காட்டுயிர் பற்றி எழுதுபவர்களில் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி அமெரிக்கர் பீட்டர் மத்தீசன் (Peter Matthieson 1927-2014). என்னை ஈர்த்த அவருடைய முதல் நூல் பனிச்சிறுத்தை (Snow Leapard 1979). காட்டுயிரியலாளர் ஜார்ஜ் ஷேலர் 1975-ல் இமயத்தின் உயர் பகுதிகளில் காட்டாடுகளை, முயல்களை இரையாக்கி வாழும் பெரும்பூனையைப் பற்றிய கள ஆய்வில் ஈடுபட்டிருந்த காலம் அது. அருகி வரும் இந்த இரைகொல்லி விலங்கைத் தேடி பனி படர்ந்த மலைப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டபோது பீட்டர், தன்னை அவருடன் இணைத்துக்கொண்டார்.
பனிப்பிரதேசத்தில் பல வாரங்கள் சுற்றியலைந்த பின்னும் அவர்களால் பனிச்சிறுத்தையை ஒரு முறைகூடப் பார்க்க இயலவில்லையென்றாலும் அந்தப் பயணம் வாழ்வின் அர்த்தத்தை நோக்கியலையும் தேடலாக பீட்டருக்கு அமைந்தது (நாற்பந்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின், நல்ல பாதுகாப்புடன் இருப்பதால் எண்ணிக்கையில் பெருகி பனிச்சிறுத்தையைப் பார்ப்பது இன்று சிரமமான காரியமல்ல).
புத்த சமயத்தில் பீட்டருக்கு இருந்த ஈடுபாடு இமயத்தில் அவர் மேற்கொண்ட அலைச்சலுக்கு ஒரு பொருளைத் தந்தது. நாள் முழுவதும் நடந்துவிட்டு ஒவ்வோர் இரவும் மலையில் வாழும் ஷெர்பாக்களுடன் தங்குவார்கள். பௌத்தம் சார்ந்த அவர்களது வாழ்க்கை முறையைக் கூர்ந்து நோக்கி, தனது கவனிப்புகளைப் பதிவுசெய்தார். “உலகில் பெரிய பாவம் காட்டுப்பூக்களைப் பறிப்பதும், குழந்தைகளைத் திட்டுவதும்தான்” என்று அவர்கள் கருதினார்கள். அந்தப் பயணத்தின் விளைவான ‘பனிச்சிறுத்தை நூல்’ இந்தியாவில் அவருக்குப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றுத் தந்தது.
விழிப்பு தந்த எழுத்து
பீட்டர் மத்தீசன் ஒரு பன்முக ஆளுமை: இயற்கை எழுத்தாளர், நாவலாசிரியர், சாகசப் பயணி, ஜென் துறவி என அவரது எழுத்தில் எல்லாப் பரிமாணங்களும் வெளிப்படும். காட்டுயிர் பற்றிய அவரது கட்டுரைகள், அது காண்டாமிருகத்தைப் பற்றியோ கடலாமைகளைப் பற்றியோ இருந்தாலும் ஆழ்ந்த வாசிப்பு, ஆய்வுக்குப் பின்னரே எழுதப்பட்டுள்ளன.
அவருடைய எழுத்து வாசகர்களைப் புற உலகில் ஈடுபாடு கொள்ள வைக்கும் வலிமையுடையது. ஒரு எழுத்தாளனின் நோக்கம் தனது வாசகர்களை விழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று பீட்டர் நம்பினார். மலை நடைப்பயணத்தைப் பற்றிய அவரது கட்டுரையைப் படிப்பவர் அவருடன் பயணம் செல்வதுபோல் உணர்வார்கள். அப்படி ஒரு அற்புதமான நடை. ஆஸ்திரேலியாவிலிருந்து அலாஸ்காவரை உலகில் பல பிரதேசங்களுக்குக் காட்டுயிர்களைத் தேடிச் செல்வார். பின்னர் அந்த அனுபவம் ஒரு நூல் வடிவில் வாசகர்களை வந்து சேரும்.
ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் குள்ள யானைகளைத் தேடிச் சென்ற அனுபவம் ‘ஆப்பிரிக்க அமைதி’ (The African Silences) என்ற நூலின் உள்ளடக்கமாக அமைந்தது. கிழக்கு ஆப்பிரிக்காவின் காட்டுயிர்களைக் காண மேற்கொண்ட பயணம் பற்றி மனிதன் பிறந்த இடத்தின் மரம் (The Tree Where Man was Born) என்ற நூலில் எழுதியுள்ளார்.
கொக்கைத் தேடி ராஜஸ்தானுக்கு…
உலகின் பெருங்கொக்குகளைப் (crane) பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர். ராஜஸ்தானில் கீச்சன் கிராமத்துக்கு ஆயிரக்கணக்கில் வலசை வரும் பெருங்கொக்குகளைக் காண 2015-ல் இந்தியா வந்தார். அப்போது இமாலயப் பகுதியில் காணப்படும் கருங்கழுத்து பெருங்கொக்கைத் (Black necked crane) தொடர்ந்து பூட்டான்வரை சென்றார். அந்த ஆய்வின் விளைவுதான் சொர்க்கத்துப் பறவைகள் (Birds of Heaven) என்ற நூல். பரத்பூர் பறவை சரணாயலத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்புவரை வந்து கொண்டிருந்த சைபீரியப் பெருங்கொக்குகள் இப்போது வருவதில்லை என்பதை வருத்தத்துடன் அவர் பதிவுசெய்துள்ளார். வலசை வரும் வழியில் இரை தேடப் பறவைகள் தரையிறங்கும் இடங்களில் காத்திருந்து, தொடர்ந்து அவை வேட்டையாடப்பட்டதால் வந்த விளைவு இது.
புரிந்துகொள்ள முடியும்
பொதுவாக, இயற்கை சார்ந்த எழுத்தில் இரு வகைகளைக் காண முடிகிறது. ஒன்று புற உலகுக்கும் அதன் உயிரினங்களுக்கும் உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றுவது, இயற்கைவாதி தேரோ எழுதியவைபோல. இன்னொன்று ஓர் உயிரினத்தைப் பற்றி
அறிவியல்பூர்வமாகத் தீர ஆய்வுசெய்து எழுதுவது. இம்முறையில் எழுதியவர்தான் ஜார்ஜ் ஷேலர். இந்த இரு அணுகுமுறைகளையும் திறம்படக் கலந்து எழுதுபவர் பீட்டர் மத்தீசன். இவ்வகை எழுத்து பற்றிய தனது சிந்தாந்தத்தைச் சொர்க்கத்து பறவைகள் நூலில் விவரித்துள்ளார்: “சுற்றுச்சூழல், பல்லுயிரியம் ஆகியவை பற்றிய நல்ல புரிதலுக்கு ஒற்றை உயிரினம் ஒன்றின் தொடக்கங்களையும், அதன் தனித்தன்மையையும் அறிய முற்பட வேண்டும். ஒரு உயிரினத்தின் இருத்தலின் அதிசயத்தை - ஒரு பெருங்கொக்கையோ ஒரு இலையையே, மேகத்தையோ தவளையையோ- நன்கு புரிந்துகொண்டால், மற்ற எல்லாவற்றையும் நாம் புரிந்துகொண்டுவிட முடியும்”.
இவர் புனைவு இலக்கியத்திலும் வல்லவர், சிறுகதை உட்பட. கட்டுரைகள், பயண நூல்கள் பலவற்றை எழுதிப் புகழ்பெற்றிருந்தாலும் புனைவு இலக்கியம்தான் சிறந்தது என்று நம்பினார். “கட்டுரை இலக்கியம் எழுதுவது ஒரு அலமாரியை செய்வதுபோல. அது ஒரு போதும் சிற்பமாகாது. அது எழிலார்ந்து இருக்கலாம். ஆனால், அது ஒரு சிற்பமாகாது. விவரங்களிலும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பிலும் அது அடைபட்டு கிடப்பதால் அது பறக்காது.” என்று ஒரு நேர்காணலில் கூறினார். At Play in the Field of the Lord என்ற இவரது நாவல் மதப்பரப்புரையாளர் இருவர் தென்னமெரிக்கப் பெரு நாட்டின் காடுகளில் பயணம் செய்வதைப் பற்றியது. அதே பெயரில் அது ஒரு அருமையான திரைப்படமாகவும் 1991-ல் வெளிவந்தது.
அவரது ஆளுமையின் பரிமாணங்களில் என்னை மிகவும் ஈர்ப்பது ஜென் சிந்தாந்ததில் அவரது ஈடுபாடுதான். அவர் ஒரு ஜென் துறவியாகி, நியூயார்க் நகரத்துக்கு அருகே ஒரு மடம் ஒன்றை நடத்திவந்தார். ஜென் பற்றி எழுதவே கூடாது. அது உள்ளனுபவத்தால் உணர்ந்து அறியக்கூடியது, சொற்களுக்கு அப்பாற்பட்டது என்பது ஒரு சாராரின் நிலைப்பாடு. அதைப் பற்றி எழுதினால் அந்த அனுபவத்தை அது குலைக்கக்கூடும் என்பது இவர்கள் வாதம். இதை அறிந்தும் பீட்டர் இந்தத் தத்துவத்தைப் பற்றி Nine Headed Dragon River 1996 என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். அவரது ஆன்மிகத் தேடலில் இது ஒரு சாகசப் பயணம்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago