இந்தக் காலக் குழந்தைகளிடம், பசு பால் தரும் என்று சொன்னால் சிரிக்கிறார்கள். பாக்கெட்டில் இருந்துதானே பால் கிடைக்கிறது என்று கேட்டு அதிர்ச்சி தருகிறார்கள்.
பால் மட்டுமல்ல அரிசி, பருப்பு எல்லாமே பிளாஸ்டிக் பைகளில் இருந்து கிடைப்பதாகவே இன்றைய நகரத்துக் குழந்தைகள் நினைக்கிறார்கள். பள்ளி சென்று பாடம் படித்த பிறகுதான் தாவர வகைகளைப் பற்றி, அவர்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. அவற்றையும் புத்தகங்களில் வண்ணப் படங்களாகப் பார்ப்பதுடன் இயற்கையுடனான அவர்களுடைய தொடர்பு அறுந்துபோகிறது.
நம் முன்னோரின் வாழ்க்கையோடு கலந்திருந்த பறவைகளையும் விலங்குகளையும் விலங்குக் காட்சி சாலைகளிலும் சரணாலயங்களிலும் மட்டுமே பார்க்கக்கூடிய நிலை உருவாகிவிட்டது.
இத்தனை அழிவையும் வெறும் அரை நூற்றாண்டுகளில் நாம் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த புத்தகங்களைப் படித்தால், எத்தனை எத்தனை பசுங்காடுகளின் மீதும் நீராதாரங்களின் மீதும் இன்றைக்குக் கான்கிரீட் காடுகளை உருவாக்கி, வாகனங்களை ஓட்டி கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது.
ஒரு வனத்தின் கதை
சா. கந்தசாமி எழுதி, 1969-ம் ஆண்டு வெளிவந்த ‘சாயாவனம்’ நாவல், நாம் கடந்து வந்திருக்கிற பாதையை விளக்கும் சிறந்த சாட்சி. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வோ, அதன் தேவையோ இல்லாத அந்தக் காலத்திலேயே சுற்றுச்சூழல் குறித்து நுட்பமாகப் பதிவுசெய்த நாவல் இது.
தன் இளமைப் பருவம் கழிந்த பூம்புகாரையும் அதையொட்டிய சாயாவனத்தையுமே கதைக்கான களமாகத் தேர்வு செய்திருக்கிறார் ஆசிரியர். பொருளாதார மாற்றங்களுக்காக மரங்களடர்ந்த ஒரு வனம் அழிக்கப்பட்டு, கரும்பு ஆலை உருவாவதுதான் கதை. அந்த வனத்தை நிறைத்திருக்கும் மரங்களின் பட்டியல் ஆச்சரியம் தருகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மரங்களில் பலவற்றின் பெயர்கூட, இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத நிலையை என்னவென்று சொல்வது?
செம்போத்தும் ஊவா முள்ளும்
கதையின் ஊடாக நாமும் அந்தச் சாயாவனத்துக்குள் ஒருமுறை சென்று திரும்புவது போன்ற அனுபவம் அலாதியானது. கதையின் நாயகன் சிதம்பரத்துடன் சேர்ந்து நாமும் புளியந்தோப்பின் முகப்பில் நின்றுவிடுகிறோம்.
மடையான் கூட்டமும், கொக்குக் கூட்டமும், செம்போத்தும், பச்சைக் கிளிகளும் நம் தலைக்கு மேலே பறக்கின்றன. குத்துச் செடிகளையும், காரைச் செடிகளையும் தள்ளிக்கொண்டு, நாயுருவி கீற நடக்கிறோம். சிவனாண்டித் தேவர் உலுக்குகிற புளியம் பழங்கள் தலை மீது விழாதிருக்க, நாம் சற்றுத் தள்ளித்தான் நிற்க வேண்டும்.
ஆனால், அந்த வனம் முழுக்கப் புளிய மரங்கள் மட்டுமே நிறைந்திருக்கவில்லை. ஒரு பக்கம் காட்டாமணக்கும், மேட்டுப் பூமியில் புன்னையும் கொய்யாவும் நிறைந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் விண்ணுக்கும் மண்ணுக்கும் சரஞ்சரமாய்ப் பச்சைக்கயிறு பிடித்தாற் போல இலுப்பையையும், பலாவையும் மீறிக்கொண்டு நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஒரு பக்கம் தாழம்புதர், இன்னொரு பக்கம் மாமரக் கூட்டம்.
பச்சை பசுந்தழைகளால் மூடப்பட்ட அந்த வனத்தில், பூவரசு மரத்தை மூடி மறைத்துக்கொண்டு கோவைக் கொடி தாழப் படர்ந்திருக்கிறது. குறிஞ்சாக் கொடி, காட்டுப் பீர்க்கு, பிரண்டை, சப்பாத்திக் கள்ளி, வெள்ளையாகப் பூக்கும் எருக்கம், மேக வண்ணப் பூ பூக்கும் நொச்சி, ஓணான் கொடி, நுணா, ஊவா முள், காஞ்சூரு, ஒதிய மரம், தும்பை, நாணல், ஆடாதோடை, ஈச்ச மரம், கருவேலம், பிரப்பங்காடு, இலந்தை, ஆலமரம் என இன்னும் இன்னும் செடிகளும் கொடிகளும் மரங்களும் அடுக்கடுக்காகப் பின்னியும் தனித்தும் கிடக்கின்றன.
அவற்றைத் திருத்தி (அழித்து என்பதன் மேம்பட்ட வடிவம் போலவே தோன்றுகிறது) ஆலை சமைப்பதுதான் சிதம்பரத்தின் லட்சியம்.
ஜெயித்தது யார்?
மண்ணோடு நிகழ்த்தும் உக்கிரமும் வலிமையும் நிறைந்த போராட்டத்தில் மனிதன் வெற்றி பெறுகிறான். இல்லை, அப்படி வெற்றி பெறுவதாக நினைக்கிறான். வெட்டிய மரங்களையும் மீதியிருக்கும் வனத்தையும் தீயிட்டு அழிக்கிறான். ஆனால், அவனுடைய கணக்கு இயற்கையின் முன் தப்பிப் போகிறது. கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ, அவனது வீட்டையும், அவன் தேவைக்கு என நினைத்திருந்த பிரப்பங்காட்டையும் பொசுக்கிவிட்டுத்தான் சென்றது.
வனத்தோடு முடிந்துவிடவில்லை மனிதனின் பொருளாதாரத் தேடல். வாழ்வாதாரமான நன்செய் பயிரை விடுத்து, பணப்பயிரான கரும்பைப் பயிரிடச் செய்கிறது.
கூலிக்கு நெல்லுக்குப் பதில் பணத்தைத் தருகிறது. பணத்தையா தின்ன முடியும் என்று கேள்வி கேட்கிற குடியானவர்களுக்காகப் புதுப்புது கடைகளைத் திறக்கச் செய்கிறது. பண்ட மாற்று மறைந்து, பணப் புழக்கம் குடியேறுகிறது.
பணம் கொடுத்தால் பொருள் கிடைக்கும் என்பதால் பண்டங்களின் உற்பத்தி எல்லை குறைகிறது. இவை எல்லாமே முன்னேற்றம்தான், வளர்ச்சிதான். ஆனால், காசு கொடுத்தாலும்கூடத் தேர்ந்தெடுத்த புளி கிடைக்கவில்லையே என்ற வருத்தமும் அங்கே நிலவுகிறது.
"நல்ல புளியா அனுப்பறேங்க ஆச்சி" என்று சொல்லும் சிதம்பரத்திடம், "அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே! இன்னமே எங்கேயிருந்து அனுப்பப் போறே?" என்று ஆச்சி கேட்பதோடு கதை முடிகிறது. ஆனால் வளமிக்க, சத்தான இயற்கைப் பொருட்களுக்கான தேடல் தொடர்கதையாகவே நீடிக்கிறது.
மிஞ்சியிருப்பது என்ன?
பல ஆண்டுகளாகப் பலன் தந்து வந்த இயற்கையை ஒரே நாளில் அழித்துவிடலாம். ஆனால், அழிக்கப்பட்ட அந்த இயற்கைச் செல்வங்களை எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் உருவாக்கிவிட முடியுமா?
சரி... இதையெல்லாம் விட்டுவிடுவோம். விருட்சங்களை அழித்து வீடுகள் சமைத்துவிட்டோம். வீட்டைச் சுற்றியிருந்த சின்னச் சின்ன பச்சைக் குழந்தைகளையாவது உயிருடன் விட்டு வைத்திருக்கிறோமா? முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டுக்கு முன்னே வேப்பரம், வெப்பக் கொடுமையைப் போக்கும் மரமாக விளங்கியது.
தென்னை, வாழை, கொய்யா, சப்போட்டா, மாமரம் போன்றவை தெருவுக்கு நான்கைந்து வீடுகளிலாவது இருந்தன. புங்க மரமும், நுணாவும்கூட காணக் கிடைத்தன. இருக்கிற சிறிய இடத்திலும் ஒரு முருங்கைக் கிளையையாவது ஊன்றி வைத்திருப்பார்கள். நெட்டிலிங்க மரங்களும், வேப்ப மரங்களும் நிறைந்திருந்த பள்ளி மைதானங்கள் கிட்டத்தட்ட இப்போது இல்லையென்றே சொல்லிவிடலாம்.
இயற்கையின் அருட்கொடை
மரங்கள் தவிர வீட்டைச் சுற்றிப் பெயர் தெரியாத எத்தனையோ குத்துச்செடிகளும், கொடிகளும் இருக்கும். ஒரு மழை பெய்தால் போதும். வீட்டைச் சுற்றி வளரும் குப்பைக்கீரையைப் பறித்து, மதிய உணவுக்குச் சமைத்துவிடுவார்கள்.
கீழாநெல்லி, மணத்தக்காளி, முடக்கத்தான் என வீட்டைச் சுற்றி ஆரோக்கியம் தரும் செடிகளும் கொடிகளும் சூழ்ந்திருக்கும். காயம்பட்டால் பச்சிலையாகப் பயன்படும் கிணத்துப்பூண்டு (கிணற்றைச் சுற்றி வளர்வதால் அப்படிப் பெயர்) செடியைப் பார்ப்பதே பகல் கனவாக இருக்கிறது. கால் வைக்கும் இடம்தோறும் வளர்ந்திருந்த அருகம்புல்லை இப்போது மூலிகைக் கடைகளில் சாறாகக் குடித்துக் கொண்டிருக்கிறோம்.
சாலையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம் அரசின் விரிவாக்கத் திட்டங்களுக்காக வேரோடு சாய்க்கப்பட்டுவிட்டன. சாலையின் நடுவே அழகுக்காக வளர்க்கப்பட்டு, காய்ந்துகொண்டிருக்கும் செடிகள், அந்த மரங்களுக்கான மாற்றாகிவிடுமா?
இனியொரு விதை நடுவோம்
நம் வசதிக்காகவும், தேவைக்காகவும் இயற்கையை அழித்துவிட்டோம். வானம் பொய்த்துவிட்டது, மழையில்லை என்று மீண்டும் அந்த இயற்கையையே குறைசொல்கிறோம். ரசாயனங்களும், வேதி பொருட்களும் நிறைந்திருக்கும் இந்தப் பூமி இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் மிச்சமிருக்கும் பச்சைப் பசுமையும் அவற்றில் தப்பிப் பிழைத்திருக்கும் உயிரினங்களும்தான்.
உங்கள் வீட்டுக்கு வெளியே வந்து பாருங்கள், சுற்றியிருக்கும் செடிகளையும் மரங்களையும் பட்டியலிடுங்கள். அவை பத்துக்கும் மேல் இருந்தால் நீங்கள் இயற்கைப் பாதுகாப்புக்குப் பங்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால்? இனிமேல் பங்களிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
இனிக் கட்டிடங்களை இடித்துவிட்டு மரக்கன்றுகள் நடமுடியாது. அதனால் இருக்கிற இடத்தையாவது முறைப்படி பயன்படுத்திப் பசுமையை வளர்ப்போம். முழுக்க முழுக்கக் கான்கிரீட் தரையால் சூழப்பட்ட பூமியில் வாழ்கிறவர்கள், குறைந்தபட்சம் தொட்டிகளிலாவது செடிகளை வளர்க்கலாம். பெரிய தொட்டிகளில் மரங்களும் வளர்க்கலாம். அப்போதுதான் வரும் தலைமுறையினர் தெரிந்துகொள்ளச் சிலவகை தாவரங்களாவது பிழைத்திருக்கும்.
இயற்கையின் சுவாசத்தைச் சீராக்கும் அற்புதம் நம் கைகளில்தான் இருக்கிறது. அதை இன்றே செயல்படுத்துவோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago