ஆட்டமும் கொண்டாட்டமும் நிறைந்த விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் இரண்டே நாள்தான் இருக்கிறது. ஆரவாரத்துடன் தொடங்கும் இந்தத் திருநாள், பல வண்ண விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதுடன் நிறைவடைகிறது. பண்டிகை நிறைவுபெறுகிற இந்த முடிவுப் புள்ளியே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக் கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுகிறது.
பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகிற அதே வேளையில், நம் செயல்களால் நிகழ்கிற பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இயற்கை வழி பக்தி
அந்தக் காலத்தில் முழுவதுமே களிமண்ணால் விநாயகர் சிலை செய்து வழிபட்டார்கள். அவற்றுக்கு நிறமூட்ட எந்தச் செயற்கை சாயங்களும் பயன்படுத்தப்பட்டதில்லை. தவிர அவை அளவில் சிறியதாக இருந்ததால், நீர்நிலைகளுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. ஆறுகளிலும் குளங்களிலும் கரைக்கப்படுகிற சிலைகள் கரைந்து நீரையும் மண்ணையும் வளப்படுத்தின. அடுத்த வருடம் அதே மண்ணை எடுத்துச் சிலை செய்வது வழக்கம்.
ஆனால், நீர்நிலைகளே அருகிவிட்ட இந்தக் காலத்தில் செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் பெருகி விட்டன. அவற்றை அருகில் உள்ள நீர்த்தேக்கங்களிலும், கடற்கரையோர மக்கள் கடலிலும் கரைக்கிறார்கள்.
செயற்கையின் ஆதிக்கம்
தற்போது பெரும்பாலான சிலைகள் எளிதில் காய்ந்துவிடக் கூடிய பிளாஸ்டர்ஆஃப் பாரிஸ் என்னும் செயற்கைக் களிமண் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவை தண்ணீரில் எளிதில் கரையாது. தண்ணீரில் அவற்றின் கரைதிறன் 0.3% மட்டுமே. அவை கரைவதற்குச் சில மாதங்கள் முதல் சில வருடங்கள்வரை ஆகலாம். அப்படியே கரைந்தாலும், நீரில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை குறைத்துவிடும். இதனால் நீர்நிலையில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் இறக்க நேரிடும். பிளாஸ்டிக், சிமெண்ட் போன்ற பொருட்களில் தயாரிக்கப்படும் சிலைகள் நீரில் கரையவே கரையாது. இதனால் நீர்நிலைகளின் ஆழம் குறைந்து, தண்ணீரின் கொள்ளளவும் குறைகிறது.
சமீபகாலமாக ஈகோ ஃபிரெண்ட்லி என்ற அறிவிப்புடன் காகிதக் கூழில் தயாராகும் சிலைகள் விற்பனைக்கு வருகின்றன. இவையும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. காகிதம் நீரில் கரைந்ததும் அதில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சிக்கொண்டு, மீத்தேன் வாயுக்களை வெளியிடும்.
வண்ணங்களுக்குப் பின்னால்
பளீரெனக் கண்ணைப் பறிக்கும் நிறங்களைத்தான் சிலைகளுக்குப் பூசுகிறார்கள். அந்தச் செயற்கைப் பூச்சுகளில் இருக்கும் வேதிப்பொருட்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. சிலைகளை அலங்கரிக்கத் தெர்மகோலால் ஆன அலங்கார வடிவமைப்புகளையும் செய்கிறார்கள். பூஜைக்காகப் பயன்படுத்திய மலர் மாலைகள், தேங்காய், பழம் போன்றவையும்கூடச் சிலைகளுடன் சேர்த்து நீர்நிலைகளில் விடப்படுகின்றன.
இப்படி ஒரு இடத்தில் இருக் கிற பொருட்கள் அனைத்தையும் மொத்தமாக இன்னொரு இடத்தில் சேர்ப்பதும் இயற்கைச் சம நிலையைப் பாதிக்கக் கூடியதுதான்.
“பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் எனப்படும் செயற்கைக் களிமண்ணால் செய்த சிலைகள் நீரில் கரைந்ததும் ஜிப்சமாக மாறும். ஏற்கனவே, சம்பந்தப்பட்ட நீர்நிலையில் பாஸ்பேட்டின் அளவு அதிகமாக இருந்தால், இப்படி வெளியிடப்படுகிற உப்புகளும் சேர்ந்து அந்த நீரின் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும். இதனால் அங்கு வாழும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். மனிதர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
அதேபோலச் செயற்கை வண்ணங்களில் காரீயம், நிக்கல், குரோமியம், பாதரசம் போன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருக்கும். இவை நீரில் கரைந்தால் நீரையும், அதை அருந்தும் மக்களைப் பாதிக்கும். அது நரம்பு மண்டலப் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறப்பு நேரிடுவதுவரை நீடிக்கலாம்” என்கிறார் சென்னை லயோலா கல்லூரியின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜான் மரிய சேவியர்.
நல்லதொரு மாற்றம்
சமீபகாலமாக மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் பலரும் இயற்கை வழியிலேயே தங்கள் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்வதை வரவேற்பதாகவும் அவர் சொல்கிறார்.
“களிமண் சிலைகளே உகந்தவை. இயற்கை மூலப் பொருட்களால் உருவான சிலைகளும் தற்போது கிடைக்கின்றன. சாமந்தி, வெங்காயத் தோல், மாதுளை ஆகியவற்றில் இருந்து தயாரான இயற்கை சாயங்களை வண்ணமடிக்கப் பயன்படுத்தலாம்” என்று ஆலோசனை தருகிறார் ஜான் மரிய சேவியர்.
இப்படியும் கொண்டாடலாம்
அதற்காக நாம் வழிவழியாகக் கடைப்பிடித்து வரும் பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் புறக்கணிக்க வேண்டுமா என்று கோபப்படத் தேவையில்லை. கொண்டாட்ட வழிமுறைகளில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே போதும்.
செயற்கைப் பொருட்களை அறவே தவிர்த்து இயற்கை வழியில் பண்டிகையைக் கொண்டாடலாம். அதிலும் பெரிய சிலைகளுக்குப் பதில், சிறிய சிலைகளை வைத்து வழிபடலாம். அவை நீர்நிலைகளில் கரைக்கப்பட்டாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
அந்தந்தப் பகுதி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து பூஜை செய்தால், சிலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். பிறகு அந்தச் சிலைகளை அந்தப் பகுதியிலேயே செயற்கை நீர்த்தொட்டி அமைத்துக் கரைக்கலாம். இதனால் குடிநீர் ஆதாரம் மாசுபடுவதைத் தடுக்கலாம். பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்களை ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் கொடுக்கலாம்.
அனைத்துக்கும் மேலாக இயற்கை வழியில்தான் பக்தி மார்க்கம் அமைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டாலே, பூமிப் பந்தைச் சீர்கேட்டிலிருந்து மீட்டுவிடலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago