புத்தரிசிப் பொங்கல் போகி ஆனதோ

By வி.தேவதாசன்

சென்னையில் வசிக்கும் நாங்கள், வீட்டின் உணவு தேவைக்கான அரிசியைக் கடந்த நான்கு ஆண்டுகளாக மன்னார்குடி அருகில் உள்ள கீழத்திருப்பாலக்குடி கிராமத்து வயலில் இருந்து உற்பத்தி செய்துப் பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் மறைந்த நெல் ஜெயராமனும் நாகை மாவட்டம் குத்தலாம் அருகேயுள்ள ஆலங்குடி பெருமாளும் அளித்த ஊக்கம்தான் இதற்குக் காரணம்.

முதலில் மைசூர் மல்லி, ஆற்காடு கிச்சிலி சம்பா ஆகிய இரண்டு பாரம்பரிய நெல் ரகங்களி்ல் தலா 2 கிலோ விதை நெல்லை ஜெயராமன் கொடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொர்ணமசூரி என்ற சன்ன ரக விதை நெல் 2 கிலோவை ஜெயராமன் கொடுத்தார். தற்போது சொர்ணமசூரி அரிசிதான் சாப்பிட்டு வருகிறோம்.

ஒரு ஏக்கர் சாகுபடிக்கு கால் கிலோ விதை நெல்லை மட்டுமே பயன்படுத்தி 3,500 கிலோவுக்கு மேல், அதாவது ஒரு மாவுக்கு சுமார் 20 மூட்டை (3 மா என்பது 1 ஏக்கர்) மகசூல் எடுக்கும் ஆலங்குடி பெருமாளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே கடந்த நான்கு ஆண்டுகளிலும் சாகுபடி செய்து வருகிறோம். எனினும் எளிமையான அவரது தொழில்நுட்பத்தில் 20 சதவீதம்கூட எங்களால் அமல்படுத்த இயலவில்லை.

விதை நெல்லை ஊற வைப்பது தொடங்கி, நாற்றங்கால் தயார் செய்வது, விதை தெளிப்பது, நாற்றுப் பறிப்பது, நடவுசெய்வது, களை எடுப்பது, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்ப்பது என அனைத்து நிலைகளிலும் உடனிருக்கும் அனைவரும் முழுமையாக ஒத்துழைத்தால்தான் பெருமாளின் தொழில்நுட்பத்தை முழுமையாக அமல்படுத்த முடியும்.

என் போராட்டம்

நான் அரை மரக்கால் விதை நெல் எடுத்து வைத்தால், எனக்குத் தெரியாமல் இன்னும் ஒரு மரக்காலை சேர்த்து விடுகிறார்கள். நாற்று விடும் நாளில் ஒரு கிலோ போதும் என்று எவ்வளவு மன்றாடினாலும் விதை விடுபவர்கள் இரண்டு கிலோ, மூன்று கிலோ விதையை தெளித்து விடுகிறார்கள்.

நடவு நடும்போது ஒரு பயிருக்கு ஒரேயொரு நாற்றை மட்டும் நட்டால் போதும் என்று எவ்வளவு கெஞ்சினாலும் மூன்று, நான்கு நாற்றைச் சேர்த்துதான் ஊன்றுகிறார்கள். ஒரு அடிக்கு ஒரு பயிர் போதும் என்று கூறினால், அதைவிடக் குறைந்த இடைவெளியில் நட்டு விடுகிறார்கள். ரசாயன உரம் தேவையில்லை என்று கூறினாலும், நான் இல்லாத நேரத்தில் கொஞ்சமாவது போட்டு விடுகிறார்கள்.

இதை யாரும் வேண்டுமென்றே செய்வது இல்லை. நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில்தான் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது. கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ விதை நெல்லி்ல் முளைத்த நாற்றுகளை ஒரு அடிக்கு ஒரு அடி ஒரு பயிர் என்று நடவுசெய்தால், வயல் வெறும் தரிசு நிலம் போலத்தான் காட்சி தரும். மற்ற வயல்களைப் போல இருக்காது. அதைப் பார்த்துப் பயந்துவிடுகிறார்கள்.

