படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறை

By த.சத்தியசீலன்

மக்காச்சோளப் பயிரில் வெளிநாட்டு ராணுவப் படைப்புழுக்கள் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. மாற்று மருந்தைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர், விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீரிய ஒட்டு மக்காச்சோள ரகம் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிரில் பல்வேறு பூச்சிகள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தினாலும் கடந்த சில மாதங்களாக ‘ஸ்போடாப்டிரா புருஜிபர்ட்டா’ என்ற வெளிநாட்டு ராணுவப் படைப்புழுத் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.

தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் குளிர்ச்சியான பருவநிலை, விட்டுவிட்டுப் பெய்யக்கூடிய மழையால் ராணுவப் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரிக்கும் சாத்தியமுள்ளது. இதனால் மக்காச்சோளப் பயிரில் சேதம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளது.

“சாகுபடி செய்த 15-ம் நாளில் இப்புழு தோன்றி குருத்துப் பகுதியை உண்ணத் தொடங்கும். இலைகளில் சிறிய, பெரிய வட்ட வடிவத் துளைகள் இந்தப் புழுத் தாக்குதலின் விளைவுகள்தாம். வடிவற்ற துளைகளாகவும் இருக்கும்.

சில செடிகளில் இலைகளின் மேல்பாகம் முற்றிலும் உண்ணப்பட்ட நிலையில் காணப்படும். இதனால் இலைகள் மடிந்த நிலையில் காணப்படும். ஆனால், இப்புழுக்கள் தண்டுப் பகுதியைத் துளைப்பதில்லை. பயிர்களில் கதிர்களின் நுனியில் உள்ள காம்புப் பகுதியையே பெரும்பாலும் உண்கின்றன. இவற்றின் தாய்ப்புழுக்கள் 100-200 முட்டைகளை மக்காச்சோள இலைகளில் இட்டு, அவற்றை வெள்ளை நிற ரோமத்தால் மூடிப் பாதுகாத்து வைக்கின்றன. ஓரிரு நாட்களில் அவற்றில் இருந்து பச்சை நிற இளம்புழுக்கள் வெளிவந்து, இலைகளில் உள்ள பச்சையத்தை உண்ணும்.

14-20 நாட்களில் முதிர்ச்சியடைந்து, மண்ணுக்குள் சென்று கூட்டுப்புழுக்களாக மாறிவிடும். அவை 8, 9 நாட்களில் தாய் அந்துப்புழுக்களாக மாறி 10, 15 நாட்கள் வரை முட்டையிடும்” என்கிறார் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி.

இந்த வகையில் ஆண் பூச்சிகள் அரக்கு நிற முன் இறக்கைகளின் நுனிப் பகுதியில் முக்கோண வடிவ வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கும். பெண் பூச்சிகளுக்கு முக்கோண வடிவ வெள்ளைப் புள்ளி இருக்காது. பின் இறக்கையில் அரக்கு நிறம் ஓரமாகக் காணப்படும். புழுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

1. ஒரு ஹெக்டேருக்கு ஓர் விளக்குப்பொறி என்ற அளவில் வைத்து அந்துப்புழுக்களைக் கவர வேண்டும்.

2. முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

3. வயலில் மக்காச்சோளத்தையே மீண்டும் மீண்டும் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

4. இவற்றைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகள் இல்லாவிட்டாலும், பருத்தி, மிளகாய்ப் பயிரைத் தாக்கும் ‘புரோடினியா’ என்ற புழுவைக் கட்டுப் படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லிகள் மூலம், ராணுவப் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சோதனை செய்தது. அதில் இப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி அசாடிராக்டின் 10 ஆயிரம் பிபிஎம் 20 மி.லி., தயோடிகார்ப் 75 டபுள்யூ.பி. 20 கிராம், புழுபென்டைமைட் 480 எஸ்சி 3 மி.லி., குளோரன்டிரனிலிபுரோல் 18.5 எஸ்சி 3 மி.லி., குளோர்பைரிபாஸ் 20 இசி 20 மி.லி., எமாமக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி 4 கிராம், ஸ்பைனிடோரம் 12 எஸ்சி 5 மி.லி. ஆகிய ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

விசைத்தெளிப்பான் என்றால் இந்த அளவு மாறுபடும். அதாவது, அசாடிராக்டின் 10 ஆயிரம் பிபிஎம் 60 மி.லி., தயோடிகார்ப் 75 டபுள்யூ.பி. 60 கிராம், புழுபென்டைமைட் 480 எஸ்சி 9 மி.லி., குளோரன்டிரனிலிபுரோல் 18.5 எஸ்சி 9 மி.லி., குளோர்பைரிபாஸ் 20 இசி 60 மி.லி., எமாமக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி 12 கிராம் ஸ்பைனிடோரம் 12 எஸ்சி 15 மி.லி. ஆகிய ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பூச்சி மருந்துகளைச் சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும். ஒரே மருந்தைத் தொடர்ந்து தெளிக்கக் கூடாது. மருந்தை மக்காச்சோளப் பயிரின் குருத்துப் பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும். இவ்வாறு கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றினால் மக்காச்சோளப் பயிரில், ராணுவப் படைப்புழுக்களால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.மக்காச்சோளப் பயிரில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள ராணுவப் படைப்புழுக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்