சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைமுறை வேளாண்மை, தற்சார்பு வாழ்வியல் ஆகியவை குறித்த வழிகாட்டலை வழங்கி வந்த ‘தாளாண்மை’ மாத இதழ் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளூர் வேளாண்மை ஒழுங்குகளிலிருந்து பன்னாட்டுச் சுற்றுச்சூழல் அரசியல் வரைக்கும் வாசகர்களுக்குக் கற்பித்துவந்த ‘தாளாண்மை’, மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது. அதன் புதிய இதழ் ஜனவரி 2025இல் வெளியாகியுள்ளது.
இதழின் ஆசிரியரான பாமயன் பத்திரிகையாளர், முன்னோடி செயற்பாட்டாளர், இயற்கை வேளாண் நுட்பங்களைக் கண்டறிந்து நாடு முழுவதும் பரப்புபவர் எனப் பல அடையாளங்களைக் கொண்டவர். காலங்காலமாக விதைகள் மீது உழவர்களுக்கு இருக்கும் உரிமையைத் தனிநபருக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமாக்குகிற ‘புதுவகைத் தாவரப் பாதுகாப்புத் தேசங்களிடை ஒன்றியம்’ (UPOV) என்கிற அமைப்புக்கும் வளரும் நாடுகளைச் சேர்ந்த உழவர்களுக்கும் இடையே நடந்துவரும் போராட்டத்தை விளக்கும் பாமயனின் கட்டுரை இதில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசின் 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்துச் செயற்பாட்டாளர் அனந்து எழுதியுள்ளார். மண்புழு உரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதை ஒரு தொழில்நுணுக்கமாக எண்ணற்ற உழவர்களிடம் இலவசமாகக் கொண்டுசேர்த்தவர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்.
அவரது நேர்காணல், இந்த இதழின் இன்னொரு சிறப்பு. மீன்வள உயிரியலைப் பயின்ற தனக்கு மண்புழு குறித்த ஆழமான புரிதல் கிடைத்த விதத்தை ஆரவாரம் இன்றி மிக யதார்த்தமாக இதில் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இயற்கை வேளாண்மையில் இறங்கியதால்தான் இலங்கை பொருளாதாரச் சரிவைச் சந்தித்ததாகப் பேசப்பட்டது. இலங்கை அரசு அதை நடைமுறைப்படுத்தியதில் செய்த தவறுகளை அந்நாட்டின் அப்போதைய வேளாண் துறை அமைச்சரது பகிர்தல் மூலமாகவே இந்த நேர்காணல் பதிவுசெய்திருக்கிறது.
தாளாண்மை;
தனி இதழ்: ரூ.30;
ஆண்டுக் கட்டணம்: ரூ.300;
தொடர்புக்கு:
அடிசில் சோலை பண்ணை,
3/244, பாப்பநாயக்கன்பட்டி சாலை, சோலைபட்டி - 625708,
தே. கல்லுப்பட்டி வழி;
கைபேசி: 98420 48317