இப்படிச் சாகுபடி செய்து, விளைச்சலே இல்லாமல் போய்விட்டால், “அவன்தான் ஏதோ சொல்றான்னா… உங்களுக்கு எங்கே போச்சு புத்தின்னு…” நாளைக்கு ஊருல எல்லோரும் திட்டுவாங்களே என்ற பயத்தினாலேயே விதை விடுபவர்கள், நாற்று நடுபவர்கள் என அனைவருமே நான் கூறுவதை முழுமையாகக் கேட்பதில்லை. இது போன்ற பல காரணங்களால் ஆலங்குடி பெருமாள் தொழில்நுட்பத்தை முழுமையாக அமல்படுத்த இயலவில்லை. இந்தப் போராட்டம் தொடர்கிறது.

பை அரிசிப் பழக்கம்

இது பற்றி மறைந்த நெல் ஜெயராமனிடம் கூறியபோது சிரித்தார். “டெல்டா விவசாயிகள் புதிய விஷயங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நம்மாழ்வார் அவர்களே இது பற்றி பலமுறை கூறியிருக்கிறார்” என்றார்.

ஆலங்குடி பெருமாளிடம் பேசியபோது, “மாவுக்கு நான் 20 மூட்டை பார்க்கிறேன். பத்துப் பதினைஞ்சு வருஷமா எல்லோரும் ஆச்சரியமா பேசுறாங்க. ஆனா யாரும் பின்பற்ற மாட்டாங்க. பக்கத்து வயல் விவசாயிகூட 10 மூட்டை கிடைச்சா போதுமுன்னு வழக்கமான சாகுபடியைத்தானே செய்றார். அதனால மாற்றத்தை கொண்டு வர்றது அவ்வளவு சுலபமில்ல” என்றார்.

அதேபோல் விளைவித்த நெல்லை, அவித்து, காயவைத்து, ஆலையில் அரைத்து, அரிசியாக மாற்றுவதுகூட முதலில் பெரும் போராட்டமாக இருந்தது. நெல் அவிக்கப் பயன்படுத்தும் டிரம் பாத்திரம் இப்போது ஊரில் யாரிடமும் இல்லை.

அவித்த நெல்லை அரவைக்காக மில்லுக்கு எடுத்துச் சென்றபோது மில் உரிமையாளர் போகி சிரித்தார். “ஊர்ல இப்ப யாரும் நெல்லு அவிக்கிறது இல்லை. மெட்ராசுக்கு போன நீ, ஊருல வந்து நெல்லை அவிச்சு அரைக்க வந்திருக்கே” என்றார்.

நான் சிறுவனாக இருந்தபோது, சாகுபடிக்கான விதை நெல்லைக்கூட யாரிடமும் கடன் வாங்கமாட்டார்கள். தனது வயலில் விளைந்து, பதப்படுத்தி, பத்திரப்படுத்தி வைத்த விதையைதான் பயன்படுத்துவார்கள். மற்றவர்களிடம் உள்ள வேறு ரகம் தேவையெனில், விதைக்கு விதை கொடுத்துதான் அவர்களிடம் உள்ள விதையை வாங்கிக்கொள்வார்கள்.

ஆனால், இன்று விதை நெல்லுக்காக மட்டுமல்ல. சாப்பாட்டுக்காக கூடவயலில் விளைந்த நெல் ஒருபடி கூட வீட்டுக்கு போவதில்லை. நிலத்திலிருந்து நேரடியாக விற்பனைக்கு சென்று விடுகிறது. அதன் பிறகு தங்கள் சாப்பாட்டுக்கான அரிசியை கடைகளில்தான் வாங்குகிறார்கள். பை அரிசி வாங்கி சாப்பிடுகிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் பலர் உள்ளனர். பாலிஷ் செய்யப்பட்ட பளபள அரிசியை வாங்கிச் சாப்பிடுவதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. காவிரி பாசனம் தரும் தஞ்சைத் தரணியெங்கும் இதுதான் நிலைமை.

மெனக்கெடலுக்கான காரணம்

பொங்கல் திருநாளில் புதிய அறுவடையில் கிடைத்த அரிசியைப் பொங்கலிட்டு கொண்டாடியது எல்லாம் பழைய காலமாகிவிட்டது. இப்போது பொங்கலுக்கான அரசியைக்கூட டெல்டா விவசாயிகள் பெரும்பாலோர் கடைகளில் இருந்துதான் வாங்குகின்றனர்.

சென்னையில் வசிக்கும் எங்களுக்கு இதேபோல் பை அரிசி வாங்கி சாப்பிடுவது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஆனால், சாகுபடிக்கான உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் லாபத்தை அதிகரிக்க முடியும் என்பதையும், ஆலங்குடி பெருமாள் சாகுபடி முறையில் கணிசமாக லாபம் பெற முடியும் என்பதையும் சொல்வதற்காக மட்டுமல்ல;

விளைவித்த நெல்லை ஓராண்டுக்குமேல் வீட்டில் பத்திரப்படுத்தி, தேவைப்படும் நேரத்தில் அவித்து, அரைத்து, சென்னைக்கு எடுத்துச் செல்வதைப் பார்ப்பவர்களுக்கு, ‘இவன் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறான்’ என நினைக்கலாம். ஊர்ப் பகுதியில் ஏதாவது சின்ன மாற்றம் நடக்குமா என்ற எதிர்பார்ப்புதான் எனது இந்த மெனக்கெடலுக்குக் காரணம்.

எல்லோராலும் இவ்வாறு செய்ய முடியாதுதான். ஆனால் செய்ய வாய்ப்பு இருப்பவர்கள் மட்டுமாவது முயற்சி செய்யட்டுமே.

புத்தரிசி தரும் நிறை மகிழ்ச்சி

மகசூலைப் பொறுத்தமட்டில் ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றம் தெரிகிறது. முதல் ஆண்டில் மாவுக்கு 6 மூட்டை (சாகுபடி செலவு மற்றவர்களைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்கு மட்டுமே). இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டில் 8 மூட்டை. இந்த ஆண்டு 110 குழியில் சீரக சம்பா (பெருமாள் கொடுத்த விதை), 50 குழியில் சொர்ணமசூரி (நெல் ஜெயராமன் கொடுத்த விதை) நடவு செய்தோம். சீரக சம்பா அறுவடை ஆகிவிட்டது. 80 கிலோ சாக்கில் எட்டரை மூட்டை. நிறை மகிழ்ச்சி. பொங்கல் நேரத்தில் சொர்ணமசூரி அறுவடை ஆகும்.

பல தடைகள், சிரமங்கள், சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு. இவற்றையெல்லாம் சந்தித்து, 20 ஆண்டுகளுக்கும் மேலான விடா முயற்சியின் காரணமாகத் தனித்துவமான ஒரு சாகுபடி முறையை ஆலங்குடி பெருமாள் உருவாக்கியுள்ளார். அவரது பணிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நெல் ஜெயராமன் தன் வாழ்நாளின் கடைசிவரை, உறுதுணையாய் இருந்து உற்சாகமூட்டிவந்தார்.

பெருமாள் அளவுக்கு மகசூலை எட்டுவது என்பது என்னால் இப்போதைக்கு இயலாத காரியம் என்பது தெரியும். எனினும் ‘Trial and error’ முறையில் தொடர்ந்து முயல்கிறேன்.

பெருமாளைப் போல மாவுக்கு 20 மூட்டையெல்லாம் வேண்டாம். மாவுக்கு 15 மூட்டை எடுத்துவிட வேண்டும் என்பதுதான் கனவு. இதைத் தொட்டுவிட்டாலே ஊர்ப் பக்கத்தில் பலரது கவனத்தைத் திருப்ப முடியும். சாகுபடிக்காக அவர்கள் செய்யும் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். குறிப்பாக, ரசாயனத்தில் பிடியில் இருந்து மண்ணைக் காக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: devadasan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்