் கடலோடி அன்றாடம் மரணத்தின் வாயிலை எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்புகிறான். நள்ளிரவில் கடலுக்குச் செல்லும் மீனவனுக்கு மனைவியோ தாயோ வெற்றிலை, வாய்க்கரிசி கொடுத்து வழியனுப்புகிறாள். அதுவே அவனது இறுதிப் பயணமாகக்கூட அமைந்துவிடலாம். மாலதி மைத்ரி சொல்வதுபோல, கடலோடி, மரணத்தைத் தூக்குச் சட்டிபோலக் கழுத்தில் தொங்கவிட்டபடியே வாழ்கிறான்.
மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால், கடல் மரணங்கள் அவலம் மிகுந்தவை. சடலம் கிடைக்கும் என்னும் உத்தரவாதம்கூட இராது. இருபது, முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகும் கணவனின் மீள்வரவுக்குக் காத்திருக்கும் பெண், மனைவிக்கும் விதவைக்கும் இடையிலான மனப் போராட்டமாகக் கழியும் கடலோரக் காட்சிகள் இவர்களுக்குப் புதிதல்ல. காவல்துறைக் கோப்புகளில் இதுபோன்ற முடிவு தெரியாத வழக்குகள் ஏராளம் தேங்கிக் கிடக்கின்றன.
கடல் மரணத் தொன்மங்கள்
மீனவன் கடலுக்குள் போகும்போது அவன் மனைவி பரிசுத்தமானவளாக இருந்தாக வேண்டும். இல்லாத பட்சத்தில் கடலம்மா அவனை விழுங்கிவிடுவாள் என்பதாகத் தென்னிந்தியக் கடலோரத்தில் ஒரு தொன்ம நம்பிக்கை உண்டு. படகைச் செலுத்தும் தலைச்சன் சுத்தபத்தமாய் இல்லையென்றால் கடலுக்குள் போன படகு பத்திரமாகக் கரை சேராது என்னும் நம்பிக்கை வங்காளக் கடற்கரையில் நிலவுகிறது.
ஆழ்கடலை நோக்கிப் போகும் சடலம், எவர் கண்ணிலும் படாது மறைந்துவிடும். கரை நோக்கி ஓடும் சடலம் மட்டுமே கரையொதுங்கும். சடலங்களின் கரையொதுங்குதலை இரண்டு காரணிகள்தாம் தீர்மானிக்கின்றன. ஒன்று, விபத்து நேரும் கடற்பகுதி. இரண்டு, கடல் நீரோட்டங்களின் போக்கு.
சாவின் வாசல்கள் எத்தனை?
கடல் மரணங்கள் எத்தனை விதமானவை! முத்துக் குளிக்கையில் மூச்சுத் திணறி மரணமடைதல், கடலடிப் பார்களில் (பாறை) சிக்கி நிற்கும் வலையை மீட்டெடுக்க மூழ்குபவன் வலைக்குள் சிக்கி மரித்தல், பின்னிரவில் உடல் சோர்வால் சில கணம் கண்ணயர்ந்து கட்டுமரத்திலிருந்து நழுவி வீழ்ந்து மூழ்கிப் போனவர்கள், நடுக் கடலில் கப்பல் மோதிக் கட்டுமரம் சிதறுண்டு இறந்து போனவர்கள், கடல் சீற்ற காலத்தில் அலையோடு போராடிப் படகைக் கடலுக்குள் செலுத்துகையில் படகில் மோதி மரணத்தைத் தழுவுவோர், நடுக் கடலில் படகு பழுதுபட்டு எட்டுப் பத்து நாட்களாக உணவு, தண்ணீரின்றி உதவிக்கு யாருமின்றித் தவித்து இறந்துபோனோர்… இவை எல்லாவற்றுக்கும் மேலாக அண்டை நாட்டுக் கடற்படையினரின் தோட்டாக்களுக்கு இரையாகி மாள்வோர், கப்பல் காவலர்களால் காரணமின்றிக் கொல்லப்படுவோர்… இப்படி நேர் சாட்சி இல்லாத எத்தனை எத்தனை அவல மரணங்கள்!
ஒவ்வொரு நாளும் புதுப் பிறப்பு
70 ஆண்டுகளுக்கு முன்பு முளகுமூடு கன்னியர் மடத்திலிருந்து கடியப்பட்டினம் கடற்கரைக்கு வந்த ஒரு களியலாட்டப் பாடலை எனது தாயார் நினைவுகூர்ந்தார். சிறு வயதில் பள்ளி விழா மேடையில் அவர் பாடியாடிய இக்களியலாட்டப் பாடல் மரணத்தைப் பற்றியது:
"மரணநதி வேகமாக நடுவில் ஓடுது
மரண சமயம் யாவற்றையும் வாரிக்கொள்ளுது
பணத்தைக் கூட்டிச் சேர்த்ததெல்லாம் பாழாய்ப் போச்சுது
பரத்தைத் தேடிப்போக இப்போ பயணமாச்சுது
நாலுபேர்கை கட்டி நின்ற காலம் போச்சுது இப்போ
யாவரும் சீயென்று வெறுக்கலாச்சுது
பேரும் கீர்த்தி புகழுமெல்லாம் நின்றுபோச்சுது இப்போ
புழுவுக்கிரையாய் மணலைப்போட்டு மூடலாச்சுது
கல்லறைக்குள் வயிறுஊதி வெடிக்கலாச்சுது இப்போ
ஒரு புழுவை ஒரு புழுவு விழுங்கலாச்சுது."
கடல் வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது. சாகசங்களும் சாவுகளும் அங்கு சாதாரணம். வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் ஓடும் ஒரு மெல்லிய இழை; அதன்மேல் கால் பதித்தவாறு கடலோடி நிகழ்த்தும் சாகசங்களின் கதைகள் அனைத்தும் பெருங்கடலின் பேராழத்தில் அடக்கமாகிவிடுகின்றன. இரை தேடிக் கடலோடும் மனிதன், தன் இரைக்கே இரையாகிவிடுவதும் வியப்பல்ல. மீண்டு கரை திரும்பும் ஒவ்வொரு நாளும் கடலோடிக்குப் புதுப் பிறப்புதான்.
கடலில் மாண்டுபோன தன் கணவனை முன்னிட்டு விதவைக் கோலம் பூண்டு நிற்கும் மனைவி. மறுமணம் செய்துகொண்ட மனைவியை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அதிர்ச்சியளிக்கும் கணவன். அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் கடல் வாழ்க்கையின் யதார்த்தங்கள் அதிசயங்களாய் நீடிக்கின்றன!
(அடுத்த வாரம்: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago