ஓ
லைகளில் பல்வேறு பயன்பாட்டு வடிவங்கள் செய்வது உலகமெங்கும் வழக்கில் காணப்படுகின்ற ஒன்று. ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு பொருள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவை யாவும் பல நூற்றாண்டுகளாக நமது மரபில் ஊறி எழுந்தவை. இன்று இவற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், இவை அத்தனை எளிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை ஒருமுறை தொட்டுணர்ந்தாலே தெரிந்துவிடும்.
ஆதி மனிதர்கள் ஓலைகளுடன் கொண்டுள்ள உறவைச் சொல்லும் சான்றுதான் பனை ஓலை பட்டை. விழுந்து கிடக்கும் பனை ஓலைகளை எடுத்து சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்களே, பனை ஓலை பட்டைகளைக் கண்டுபிடித்திருப்பார்கள். உணவை சாறு, கூழாக அருந்தும் ஒரு ஆதி நிலையை இன்றும் உணர்த்துவதாக இது இருக்கிறது.
மனிதக் கைகள்போல
உலகமெங்கும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் வேட்டைச் சமூகங்கள் ஓலைகளில் தங்கள் வேட்டைப் பொருட்களை பொதிந்து செல்லும் வழக்கத்தைக் காணலாம். குமரி மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர்கூட பன்றி இறைச்சியை ஓலையில்தான் பொதிந்து கொடுப்பார்கள். இப்படிப் பொதியப்பட்ட ஓலைகளின் நடுவில் குழிவு இருப்பதைப் பார்க்கலாம்.
நான்கு முதல் ஐந்து 'இலக்குகள்' கொண்ட பனை ஓலைகளை ஒன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றை மடக்கிச் செய்வதுதான் பனை ஓலைப் பட்டை. இந்த ஐந்து இலக்குகள் கொண்ட ஓலைகள் பார்ப்பதற்கு மனிதக் கைகளை ஒத்திருக்கும். ஓலையில் அடிப்பாகம் ஒன்றோடொன்று இணைந்து உள்ளங்கை போலவும், மேற்பகுதி விரல்கள் போன்று பிரிந்தும் இருக்கும். இது மனிதக் கைகளை குவித்து தண்ணீர் மொண்டு குடித்த ஆதி குடிகளின் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும்.
பிரிந்திருக்கும் விரல்களை எப்படி சேர்த்துவைத்துத் தண்ணீர் மொண்டுகொள்ளுகிறோமோ, அதுபோலவே ஓலைகளையும் பிடித்துவிட்டால் தண்ணீரைத் தேக்கி குடிக்கும் ஒரு வடிவமாக மாற்ற முடியுமே என எண்ணியிருக்கலாம்.
ஓலை வாசம்
ஓலைகளைப் பரத்தி, பிரிந்திருக்கும் நுனிப்பகுதிகளை ஒன்றிணைத்தால் ஒரு குழிவுடன் கூடிய படகின் வடிவம் கிடைக்கும். ஒன்றிணைத்த ஓலைகளின் ