பண்டிகைகள், விழாக்கள், சடங்குகள் போன்றவற்றில் பனை சார்ந்து பல்வேறு கூறுகள் இருப்பது தற்செயலானது அல்ல. பழங்காலத்தில் இருந்தே மனித வாழ்வில் அவை இரண்டறக் கலந்திருக்கின்றன. உணவாகவும் உணவுப் பாத்திரமாகவும் உறைவிடமாகவும் பனை மனிதனுடன் பயணித்துள்ளது. அதற்கான ஒரு சான்றுதான் திருக்கார்த்திகைப் பண்டிகையில் வீடுகளில் தயாரிக்கப்படும் பனையோலைக் கொழுக்கட்டை.
சங்க இலக்கியங்களில் கார்த்திகைப் பண்டிகை குறித்த குறிப்புகள் இருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அது ஒரு பவுர்ணமி நாள் என்பதும் தீபம் ஏற்றுதல் விழாவின் ஒரு அங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் மரபில் திருக்கார்த்திகை அன்றுதான் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெறும். குறிப்பாக வடமாவட்டங்களில் காணப்படும் ‘காத்தி’ சுத்துதல்கூடப் பனை சார்ந்ததாகக் காணப்படுவது தமிழர் மரபில் பனை மரம் கொண்டுள்ள முக்கிய இடத்தை உணர்த்தும். இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கையில்தான் பனையின் முக்கியத்துவம் ஏன் நவீன காலத்திலும் எளிதில் நீக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது என்பது புலனாகும்.
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை கார்த்திகையில் பனையோலையில் கொழுக்கட்டை செய்வது வழக்கம். பனையோலை சார்ந்த உணவு தயாரிக்கும் இந்த வழக்கம் பாத்திரங்கள் கண்டுபிடிக்கும் முன்பே வழக்கிலிருந்த ஒரு உணவு தயாரிப்புமுறை.
குருத்தோலைக்குள் அரிசிமாவை ஈரமாக நனைத்து அதை நெருப்பில் வாட்டிச் சுட்டால் அது எளிதில் வெந்துவிடும். ஓலையும் எளிதில் தீப்பற்றாது. உணவு சேதாரமாகாமல் கிடைக்கும். தமிழர் தம் பண்பாட்டில் அப்பம் சுடும் நாளாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பனையோலைக் கொழுக்கட்டை செய்வது என்பது மிக எளிய வழிமுறைதான். பச்சரிசி மாவை வறுத்துவைத்துக்கொண்டு, சிறிது சுக்கு, தேவையான அளவு பனை வெல்லம் (கருப்பட்டி) சேர்த்து, (சிலர் கருப்பட்டிக்குப் பதிலாகச் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வார்கள்) சிறிது நீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பனை ஓலையில் இந்த மாவை அடைத்து ஓலையைக் கொண்டே அதை இருபுறமும் கட்டி (விரும்பும்படியான வடிவங்களில் எல்லாம் செய்யலாம்) ஒன்றாக இட்லிப் பாத்திரத்தில் வைத்து அவித்துச் சாப்பிடவேண்டியதுதான். தங்கள் பாரம்பரியத்திற்கு ஏற்ப சிலர் எள்ளு, பாசிப்பயறு கடலைப்பருப்பு போன்றவற்றை இதனுடன் சேர்த்துத் தயாரிப்பார்கள்.
சிலர் மண்பானையில் சிறிது நீர் விட்டு மீந்திருக்கும் ஓலைகள், சில கிளைகளை நீருக்கும் மேலாக வரும்படி அமைத்து அதற்கு மேல் ஓலையில் பொதிந்த கொழுக்கட்டைகளை அடுக்கி அவிப்பார்கள்.
சிறப்பு என்னவென்றால் ஓலையும் சுக்கும் இணைந்து எழும்பும் மணம் கிறங்கடிக்கக்கூடியது. திருக்கார்த்திகை மாலை வேலைகளில் கடலோரத் தென்மாவட்டத் தெருக்களில் இந்தக் கொழுக்கட்டை வாசம் பரவலாக வீசும்.
- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago