சாதியும் நாயும்

By இரா.சிவசித்து

சமீபத்தில் திரைக்கு வந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பார்வையாளர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் தொடக்கக் காட்சியில் நாயகனும் அவன் நண்பர்களும் வேட்டையின்போது நாய்களைக் குளிப்பாட்டுகிறார்கள். நாய்களின் களைப்பு நீங்கத் தண்ணீரில் நனைப்பது அவசியம்.

அதைத் ‘தண்ணிக்கு விடுதல்’ என்பார்கள்.  நாயகன் தனது கருப்பியைக் குளிப்பாட்டுகிறார். இந்தக் கருப்பி, படத்தில் ப்ரியன் கதாபாத்திரம்போல் நம் நினைவில் நிலைக்கக்கூடிய ஒன்று. இந்தக் கருப்பி,  ‘இருபிளட்’ (இரு இன) வகை நாய்.

தமிழ்ப் பாரம்பரியமும் நாய்களும்

ஆனால் தமிழ்ப் பாரம்பரியத்தில் நாய்கள் என்றுமே செல்லப்பிராணிகளாகக் கொண்டாடப்பட்டதில்லை.

‘நாயினும் கடையேன்’ எனும் மாணிக்க வாசகர் சுவாமிகள், நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன் எனத் தன்னைக் கீழ்மைப்படுத்திக் கொள்ள நாயைத்தான் தேர்ந்தெடுக்கிறார்.

‘நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்னெறி காட்டு’ என்கிறது சிவபுராணம். ‘ஞமலி போல் வாழேல்’ என்கிறார் பாரதி. தொடர்ந்த சமூக நிலையிலும் கல்விப் புலத்திலும் மேம்பட்ட மக்களிடம் நாய் என்பது ஒரு கீழான வடிவமாகவே பார்க்கப்பட்டது.

அதே சமயம் வரலாறு நெடுகிலும் நாய்கள் ஒரு பயன்பாட்டு விலங்காகவே இருந்துள்ளன. மேலும் எளிய விளிம்பு நிலைமக்களுடன் நெருக்கத்தையும் கொண்டது. ‘கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்’ என்ற கோவூர்க் கிழாரின் புறப்பாடல் வரிகள் வேட்டுவக்குடிகள் பயன்படுத்திய நாய்களைப் பற்றிச் சொல்கிறது. 

‘சொன்றி ஞமலி தந்த மனவுச்சூலுடும்பின்’ என்ற பெரும்பாணாற்றுப்படை வரி, நாய் மூலம் கிடைத்த ‘மனவு’ இறைச்சி பற்றிக் கூறுகிறது. கம்பர், குகன் பற்றிய வர்ணனையில் முதலில் ‘துடியன்’ என்று அவன் குடியைச் சுட்டிய மறுவார்த்தையில் ‘துடியன் நாயினன்’ (நாயினை உடையவன்) என்றே குறிப்பிடுகிறார்.

அதன் நீட்சியாகத்தான் இன்றளவிலும் கிராமத்துக் குடிதெய்வங்களான கருப்பனும் மாடனும் கைகளில் பிடித்து நிற்கும் நாட்டு நாய்களைப் பார்க்க முடிகிறது. நாயக்கர் காலத்தின் மத்தியப் பகுதிகளில்தாம் முயல்வேட்டைக்காகப் பயன்படுத்தப்படும் கூர்நாசி கன்னி இனநாய்கள், பாளையக்காரர்கள் மூலம் இங்கு அறிமுகமாகின. இந்தக் காலகட்டத்திலேயே நாய்கள் மேட்டிமையின் குறியீடாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக கூர்நாசி அமைப்புடைய கன்னி நாய்கள்.

கன்னி நாய் எனும் கவுரவம்

இந்த நாய்கள் வளர்க்கும் பழக்கம் பின்னர் இடைநிலைச் சமூகங்களுக்கும் பரவியது. ஆனால், பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகே அவர்களுக்கு இந்தக் கன்னி நாய்கள் கிடைத்தன. அதன்மூலம் அவர்கள் தங்கள் சமூகங்களுக்குள்ளே தங்களை உயர்ந்தவர்களாகக் கருதினர். இன்றும் தென்னக கிராமங்களில் எளிய வாழ்க்கை வாழக்கூடியவர்கள்கூட, தங்கள் நாயைப் பற்றி பேசும்போது ஒரு தோரணை மிளிர்வதைப் பார்க்க முடியும்.

இப்படிக் கன்னி நாய். ஒரு மேட்டிமையின் அடையாளம் ஆனது. அதனால் ஒருவரை ஒருவர்  விஞ்ச நாய்களைப் பகடையாக்குகிறார்கள். வேட்டையில் யாருடைய நாய் அதிக முயல் பிடித்தது, வேகமாக ஓடியது என நாய் வளர்ப்பவர்களுக்குள் எப்போதும் பகை மூண்டுகொண்டே இருக்கும்.

இதனால் கன்னி நாய்க்குட்டிகளில் தேவைக்கு மட்டும் வைத்துக்கொண்டு மற்ற குட்டிகளைக் கொன்றுவிடும் வழக்கம் பல காலம் நடைமுறையில் இருந்தது. இந்தப் போட்டியால் வேட்டைக்குச் செல்லக்கூடிய நேரத்தில் நாயின் காலை ஒடிப்பது,  மருந்து வைப்பது, கோழி ஈரலில் குண்டூசி ஏத்தி நாய்க்குப் போட்டுக் கொல்வது என நாய்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டன. இதைத் தவிர்க்க எண்ணியே பெரும்பாலும் தன் சமூகத்தினருடனே வேட்டைக்குச் சென்றனர். ஆனால், இந்தப் பகையானது அவர்களுக்குள்ளும் மூளக்கூடியது என்பதே நிதர்சனம்.

இப்படியான கம்பீரத்தை பெரும்பாலான இடைநிலைச் சமூகங்கள் தலித் சமூகங்களுக்குத் தர விரும்பவில்லை. எந்த அளவுக்கு என்றால் இந்த வகை கன்னி நாய்களை வளர்க்கக் கூடாது, ஆண் நாய்களை வளர்க்கக் கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள்  தென் மாவட்டங்களின் பல கிராமப் பகுதிகளில் இருந்தன.

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்புகூட அசலான கன்னி நாய்கள் தலித் சமூகங்களிடம் இருந்தது இல்லை.

அம்மக்கள் வேட்டைக்கு நாட்டு நாய்களைப் பயன்படுத்தினர். அடுத்த கட்டமாக அவர்கள் ‘இருபிளட்’ நாய்களைப் பயன்படுத்தினர்.  இரு பிளட் நாய்கள், கன்னி நாய், நாட்டு நாய் இனக் கலப்பில் பிறந்தவை.  கன்னி நாய் இனக் கலப்பு உரிமையாளருக்குத் தெரியாமல் நடந்து வந்தது.

அவர்கள் அறியும் போது இந்த இருபிளட் நாய்களைக் கொல்லக்கூடிய நிகழ்வுகளும் இந்தப் பகுதிகளில் நடந்ததுண்டு. அதேபோல  பருவத்தில் இருக்கும் பெண்நாய் நாட்டு நாயுடன் சேர்ந்தாலும் இது நடக்கும். கன்னி நாய்களைக் கவுரவமாகக் கருதுபவர்கள் மத்தியில் ‘இருபிளட்’  நாய்கள் பெரிய மதிப்பு வாய்ந்தவை அல்ல. அதுபோல பெரும்பாலான இருபிளட் நாய்களைத் தலித் சமூகங்களிடமே அதிகம் பார்க்க முடியும்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் ‘கருப்பி’யாக வரும் நாயை ‘இருபிளட்’ பெண் நாயாக சரியாகவே காட்டியிருந்தனர். அசல் கன்னியைப் பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் பெரிய விஷயமே அல்ல. இருப்பினும், மிகச் சரியாக இருபிளட் நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்