இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை அடுத்து நிறுத்திவைக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரிக்காய் (BT Brinjal) வங்கதேசத்தில் அனுமதிக்கப்பட்டுத் தோல்வியைத் தழுவியிருக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள வங்கதேசத்தைச் சேர்ந்த திட்ட ஆராய்ச்சி நிறுவனமான யு.பி.ஐ.என்.ஐ.ஜியின் (UBINIG) ஆய்வு அறிக்கை இதை உறுதிப்படுத்தியுள்ளது.
உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக வங்கதேச உழவர்கள் அதிகமாகப் பயிரிடும் காய்கறி, கத்தரிக்காய்தான். அங்கு 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. சிறு, குறு உழவர்களின் வாழ்வாதாரமாகக் கத்தரிக்காய் இருக்கிறது. இதன் விளைச்சலை அதிகரிக்கத்தான் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கத்தரிக்காய்களைத் தாக்கக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில்தான் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதை கண்டுபிடிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய அனுமதி
இந்தியாவைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஹைபிரிட் சீட்ஸ் கார்ப்பரேஷன் (Mahyco- மஹிகோ) நிறுவனம் அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்த மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதையை உருவாக்கியது. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus thuringiensis -BT) என்னும் பாக்டீரியத்தின் மரபணுவைக்கொண்டு கத்தரிக்காயின் மரபணுவை மாற்றிப் புதிய விதை உருவாக்கப்பட்டது. இது பாக்டீரிய கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதையை மதிப்பிடுவதற்கு இரு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. 2006-ல் அமைக்கப்பட்ட முதல் குழு, ஏற்கெனவே உள்ள கத்தரிக்காயைப் போல் இதுவும் பாதுகாப்பானது என அறிக்கை அளித்தது. 2009-ல் அமைக்கப்பட்ட இரண்டாம் குழுவும் பி.டி. கத்தரிக்காய் நன்மைகள் நிறைந்தது எனச் சொன்னது. இந்த இரு குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு (Genetic Engineering Approval Committee) 2009 அக்டோபர் 14-ல் இதற்கு அனுமதி அளித்தது.
ஆனால், மரபணு மாற்றப்பட்ட விதைக்கு நாட்டில் தோன்றிய எதிர்ப்பு அலையால் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2010 பிப்ரவரி 9-ல் இந்த அனுமதியை நிறுத்திவைத்தது. ஆனால், வங்கதேசத்தின் தேசியச் சுற்றுச்சுழல் பாதுகாப்புக் குழு 2013 அக்டோபர் 30-ல் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு அந்நாட்டில் அனுமதி அளித்தது. 2014-ல் வங்கதேச வேளாண் அமைச்சகம், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதையை விநியோகிக்கத் தொடங்கியது.
நஷ்டமே மிச்சம்
முதல் கட்டமாக யு.பி.ஐ.என்.ஐ.ஜி. 2015-ல் மேற்கொண்ட ஆய்வில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் 110 பேர் நேர்காணலுக்குத் தேர்வுசெய்யப்பட்டனர். அரசு அளித்த மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதையைப் பயன்படுத்திய 2-ம் கட்ட உழவர்கள், அவர்கள். அவர்களுள் ஒருவர் மட்டுமே 2014-ல் முதல் கட்ட விதை விநியோகிப்பிலிருந்து இந்த விதைப்பைத் தொடர்கிறார். மற்ற 109 உழவர்களும் புதியவர்கள்தாம். இவர்களுள் 79 பேரை மட்டுமே யு.பி.ஐ.என்.ஐ.ஜியால் நேர்காணல் செய்ய முடிந்தது. இதில் 74 சதவீதம் (58 பேர்) விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இனி அடுத்த கட்டமாக இந்த மரபணு மாற்றப்பட்ட விதையைப் பயன்படுத்த மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். வேளாண் துறையின் எல்லா உதவிகளும் கிடைக்கும் என்பதால்தான் இதைப் பயிரிட்டோம் என 20 சதவீதம் (16 பேர்) சொல்லியிருக்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் தன் விருப்பத்தின் பேரில் இந்த விதையைப் பயிரிட்டதாகக் கூறியுள்ளார்.
2019-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் 106 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 48 பேரை மட்டுமே தொடர்புகொள்ள முடிந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த 48 பேரிடம் டிசம்பர் 2018-லிருந்து ஜனவரி 2019 வரை யு.பி.ஐ.என்.ஐ.ஜி. தன்னார்வலர்கள் பல்வேறு கேள்விகளுடன் நேர்காணல் நடத்தியுள்ளனர். இந்த 48 பேரில் 13 பேர்தான் 2015-16 காலகட்டத்தில் இந்த மரபணு மாற்றப்பட்ட விதையைப் பயிரிட்டுள்ளனர். இந்த 13 பேரில் 5 பேர்தான் 2016-17 காலகட்டத்தில் இந்த விதையைத் தொடர்ந்துள்ளனர். 2017-18 காலகட்டத்தில் இது 3 ஆகக் குறைந்து. 2018-19-ல் 2-ஆகியுள்ளது. இந்த 48 பேரில் 33 பேர் இந்த மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைத்ததால் ஏற்பட்ட லாப, நஷ்டத்தை வங்கதேசப் பணமான டாகா மதிப்பில் கூறியுள்ளனர்.
மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் லாபம் (டாகாவில்) விவசாயிகள்
5000 2
5001-10001 2
10001- 15001 1
15001-20000 -
20001 -
மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் நஷ்டம் (டாகாவில்) விவசாயிகள்
5000 2
5001-10001 5
10001- 15001 1
15001-20000 4
20001 16
அகலாத பாதிப்பு
விளைச்சல் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 39 சதவீதம் பேர் மட்டுமே சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், 68 சதவீதம் பேர் அதிக விளைச்சலுக்காகத்தான் இந்த விதையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளனர். இதில் 21 சதவீதம் பேர் விளைச்சல் மிக மோசமாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.
பூச்சிக்கொல்லி பயன்படுத்திய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் 48 சதவீதம் பேர் இந்த விதையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியிருக்கிறார்கள். இந்த விதையைச் சந்தைப்படுத்த, இதுதான் முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், 27 சதவீதம் பேர் பூச்சித் தாக்குதல் மிதமான அளவில் இருந்ததாகக் கூறியிருக்கிறார்கள். விவசாயத் துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த அறிவுறுத்திய பிறகும்கூட, 25 சதவீதம் பேர் பூச்சிகளால் மோசமான பாதிப்புகளைச் சந்தித்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
மோசமான அனுபவம்
இந்த விதைப் பயன்பாடு குறித்த முழுமையான அபிப்ராயம்
கேட்கப்பட்டபோது 66 சதவீத உழவர்கள் மிக மோசமான அனுபவமே கிடைத்ததாகக் கூறியுள்ளனர். 22 சதவீத உழவர்கள் நல்ல அனுபவம் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். ‘மீண்டும் இந்த விதையைப் பயன்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு 68 சதவீதம் பேர் இல்லை என்றே பதிலளித்துள்ளனர். பிரெஞ்சு உயிரியலாளர் கில்லஸ்-எரிக் செரிலினி இந்த விதை மனிதனுக்கு உகந்ததல்ல எனத் தன் அறிக்கையில் ஏற்கெனவே கூறியுள்ளார். யு.பி.ஐ.என்.ஐ.ஜியின் இந்த அறிக்கை, அதன் தொழில் லாப/நஷ்டங்களையும் அம்பலப்படுத்துகிறது.
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயின் பாதிப்புகள் குறித்த இந்த அறிக்கை வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில், அந்நாட்டு அரசு தங்க அரிசி என்னும் மரபணு மாற்றப்பட்ட விதை நெல்லை வரவேற்கத் தயாராகிவருகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago