சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு என்ற வாக்கு பசுமாட்டின் பெருமையைப் பறைசாற்றும். இது முற்றிலும் உண்மை. பசு மாடு பால் மட்டும் தருவதில்லை. அதன் சாணம், கோமயம் என அனைத்துமே மனிதர்களுக்கும் விவசாயத்துக்கும் பயன்படக்கூடிய அரிய பொருட்கள்.
வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட கலப்பின மாடுகள் தரும் பாலைத்தான் தற்போது அருந்தி வருகிறோம். இது ஏ1 வகையைச் சேர்ந்தது. ஆனால் தர்பார்கர், கிர், சாகிவால், ஓங்கோல், கான்கரேஜ், காங்கேயம், உம்பளச்சேரி உள்ளிட்ட நம் நாட்டு மாடுகள் தரும் பால் ஏ2 வகையைச் சேர்ந்தது. இந்த வகைப் பாலில்தான் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நல்ல சத்துகள் இருக்கின்றன.
மனிதனுக்கு மட்டுமன்றி நாட்டுப் பசுவின் சாணத்தை எருவாக மண்ணில் இடும்போது அது மண்வளத்தை மேம்படுத்தி, உயிர்ச்சூழலை உயிர்ப்போடு காக்கும் என்பது இயற்கை வேளாண் வல்லுநர்களின் கருத்து. நாட்டு இன மாடுகளின் சாணம், கோமயம், பால், தயிர், நெய் போன்றவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பயிர்களுக்கு மிகப் பெரிய ஊக்கியாகச் செயல்படுகிறது.
நாட்டு மாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவற்றைத் தேடிப் பிடித்து ‘தாயுமானவர் கோ சாலை’ என்ற பெயரில் திருச்சி கல்கண்டார்கோட்டையில் மாட்டுப் பண்ணையை உருவாக்கியுள்ளார் எஸ். கணேஷ்குமார்.
ஆரோக்கியமான பாலை அருந்துவதற்காகச் சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரே ஒரு நாட்டு மாட்டை வாங்கியுள்ளார் கணேஷ்குமார். பிறகு அதன்பால் ஈர்க்கப்பட்டுத் தேடிச் சென்று நாட்டு மாடுகளை வாங்கியுள்ளார். ஒரு மாட்டில் தொடங்கி 2 ஆண்டுகளில் 45 மாடுகளுக்கு அவர் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக நியூசிலாந்து சென்றிருந்தபோது, மாட்டுப் பண்ணை ஒன்றைச் சென்று பார்த்தேன். அங்கு நம் நாட்டிலிருந்து எந்தெந்தக் காலத்தில் என்னென்ன மாட்டு இனங்களை அங்கே கொண்டு வந்தார்கள் என்பதை ஒளிப்படத்துடன் காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும், பண்ணையிலும் அவற்றை மிக நேர்த்தியுடன் வளர்த்து வருவதைப் பார்த்தவுடன்தான் நாமும் ஏன் நாட்டு மாடு ஒன்றை வளர்க்கக் கூடாது எனத் தோன்றியது” எனத் தான் பண்ணை வைக்க ஊக்கியாக இருந்த சம்பவத்தை விவரிக்கிறார் கணேஷ்குமார்.
நாடு திரும்பியவுடன், அதற்கான தேடலில் கணேஷ்குமார் ஈடுபட்டுள்ளார். முதன் முதலில் சிந்து இனத்தைச் சேர்ந்த பசுவை வாங்கி வளர்த்துள்ளார். அது தினமும் 10 லிட்டர் பால் தந்திருக்கிறது. வீட்டுத் தேவைக்குப் போக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பாலும் மோரும் வழங்கியிருக்கிறார்கள். நிறுவன விடுமுறை நாட்களில் நண்பர்களின் வீடுகளுக்கும் பால் வழங்கியுள்ளார். அப்போதுதான் அதன் சுவையையும் நன்மைகளையும் பார்த்துவிட்டு “தினமும் எங்களுக்கு நாட்டு மாட்டின் பாலைக் கொடுக்க முடியுமா?” என அவர்கள் கேட்டனர்.
அதன் பிறகு நாட்டு மாடுகள் குறித்து அதிகமாக அறிந்துகொள்ள ஹரியாணா மாநிலம் கர்னாலில் உள்ள கால்நடை மரபணு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் தேசிய விலங்குகள் மரபணு வள மையத்துக்குச் சென்றுள்ளார். அவர்களின் அறிவுரையின்பேரில் ஒரு மாதத்துக்கு மேலாகச் சுற்றி நாட்டு மாடுகளை வாங்கியுள்ளார் கணேஷ்குமார்.
தற்போது கணேஷ்குமார் பண்ணையில், ராஜஸ்தானிலிருந்து தர்பார்கர், குஜராத்திலிருந்து கிர், கான்கரேஜ், பஞ்சாபிலிருந்து சாகிவால், ஆந்திராவிலிருந்து ஓங்கோல், தமிழக இனமான காங்கேயம், உம்பளச்சேரி என மொத்தம் 30 பசு மாடுகளும், சாகிவால் இனத்தைச் சேர்ந்த இரு காளைகளும் உள்ளன. இங்கு பிறந்த 15 கன்றுகளும் உள்ளன.
மாடுகளுக்குத் தினந்தோறும், வைக்கோல், கோ-5 புல், வேலி மசால், நெல் தவிடு, புண்ணாக்கு, சோளமாவு உள்ளிட்ட உணவு வகையைத் தீவனமாக அளித்துவருகிறார் கணேஷ்குமார். தினந்தோறும் மாடுகளைக் குளிப்பாட்டி, பண்ணையில் உள்ள காலியிடத்தில் உலாவ விடுகிறார்கள். மாடுகளுக்கு இதமான காற்று கிடைப்பதற்காக மின்விசிறியும் உண்டு. மாடுகளுக்கு நல் இசையை ஒலிபெருக்கி மூலம் அளித்துவருகிறார் இவர்.
நாட்டு மாட்டின் ஏ2 பால் பண்ணையில் வந்து வாங்குபவர்களுக்கு லிட்டர் ரூ.60-க்கும், வீடுகளில் கொண்டு சென்று கொடுத்தால் ரூ.70-க்கும் விற்பனை செய்து வருகிறார் கணேஷ்குமார்.
நாட்டு மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். கொட்டகையைத் தூய்மையாகப் பராமரித்தாலே எந்த நோயும் இந்த மாடுகளை தாக்காது. இயற்கை முறையிலேயே மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்துவருகிறார்.
“தற்போது நாங்கள் பாலிலிருந்து வெண்ணெய் எடுத்து நெய் தயாரித்து விற்பனை செய்கிறோம். நாட்டு மாட்டுப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் நெய் கிலோ ரூ.1800-க்கு விற்பனையாகிறது. பால்கோவா தயாரிக்கிறோம். இவை அனைத்துக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இவை மட்டுமல்லாது சாணம், கோமயம் ஆகியவற்றுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. விவசாயிகள் பலரும் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்” என்கிறார் கணேஷ்குமார்.
- கணேஷ்குமார், தொடர்புக்கு: 9952411462
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago