சேவல் கொடி 10: கத்திக்கட்டு சேவற்கட்டு

By இரா.சிவசித்து

காலில் கத்தியைக் கட்டி சண்டையிடும் இந்த வகைச் சேவல் கத்திக்கட்டு சேவல் என்றும் கட்டுச் சேவல் என்றும் அழைக்கப்படுகிறது. இவை வெத்துக்கால் சேவல் போல இல்லாமல் சற்றுக் கட்டையாகவும் அதைவிட அதிக எடையுடனும் இருக்கும். இந்த வகைச் சேவல்கள் திருச்சி, காங்கேயம், பொள்ளாச்சி, பழனி, ஒட்டஞ்சத்திரம், மதுரை, திண்டுக்கல், சேலம் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. இந்த வகை சேவல்கள் அதனுடைய நிறத்தைப் பொறுத்தே இனம் காணப்படுகின்றன.

கோழி போன்ற உருவ அமைப்புடைய இந்த வகைச் சேவல்கள் ‘பேடு’ என அழைக்கப்படுகிறது. வண்ணங்களைப் பொறுத்து, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு எனப் பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. அதுபோல் பல வண்ணங்களுடனான சேவல் வள்ளுவர் சேவல் என அழைக்கப்படுகிறது.

இந்த வள்ளுவர் வகைக்குள்ளே கோழி வள்ளவர், காக வள்ளுவர், பூதி வள்ளுவர் என்று மூன்று வகை உள்ளன.

பூதக்கீரி, காகக்கீரி, கருவலவி, செங்காகம், பூதி, செம்பூதி, காகக்கருப்பு, பேய்க்கருப்பு, கருங்கீரி, ஆண்டக்கீரி என்று பல நிறங்களில் இந்த வகைச் சேவல் உண்டு. (இங்கு நிறங்களே இனப்பெயர்களாகக் கொள்ளப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று)

கட்டுச் சேவல்களுடைய கால்களைப் பொறுத்துப் பசுபுக்கால், பூதக்கால், கருங்கால் என்றும் பல வகை உண்டு. அளவில் பெரிய சேவல்கள் பெறுவடை என்றும் சிறியவை சிறுவடை அல்லது சித்துவடை என்றும் அழைக்கப்படுகின்றன.

கொண்டைப் பூவை பொறுத்து மத்திப்பூச்சேவல் தவக்களைப் பூச்சேவல், ஊசிப்பூச் செவல் என்றும் பல பிரிவுகள் உண்டு. இதுபோகக் கத்திக்கட்டு சேவல் போர்கள் முன்பு அதிக அளவில் குறி கேட்டு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஜாதகம் கணிப்பது போலச் சேவல்களுக்குக் குறிப்புகள் வைத்து இருந்தனர். பக்‌ஷி சாஸ்திரம் பார்த்துக் களம் காணக்கூடிய வழக்கமும் உண்டு. உதாரணமாக, தேய்பிறை முதல் செவ்வாய் இல் நட்பு பறவைகள் மயில் (நிறம்) ஏள காகம் (நிறம்) பகை:- ஆந்தை (நிறம்) இப்படி கணித்து களம் விட்ட சேவல்களும் அதைத் தீவிரமாக நம்பக்கூடிய மரபு வெகுநாட்களாக இருந்தது.

 வெற்போர் சேவல்களைப் போலவே இவற்றையும் சிறு வயதிலேயே பிரித்து போஷாக்கான உணவுகள் கொடுத்து சண்டைக்குத் தயார்படுத்துகின்றனர். இவ்வகையான கத்திக்கட்டு சேவல் மூலம் நடத்தப்படும் போர், வெத்துக்கால் சண்டை போல அல்ல. தொடங்கிய ரெண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளே 95 சதவீதம் முடிந்துவிடும். சேவல்களின் கால்களில் 2 அங்குல அளவில் கட்டப்படும் கத்தி சண்டையிடும் சேவலைப் பெரும்பாலும் கொன்றுவிடும்.

சேவல் கால்களில் கத்தி கட்டுவதற்கும் அதைக் களத்தில் விடுவதற்கும் தனித் தனியாக இருதரப்பிலும் ஜாக்கிகள் இருப்பார்கள். சேவல்களைத் தட்டி கொடுத்துக்கொண்டு சேவலைப் பிடித்தவாறு பத்தடி தூரத்தில் இருந்து களத்தில் நிறுத்தி மோதவிடுவதுபோல் அருகில் கொண்டு சென்று பின் எடுத்தவண்ணம் இருப்பர். இதன் மூலம் சேவல்கள் அதிகம் ஆக்ரோஷம் கொள்கின்றன. இதுதான் உன் எதிரி என்பதை உணர்த்துவதற்கான செயல்தான் அது.

 இப்படிச் சேவல்கள் எதிர் எதிர் நின்று உடல் சிலிர்க்க நின்று கவனிப்பதை “முகைய விடுதல்” என அழைக்கப்படுகிறது. நான்கு, ஐந்து முறை ஜாக்கிகள் சேவலை அருகில் கொண்டு வந்து விலக்கி பின்னர் மோத விடுகையில் சேவல்கள் ஓடிவந்து தாக்கும். அப்படித் தாக்கும்போது கால்களில் கட்டப்பட்டு இருக்கும் கத்தியானது சேவல்களும் பெரிய காயத்தை ஏற்படுத்தும்.

ஒரு முறை சேவல் பறந்து தாக்கும்போதே கத்திபட்டு இறந்துபோவதும் உண்டு. ஒருமுறை பறந்தவுடன் சேவல்கள் ஜாக்கிகள் மூலம் பிரிக்கப்பட்டு காயத்துக்கு மருந்து கொடுத்து குளுக்கோஸ் போன்ற உடனடி ஆற்றலுக்கான உணவை உட்கொள்ளச் செய்து ஒத்தனம் கொடுத்து வாயில் நீர்வைத்து கொப்புளித்துச் சுதாரிப்பு அடைய செய்து மீண்டும் களம் இறக்கப்படும். இதுபோல இரண்டு, மூன்று முறை சண்டை முடிந்துவிடும். வெத்தடி சேவலிலும் சரி கத்திக்கட்டுச் சேவலிலும் சரி நான்கு பந்தையத்திற்கு மேல் வென்ற சேவலுக்குப் பெரிய மவுசு உண்டு.

கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்