இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இருந்தாலும், சில ஆண்டுகளாக சிட்டுக்குருவியைப் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக செல்போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி அழிந்து வருகின்றன என்ற ஆதாரமற்ற தகவல் வேகமாகப் பரவிவருகிறது. உண்மையில் சிட்டுக்குருவியைவிட உருவில் பெரிய பல பறவை வகைகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன.
சென்னை போன்ற மாநகரங்களில்கூட அந்த பறவைகளைப் பார்க்கலாம். அவை எல்லாம் வாழும்போது சிட்டுக்குருவி மட்டும் அழிந்து வருகிறது என்று கூறப்படுவது உண்மையா என்பதை ஆய்வு நடத்தித் தெரிந்துகொள்ள முற்பட்டோம். அந்த ஆய்வின் முடிவில் சென்னையிலிருந்து சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன அல்லது வெளியேறிவிட்டன என்ற தகவலில் உண்மை இல்லை என்று தெரிந்துகொண்டோம்.
இந்த நான்கு மாத ஆய்வுக்காக சென்னை இயற்கையாளர்கள் சங்கத்தைச் (MNS) சேர்ந்த ஆர்வலர்கள் சென்னையை குறுக்கும்-நெடுக்குமாகப் பயணித்தோம். சிட்டுக்குருவிகள் காணப்படும் இடங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரைபடமும் தயாரிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடத்துக்கும் நேரில் சென்று, அங்கு காணப்படும் சிட்டுக்குருவிகளை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடி தகவல்களைச் சேகரித்தோம்.
இப்படிச் சந்தித்த மக்கள் அனைவரும் ஒரே குரலில் ‘சிட்டுக்குருவி அழிந்து வருகிறது, அதற்கு செல்போன் கதிர்வீச்சு காரணம் என்றார்கள். ஆனால், மயிலாப்பூர் முதல் வெட்டுவாங்கேணி வரை, ராயப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை, நுங்கம்பாக்கம் முதல் ஆவடி வரை, கிண்டி முதல் கூடுவாஞ்சேரி வரை ஆய்வு நடத்தியதில் சிட்டுக்குருவிகளைப் பரவலாகப் பார்க்கமுடிந்தது.
200 சிட்டுக்குருவிகள்
பட்டினப்பாக்கத்தில் ஒரு வீட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்ற தகவல் ஆர்வத்தை தூண்டியது. அஜிஸ் என்பவர் தன் வீட்டைச் சுற்றி சிறு அட்டைப்பெட்டிகளை வைத்துள்ளார். அதில் சிட்டுக்குருவிகள் முட்டையிட்டுள்ளன, குஞ்சு பொரித்துள்ளன. இங்கே கைக்கு எட்டும் தொலைவிலேயே சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிகிறது. சிட்டுக்குருவி பற்றி நிறைய தகவல்களை அஜிஸ் பகிர்ந்துகொண்டார்.
“சிட்டுக்குருவிகள் முட்டையிடுவதற்கு வசதியாக என் வீட்டைச் சுற்றி அட்டைப்பெட்டிகளை வைத்துள்ளேன். அவை போதாமல் மின்சார மீட்டர் பெட்டியிலும் முட்டை இடுகின்றன. சுற்றி இருக்கும் வீட்டில் இருப்பவர்களிடமும் சிட்டுக்குருவிகளுக்கு அட்டைப்பெட்டி வையுங்கள் என்று சொல்லிவருகிறேன். சிட்டுக்குருவி தரையில் இரையைத் தேடும்போது பூனைக்கு எளிதில் இரையாகிவிடுகிறது. அதை மட்டும்தான் தடுக்க முடியவில்லை” என்கிறார் அஸீஸ்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் எதிரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் அரிசி மண்டி, ஓட்டு வீடு போன்றவை இருப்பதால், இங்கு சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிந்தது. கோயில் குளத்தின் முன்பு இருக்கும் மரத்திலும் நிறைய சிட்டுக்குருவிகள் தஞ்சம் அடைகின்றன.
நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணி சர்ச் எதிரில் இருக்கும் பாரதி சாலையில் பார்க்கும் இடமெல்லாம் சிட்டுக்குருவிகள் இருக்கின்றன. இங்கே எந்தத் தெருவில் சென்றாலும் சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிகிறது. சிலர் வீட்டில் அட்டைபெட்டியைக் கூடாக வைத்துள்ளனர். நீலாங்கரை காவல் நிலையத்தின் பின்புறம், பாலவாக்கம் உள் பகுதியிலும் அதிக எண்ணிகையில் சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிந்தது.
எளிய மனிதர்களின் கொண்டாட்டம்
பெருங்குடி, தரமணி, வேளச்சேரி பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். இப்பகுதி ரயில் நிலையங்களில் சிட்டுக்குருவிகளை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. ராயபுரம், திருவொற்றியூர் மார்க்கெட் சந்து போன்ற பகுதிகளிலும் சிட்டுக்குருவிகள் உள்ளன.
பெசன்ட் நகரில் நடந்த ஆச்சரியமான செய்தியை குறிப்பிட்டே ஆகவேண்டும். அஷ்டலக்ஷ்மி கோயில் எதிரில் இருந்த வீட்டின் முன்பு சோளக் கதிர் விற்பனை செய்து வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள வீட்டில் சிட்டுக்குருவிகளுக்கு
ஒரு அட்டைப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த அட்டைப்பெட்டியைத் தன் பிறந்தநாள் பரிசாக அந்த வீட்டுக்கு சோளக்கதிர் விற்பனை செய்பவர் வழங்கியுள்ளார். அந்த சாதாரண மனிதர் தன் பிறந்தநாளை இப்படி அர்த்தம் உள்ள வகையில் கொண்டாடியுள்ளார்.
அஷ்டலக்ஷ்மி கார்டன் தெருவில் ஒரு பெண்ணிடம் இங்கே சிட்டுக்குருவிகளை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டோம். அதன் குரலை கேட்பதற்காகவே காலை ஆறு மணி அளவில் பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பாக்கு மரத்துக்குச் செல்வேன். என்று எங்களை அழைத்து சென்று காண்பித்தார். அங்கு சிட்டுக்குருவிகள் ஆனந்தமாக விளையாடிகொண்டிருந்தன. அந்தக் குருவிகள் மரத்திலேயே கூடு அமைத்திருந்ததைப் போலிருந்தது.
சுற்றிகொண்டே கோயில் அருகில் மீண்டும் வந்தோம். கோயில் எதிரில் இருக்கும் மற்றொரு வீட்டில் பத்து சிட்டுக்குருவிகள் இருந்தன. அருகில் சென்று நீண்ட நேரம் அவற்றின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டு இருந்தோம். இந்த நிகழ்வில் என்ன முரண்பாடு என்றால், அந்த வீட்டின் மேல்தான் செல்போன் கோபுரம் உள்ளது. அங்கேயே பத்து சிட்டுக்குருவிகளும் இருந்தன.
இவை தவிர அண்ணாநகர், தாம்பரம், அம்பத்தூர், கே.கே. நகர் போன்ற பகுதிகளிலும் சிட்டுக்குருவிகள் சார்ந்து நிறைய பதிவுகள், தகவல்கள் உள்ளன.
எது நிஜ அறிவியல்?
சென்னை மாநகரத்தில் சிட்டுக்குருவிகள் அற்றுப்போய்விடவில்லை, ஆபத்தான அளவில் எண்ணிக்கையும் குறையவில்லை என்பதையே இந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது. வாழவும் உணவு கிடைக்கவும் ஏற்ற இடங்களில் சிட்டுக்குருவிகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு உண்மையான காரணங்களைத் தேடாமல், செல்போன் கதிர்வீச்சுதான் காரணம் என்று தவறாகப் பிரபலப்படுத்தப்பட்ட காரணம் மக்கள் மனதில் நன்றாகவே பதிந்திருக்கிறது. ஆனால், உலகில் ஆபத்தில் உள்ள உயிரினங்கள் குறித்து முறைப்படி அறிவிக்கும் IUCN அமைப்பு சிட்டுக்குருவியை LC (Least Concern) - கவலைப்படத் தேவையில்லை என்ற நிலையிலேயே வைத்துள்ளது. அதுவே நிஜ அறிவியல். செல்போன் கதிர்வீச்சுதான் காரணம் என்று கூறுவது ஆதாரமற்ற போலி அறிவியல்.
சென்னை சிட்டுக்குருவி வரைபடம்: http://bit.ly/2FwAbST
கட்டுரையாளர், இயற்கை செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: lapwing2010@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago