இந்தியா ஒரு வேளாண்மை நாடு என்று நாம் வழமையாகச் சொல்வதுண்டு. ஆனால் இந்த நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் 33,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஏறத்தாழ 50% மக்கள் வேளாண்மையை விட்டு நகரங்களுக்குப் பெயர்ந்துவிட்டனர். இந்திய அளவில் 35 விழுக்காடு மக்கள் நகரங்களை நோக்கிச் சென்றுவிட்டனர்.
இந்திய மொத்த உள்ள நாட்டு உற்பத்தியில் வேளாண்மையும் அதன் துணைத் தொழில்களும் சேர்ந்தே 15.4 விழுக்காடு மட்டுமே என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக, இந்திய வேளாண்மை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. ஆனால் இதை நம்பி நாடு முழுவதும் ஏறத்தாழ 80 கோடி மக்கள் உள்ளனர். மாநிலத்துக்கு மாநிலம் இது சற்று மாறக்கூடும்.
மத்தியில் அமரும் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றன. ஆனால் செய்வதென்ன? குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கிய பாரதிய ஜனதா கட்சி அவற்றை எந்த அளவுக்குச் செயல்படுத்தியது என்பதைப் பார்ப்போம். மிக இன்றியமையாத திட்டமாக உழவர்களின் வருமானத்தை உயர்த்துவது என்பதே அதன்
தேர்தல் அறிக்கையின் சாரமாக இருந்தது. குறிப்பாக உழவர்களின் வருமானம் இருமடங்கு உயர செய்த முயற்சிகள் என்னவாயின? உண்மையில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியின்படி கடந்த 14 ஆண்டுகளைவிட உழவர்களின் வருமானம் குறைவாக இருக்கிறது என்பதுதான் சோகம்.
வெற்றிபெறாத திட்டங்கள்
அடுத்ததாக வேளாண்மையிலும் ஊரகப் பகுதியிலும் முதலீடுகளை அதிகப்படுத்துவோம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கை குறிப்பிட்டிருந்தது. ஆனால், 1980/81-ம் ஆண்டில் 43.2 விழுக்காடாக இருந்த முதலீடு 2016/17-ம் ஆண்டில் 18.8 விழுக்காடாக மாறிய செய்தியைக் காண முடிகிறது.
அடுத்ததாகக் குறைந்தபட்ச ஆதார விலையைப் பொறுத்த அளவில் ஒன்றரை மடங்கு கூடுதலாகக் கொடுப்பதாக அறிவித்தார்கள். அதுவும் 2018-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டது. ஆனால், வெறும் இடுபொருளை மட்டும் கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
விவசாயிகளின் உழைப்பு சேர்க்கப்படவில்லை. அதிலும் பொத்தாம் பொதுவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. குறிப்பாக நெல்லுக்கு ரூ.1,310 என்ற 2014-ம் ஆண்டில் விலை, 2017-ம் ஆண்டில் ரூ. 1,550 என்ற அளவிலேயே உயர்த்தப்பட்டது. அது மட்டுமல்ல பல விளைபொருள்களுக்கு இந்த விலை மதிப்பீடு செய்யப்படவே இல்லை.
பிரதான் மந்திரி கிரிஷி சின்நாயி யோஜனா என்ற பாசன மேம்பாட்டுத் திட்டம் ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு என்ற 5 மாநிலங்களில் 78 விழுக்காடு எட்டப்பட்டது, மற்ற மாநிலங்களில் இது வெற்றிபெறவில்லை.
மண் நல அட்டைகள் மூலம் மானியம் வழங்கப்படும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அது பல விவசாயிகளுக்கு இன்னும் புரியவே இல்லை.
யானைப் பசிக்குச் சோளப் பொரி
நாசகாரப் பூச்சிக்கொல்லிகளால் உழவர்கள் தொடர்ந்து இறக்கிற துயர நிகழ்வைத் தடுக்கும் பொருட்டு பூச்சிகொல்லிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
அதற்காக ‘அனுபம் வர்மா குழு’ அமைக்கப்பட்டு, அது மற்றொரு குழுவாக மாற்றப்பட்டு 99 கொல்லிகளில் இருந்து 18 கொல்லிகளை மட்டும் தடைசெய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் உழவர்களின் மரணங்கள் தொடர்கின்றன என்பதுதான் சோகம்.
வேளாண் விளைபொருட்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வோம். அதன்மூலம் உழவர்களின் விளைபொருள் விலை உயரும் என்று சொன்னார்கள். அது இன்னும் பேசுபொருளாகவே உள்ளது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இயற்கைவழி வேளாண்மையை ஊக்கப்படுத்துவோம் என்று கூறி ‘பரம்பரகா கிரிஷி, விகாஸ் யோஜனா, என்று திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். உண்மையில் இயற்கைவழி வேளாண்மை அல்லது உயிர்ம என்பது நவீன வேளாண்மை ஆகும்.
இதைப் பரம்பரை வேளாண்மை என்று பத்தாம் பசலித்தனமானது என்ற பொருள்படும்படி கூறி, அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. (ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை ரசாயன உர மானியம் மட்டும் வழங்கப்படுகிறது) இதில் பெரும் பணம் உத்தரகாண்ட், ம.பி. ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கே சென்றுள்ளது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இயற்கைவழி வேளாண்மை செய்கின்ற உழவர்கள் உள்ள நாடு இந்தியா. யானைப் பசிக்குச் சோளப் பொரி என்பது போலத் திட்டம். இதில் சான்றிதழ் பெற வேண்டும் என்று பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி இயற்கை வேளாண்மைக்குள் வரும் உழவர்களை விரட்டுகிற போக்கு நடைபெறுகிறது.
மரபீனி விதைக்கு அனுமதி
மிகவும் பெருமைப்படும் திட்டம் என்று கூறப்படும் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் பெரும் தொகை திரட்ட உதவிசெய்தது.
வங்கிக் கடனில் இணைக்கப்பட்ட இந்தத் திட்டம் பெரும் தோல்வி என்றே கூறலாம். ஊரகக் கடன்களை அதிகப்படுத்திக் கிராமப்புற மறுமலர்ச்சிக்கு உதவுவோம் என்று கூறப்பட்டது.
உண்மையில் கிராமப்புற வங்கிகள் அதிகம் மூடப்பட்டுள்ளன. 2018-17-ம் ஆண்டில் 5,306 என்ற எண்ணிக்கை 2017-18-ல் 3,948 என்ற அளவில் குறைந்துள்ளது. மாநிலங்களுக்கு இடையில் சந்தையை ஒழுங்குபடுத்த ஒரு மாதிரிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் மாநிலங்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை.
உழவர்களுக்காக தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தி மொழிக்கு மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற உள்ளூர் மொழிகளில் ஏதும் இல்லை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலையாட்கள் பற்றாக்குறை விவசாயத்திற்கு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அது ஓரளவுதான் உண்மை என்ற போதிலும், அதை வேளாண்மையுடன் இணைத்துச் செய்ய முடியும் என்று பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டன. அது நடக்கவில்லை. அதிலும் கூட 12,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுப் பற்றாக்குறை உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
மரபீனி மாற்றப்பட்ட விதைகளைக் கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் கொல்லைப்புற வழியாக சில பல்கலைக்கழக வேளாண் வல்லுநர்களைக் கொண்டு அந்த விதைகளைக் கொண்டுவர முயல்கின்றனர்.
குறிப்பாக மரபீனி மாற்றப்பட்ட கடுகைக் கொண்டு வர நடந்த முயற்சியைக் கூறலாம். அதேநேரத்தில் மிகவும் ஆபத்தான மரபீனி மாற்றப்பட்ட சோயாவையும், கனோலா என்ற எண்ணெய் விதைகளையும் பயன்பாட்டுக்கு அனுமதித்த செய்தியை ஜே.பி. நட்டா தெரிவித்ததை நாம் அறிவோம்.
உச்ச நீதி மன்றத்தில் மரபீனி மாற்ற உணவுப் பொருட்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று இவர்கள்தாம் குறிப்பிட்டார்கள். என்னே முரண்பாடு?
மூடப்பட்ட கொள்முதல் நிலையங்கள்
uzhavar-2jpgவிளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம். அப்படிக் கையகப்படுத்தினால் அதற்கு நியாயமான இழப்பீடும் வெளிப்படைத்தன்மையும் இருக்கும் என்று கூறினார்கள். அந்தச் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
கறுப்புச் சந்தைகளில் விளைபொருட்களைப் பதுக்குவதைத் தடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்கள். எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.
தாறுமாறாக ஏற்படும் விலை இறக்கமும் ஏற்றமும் உழவர்களைப் பாதிப்பதைத் தடுக்க ஒரு நிதி உருவாக்கப்படும் என்று கூறினார்கள். அது உருவாக்கப்பட்டது.
ஆனால் அந்த நிதி வேளாண்மை அமைச்சகத்தில் இருந்து நுகர்வோர் விவகார அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டு செலவளிக்கப்பட்டும்விட்டது! விளைபொருட்களைச் சேமித்து வைக்கப் பெரிய முயற்சி எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்காக ‘சாந்தகுமார் குழு’ ஓர் அறிக்கையும் கொடுத்தது. ஏதும் நடக்கவில்லை. பல கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதுதான் மிச்சம்.
துயர் துடைக்காத் திட்டம்
தொழில்நுட்பங்கள் குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விலை விவரம், பருவநிலை விவரங்களை உழவர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டது. பல செயலிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், பரந்துபட்ட உழவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை.
ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மதம், ஒரே மொழி என்ற பாணியில் ஒரே வேளாண் சந்தை என்று கூறி தேசிய வேளாண் சந்தை உருவாக்க உறுதி மொழி தரப்பட்டது. எண்ணியல் என்ற டிஜிட்டல் முறையில் இணைப்பதற்கான திட்டம் அது. 22,000 இணையதளங்களில் 585 மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அறிவித்துள்ள ஆண்டுக்கு 6,000 ரூபாய் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதுவும் உழவர்களின் கண்ணீரைத் துடைக்காது. ஏனென்றால் ஒரு எளிய பயிர் வைக்கவே உழவருக்கு ரூ.10,000க்கு மேல் செலவாகும். கடன் தள்ளுபடி தேசிய அளவில் செய்யப்படவில்லை. இந்தத் தேர்தல் அறிக்கையிலும் இல்லை.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago