தலைதெறிக்க ஓடிய சிறுத்தை!

By ப.ஜெகநாதன்

வானை மூடிக் கொண்டிருந்த மழை மேகங்கள், சட்டெனத் திரையை விலக்கியது போல விலக, வெயில் அடிக்க ஆரம்பித்தது. அதுவரை பெய்த மழையால் மரங்களிலிருந்து ‘சொட் சொட்’ என நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

வழியெங்கும் பின்னணி இசையைப் போலப் பறவைகளின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததன. அந்த அழகிய மழைக்காட்டின் நெடிதுயர்ந்த மரங்களையும், அவற்றின் தண்டுகளிலும் கிளைகளிலும் படர்ந்திருக்கும் பலவிதப் பச்சை நிறப் பாசிகள், சிறு செடிகள், தரையில் வளர்ந்திருக்கும் பல வண்ண மலர்ச் செடிகளையும், காட்டின் திறப்பில் எதிரே தெரிந்த,மேகக் கூட்டங்கள் தழுவிய உயர்ந்த மலைச்சிகரங்களையும், காட்டுயிர்களையும் கண்டுகளித்த நிம்மதியில், களைப்பு தெரியாமல் நடந்தோம். இடையிடையே கால்களில் ஊர்ந்து ஒட்டிக்கொண்ட அட்டைகளைப் பிய்த்து எடுத்து, தூர எறிந்துகொண்டே சென்றதையும் இத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

விலங்குத் தடம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மழைக் காட்டுப் பகுதியில் கானுலா சென்றுவிட்டு நாங்கள் நான்கு பேர் திரும்பிக் கொண்டிருந்தோம். வளைந்து நெளிந்து செல்லும் மழைக்காட்டின் பாதையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம்.

மாலை 5 மணி. முன்னே சென்று கொண்டிருந்தவர், சட்டெனக் கையைக் காட்டி, எங்களை நிறுத்தினார். எங்கள் முன்னே காட்டுத் தடத்தின் ஓரத்தில் சுமார் 30 மீ. தூரத்தில் ஒரு சிறுத்தை அமர்ந்திருந்தது. ஆமாம், சிறுத்தைதான்! எங்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை! உடனடியாகத் தடத்தைவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டோம். கண்களாலும், சைகைகளாலும் பேசிக்கொண்டோம்.

அந்த சிறுத்தை அமர்ந்திருந்த இடம் மரங்களில்லாத ஒரு திறந்தவெளி. காட்டுத் தடத்தின் ஓரத்தில் அமர்ந்து, கீழேயிருந்த பள்ளத்தாக்கை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. அமர்ந்திருந்தது என்று சொல்வதைவிட கிட்டத்தட்டப் படுத்துக்கொண்டு, தலையை மட்டும் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

வசீகர விலங்கு

என்ன அழகு! காட்டில் எத்தனை வகை உயிரினங்களைக் கண்டாலும், ஒரே ஒரு சிறுத்தையைப் பார்ப்பதற்கு ஈடு இணையே கிடையாது. சிறுத்தையை அதன் இயல்புடன், காட்டில் பார்த்தவர்களுக்கு இது புரியும்.

சிறுத்தை வசீகரமானது. அதைக் காணும்போது இனம் புரியாத ஒரு உணர்வு கிளர்ந்தெழும். அது நிச்சயமாகப் பயம் என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால் இயற்கை ஆர்வலர்கள்தான் என்று இல்லை, இயற்கைச் சூழலில் சிறுத்தையைப் பார்க்க எல்லா மனிதர்களுக்கும் ஆர்வம் இருக்கும். இதைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சிறுத்தையைப் பார்த்துப் பயம் கொள்பவர்கள், அதைப் பற்றி அறியாதவர்களே. அப்படிப்பட்டவர்கள் முதன்முதலில் சிறுத்தையைப் பார்க்கும்போது ஒருவித அச்சம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் சிறுத்தையின் குணாதிசயத்தைத் தெரிந்துகொண்டால், அதை ஒரு முறை பார்த்த பிறகு மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் நிச்சயமாகத் தோன்றும். அந்த ஈர்ப்பு சக்தி சிறுத்தைக்கு உண்டு.

புரிந்துகொள்வோம்

வால்பாறையில் பல வேளைகளில் கூண்டு வைத்துச் சிறுத்தையைப் பிடிக்கும் ஒரு தவறான பழக்கம் உண்டு. அப்போது கூண்டில் அடைபட்ட அந்தச் சிறுத்தையைப் பார்க்க வரும் கூட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டுமே? ஒரு சினிமா நட்சத்திரத்துக்குக்கூட அப்படிக் கூட்டம் கூடாது. என்னதான் இந்த ஊர்க்காரர்கள் சிறுத்தையை நினைத்துப் பயந்தாலும், அதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் கூண்டில் அடைபட்ட, மனஉளைச்சலில் இருக்கும் ஒரு பரிதாபமான உயிரைக் காணக் கூட்டங்கூட்டமாக அலையெனத் திரண்டு வருவார்கள்.

அப்போது எனக்குத் தோன்றுவது இதுதான்: இவர்களுக்குச் சிறுத்தையைப் பற்றித் தெரிந்திருந்தால், இப்படிக் கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்திருக்க மாட்டார்கள். சிறுத்தையை இயற்கையான சூழலில் பார்ப்பதையே அவர்கள் விரும்பி இருப்பார்கள். சிறுத்தையைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தால், அது சுதந்திரமாகத் திரியும்போது பார்த்துப் பயப்படாமல், அதைப் பார்ப்பதையே ஒரு பாக்கியமாக நினைத்திருப்பார்கள். அந்தக் கணம் ஒரு சுவை மிகுந்த, மயிர்க்கூச்செறிய வைக்கும், வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்.

பிடிக்கலாமா?

அண்மையில் வண்டலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகச் சந்தேகித்து, அதைக் கூண்டு வைத்துப் பிடிக்க ஏற்பாடுகள் நடந்தன. சென்ற ஆண்டு பெரம்பலூர் காட்டுப் பகுதிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் சிறுத்தை பார்க்கப்பட்ட காரணத்தாலேயே, அது கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டது. சிறுத்தையைப் பற்றி முறையாக அறிந்திருந்தால் இந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் அதைக் கூண்டு வைத்துப் பிடிக்கச் சொல்லி அதிகாரிகளை நிர்ப்பந்தப் படுத்தியிருக்க மாட்டார்கள்.

யாரையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் குணங்களை மதிப்பிடுவது தவறு. அது சிறுத்தைக்கும் பொருந்தும். சிறுத்தையை ஊருக்குள் பார்ப்பதாலேயே (குறிப்பாக, காட்டுப் பகுதியை அடுத்துள்ள பகுதிகளில்) அதைக் கூண்டு வைத்துப் பிடிப்பது தவறு.

என்ன செய்யலாம்?

உண்மையில் சிறுத்தைகள் கூச்ச சுபாவமுள்ள உயிரினங்கள். மனிதர்கள் உள்ள பகுதிகளில் உலவுவதை, அவை பெரும்பாலும் தவிர்க்கின்றன. மனிதர்களுக்கு ஊறுவிளைவிப்பவை எனக் கருதப்படும் சிறுத்தைகளைப் பொறி வைத்துப் பிடித்து, வேறு இடங்களில் விடுவிப்பதால் எந்தப் பிரச்சினையும் தீர்ந்துவிடாது. மாறாக, அது பிரச்சினையை மோசமடையச் செய்யும்.

ஓரிடத்திலிருந்து சிறுத்தையைப் பிடித்துவிட்டால், அச்சிறுத்தை உலவிவந்த இடத்தை வேறொரு சிறுத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். ஒரு தாய் சிறுத்தை, அதன் குட்டிகளுக்குக் குறைந்தது 2-3 ஆண்டுகள் உடன் இருந்து

இரையை வேட்டையாடவும், மனிதர்களிடமிருந்து விலகிச் செல்லவும் கற்றுக்கொடுக்கும். ஒரு வேளை தாய் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடித்துவிட்டால், அதன் சிறுத்தைக் குட்டிகள் தாயின் மேற்பார்வையின்றிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து எதிர்பாராத விதமாக, மனிதர்களுக்குத் தேவையில்லாத தொந்தரவை ஏற்படுத்தக்கூடும்.

அதனால், ஓரிடத்தில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டால், அதை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது நல்லது. நாம் அவற்றைத் தொந்தரவு செய்தால் ஒழிய, அவை நம்மை அநாவசியமாகத் தாக்க வருவதில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

திருப்புமுனை

நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த சிறுத்தைக்கு வருவோம். அதைக் கண்ட மகிழ்ச்சியில் ஓரிரு கணங்கள் திளைத்த பின்னர், உடனடியாக எனது கேமராவால் அதைப் படமெடுக்க ஆரம்பித்தேன்.

மாலை சூரியக் கதிர்கள் அதன் உடலில் பட்டு தெறித்து, பொன்னிற மேனியை ஜொலிக்கச் செய்தன. அந்த வேளையில் நாங்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் ஒரு மரத்தின் மேலே நீலகிரி கருமந்தி ஒன்று தாவிக் குதித்து விக்குவது போன்று உரத்த குரலெழுப்பியது. சிறுத்தையைக் கண்டு எழுப்பும் எச்சரிக்கை ஒலி அது.

மெதுவாகத் திரும்பிய சிறுத்தை எங்களைக் கண்டது. வெகு அருகில் கொடிய மிருகங்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது போல, அதன் கண்களில் குழப்பம், பயம், மிரட்சி. கண்ணிமைக்கும் நேரத்தில் திரும்பிப் பார்க்காமல் காட்டுக்குள் ஓடியது அந்தச் சிறுத்தை. ஆம், அந்தச் சிறுத்தை எங்களைக் கண்டு தலைதெறிக்கவே ஓடியது!

கூடுதல் வாசிப்புக்கு:

"சிறுத்தையும் நாமும்" (http://uyiri.wordpress.com/2010/10/01/leopard-and-us/)


ப. ஜெகநாதன், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
மின்னஞ்சல்: jegan@ncf-india.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்