புத்தாண்டு என்றாலே அவரவர் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு தீர்மானங்களை எடுப்போம். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, இயற்கை மீது காதல் விலகாத பலரும் ஒன்றுபடும் ஒரு அம்சம், பறவை நோக்குதல். பறவை நோக்குதலிலும் பல்வேறு சவால்கள் உண்டு, அவற்றைப் புதிய தீர்மானங்களாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டில் அவற்றைச் சந்திக்க நாம் தயாராகலாம்.
தீர்மானம் 1: வீட்டுப் பறவைப் பட்டியல்
நம்மை அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள், உறவினர்களை நினைவில் வைத்திருப்பதுபோல, பறவை வகைகளையும் நினைவில் வைக்கப் பழகலாம். புத்தாண்டு முதல் காக்கா, குருவி ஆகியவற்றைத் தாண்டி, நம் வீட்டுக்கு வந்து செல்லும் பறவை வகைகளின் பெயரையும் எண்ணிக்கையையும் பட்டியலிடலாம். அவற்றில் நமக்குப் பிடித்த பறவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முயலலாம். இதையே பணியிடத்திலும் பள்ளி, கல்லூரியிலும்கூடச் செய்ய முடியும். தொடர்ச்சியாகப் பறவைகளை நோக்க ஆரம்பிக்கும்போது, வெளிநாடு-நாட்டின் வேறு பகுதிகளிலிருந்து வலசை வரும் புதிய வகைப் பறவைகளையும் பார்க்கும் வாய்ப்பு நிறையவே உள்ளது!
தீர்மானம் 2: தண்ணீர் வைத்தல்
பறவைகள் மீது பாசமும் அக்கறையும் உள்ள பெரும்பாலோர் வீட்டில் அவற்றுக்குத் தண்ணீரும் உணவும் வைப்பது வழக்கம். இப்படி வைக்கும்போது தண்ணீரை பிளாஸ்டிக் கப் அல்லது வேறு பாத்திரங்களில் வைக்க வேண்டாம். இப்படி வைக்கப்படும் நீர் வெயிலில் சூடாகி விடும். அதனால் மண் சட்டியில் நீரை வைப்பதே மிகவும் நல்லது.
கூடுதலாக ஒரு சவால் உள்ளது. பொதுவாக சட்டியில் ஆனந்தக் குளியல் போட்டு, உணவை நனைத்துச் சாப்பிட்டு, நீர் அருந்திவிட்டுத்தான் பறவைகள் செல்லும். இதனால் சட்டி அழுக்கடையும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது சட்டியைச் சுத்தம் செய்தாக வேண்டும். சில நேரம் நீர் ஊற்றிய அடுத்த நாளே முழுவதும் அழுக்காகி இருக்கும்.
தீர்மானம் 3: வாசிப்பு
இந்த ஆண்டில் இயற்கை/பறவைகள்/சுற்றுச்சூழல் சார்ந்து குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது வாசிக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமான தீர்மானம். இன்றைக்கு வாசிப்பு வெகு வேகமாகக் குறைந்து வருகிறது. பலரும் நகரும் காட்சிகள், துணுக்குச் செய்திகளையே விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால், இவை நம் கற்பனை வளத்தையோ சிந்தனையையோ அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில்லை. அதனால் வாசிப்பு மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, இயற்கை குறித்த பதிவுகளாக வரும் எழுத்தை வாசிப்பது நமது அனுபவத்தை பன்மடங்கு மேம்படுத்துகிறது. இயற்கை குறித்த நமது அறிவை இது விரிவடையச் செய்வதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலையும் ஆழமாக்க உதவுகிறது. அத்துடன், புத்தகம் வாசிக்கும் பெரியவர்களைப் பார்த்து குழந்தைகளும் வாசிக்கத் தொடங்குவார்கள்.
தீர்மானம் 4: மக்கள் விஞ்ஞானி!
சரி, இப்படிப் பல்வேறு வகைகளில் பறவை நோக்குதலில் ஈடுபட்டு, எழுதிச் சேகரித்துள்ள தகவல்களை என்ன செய்வது? இது பறவைகளுக்கு எப்படிப் பயனளிக்கும்? சந்தேகமே வேண்டாம்! இவை பறவை பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும். நம்மிடம் உள்ள தகவல்களை eBird என்ற சர்வதேசத் தகவல் சேகரிப்பு வலைத்தளத்தில் உள்ளீடுசெய்வதன்மூலம், பறவைகள் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நாமும் கைகொடுக்கலாம்.
வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதம் நான்கு முறையாவது இது போன்ற தகவல்களை eBirdல் உள்ளீடுசெய்வது நம் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், குறிப்பிட்ட ஒரு விஷயம் சார்ந்து ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிக்கவும் உதவும். eBirdல் ஒரு புதிய கணக்கை எப்படித் தொடங்குவது, அத்துடன் தேசிய அளவிலான மாதாந்திரப் பறவைக் கணக்கெடுப்புப் போட்டிகள் போன்றவைக் குறித்த தகவல்கள் இங்கே உள்ள QR code-ல் கிடைக்கும். பறவைப் பாதுகாப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு இப்படி உதவும்போது, நாமும் மக்கள் விஞ்ஞானி ஆகிவிடுகிறோம்.
தீர்மானம் 5: விழிப்புணர்வை விரிவாக்குவோம்
இப்படிப் பல்வேறு வகைகளில் அனுபவம் பெற்ற பிறகு பள்ளி, கல்லூரிகளில் பறவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாமே நடத்தத் தொடங்கலாம். குறிப்பாக, கல்லூரி மாணவர்களை அதிக அளவில் சென்றடைய வேண்டிய தேவை உள்ளது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஆறு பள்ளி/கல்லூரிகளில் பறவை நோக்குதலை அறிமுகப்படுத்தலாம். பறவை நோக்குதலைப் பொறுத்தவரை நெடிய அனுபவம் இருந்தால்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதில்லை. ஆர்வம் மட்டுமே அடிப்படை. இதுபோன்ற கூட்டங்களில் தொடக்கத்தில் பேசத் தயங்குபவர்கள், கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.
தீர்மானம் 6: பறவை ஒலிப்பதிவாளர்
இருநோக்கியும் (பைனாகுலர்) கேமராவும் இல்லாமல் பறவை நோக்குதலை எப்படித் தொடங்குவது என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. பறவை நோக்குதலுக்குத் தேவைப்படும் ஒரேயொரு தகுதி ஆர்வம் மட்டுமே. வெறும் கண்களால் பறவைகளைப் பார்க்கத் தொடங்கலாம். அடுத்ததாக, இன்று பலரிடமும் ஸ்மார்ட் ஃபோன் உள்ளது. அதில் ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ வசதி இருக்கும் அல்லது ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதைப் பயன்படுத்தி நாம் பார்க்கும் பறவைகளின் இனிமையான பாடல்களையும் ஒலிகளையும் பதிவுசெய்ய முடியும். இப்படிச் செய்வதால் அந்தப் பதிவுகளை மீண்டும் கேட்டு மகிழ முடியும், அத்துடன் அவை முக்கிய ஆவண மாகவும் மாறும். அப்பறவைகளின் பெயர்களை எளிதில் கண்டு பிடிக்கவும் இந்தப் பதிவு உதவும்.
அத்துடன் நின்றுவிடாமல் பதிவுசெய்து வைத்துள்ள ஒலிகளை eBird India, Xeno Canto போன்ற முறையானத் தளங்களில் பதிவேற்றம்செய்வது நம் முயற்சியைப் பயனுள்ளதாகும். இதை MP3 வடிவத்தில் செய்வதைவிட .WAV வடிவில் பதிவேற்றம்செய்வது உகந்தது. அனுபவமிக்கப் பறவை ஆர்வலர்களுக்கும் இது ஒரு சுவாரசியமான சவால்.
அதேபோல அனுபவமிக்க பறவை ஆர்வலர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் தாங்கள் எடுத்துள்ள பறவைப் படங்களைக் கணினியில் மட்டுமே வைத்திருக்காமல் விக்கிமீடியா காமன்ஸ், eBird போன்ற பொதுத் தளங்களில் உள்ளீடுசெய்தால் அனைவருக்கும் பயனளிக்கும்.
தீர்மானம் 7: தமிழ்ப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு
சரணாலயங்களில் ஆயிரக்கணக்கில் பறவைகள் ஒன்றுகூடுவதுபோல ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் மாநிலம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான பறவை ஆர்வலர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் என பறவைகள் மீது காதல் கொண்ட அனைவரும் ‘தமிழ்நாடு பறவை ஆர்வலர்கள் சந்திப்'பில் ஒன்றுகூடிவருகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த சந்திப்பு, இதுவரை ஐந்து முறை நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வில் கற்றுக்கொள்ள எண்ணற்ற விஷயங்கள் இருக்கும். வரும் ஆண்டில் இந்தச் சந்திப்பிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து, குடும்பத்துடன் பங்கேற்கலாம்.
தீர்மானம் 8: 12 புதிய பறவைகள்
புதிய ஆண்டில் இதுவரை நாம் நேரில் பார்க்காத 12 புதிய பறவை வகைகளைப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானம்/சவாலை எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட
பறவை வகைகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. அதில் புதிதாகப் பன்னிரண்டு பறவைகளை அடையாளம் கண்டு மகிழ்வது நிச்சயம் கஷ்டமில்லை.
மேற்கண்ட தீர்மானங்களில் உங்களால் இயன்ற அனைத்தையும் எடுத்துக்கொள்வது அவசரமான வாழ்க்கையில் ஆசுவாசம் தருவது மட்டுமில்லாமல், இயற்கையுடனான நமது பிணைப்பை மீட்டெடுக்கவும் பெருமளவு உதவும்.
கட்டுரையாளர், பறவை ஆர்வலர்
- சேலம் பறவையியல் கழகம்
தொடர்புக்கு: enviroganeshwar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago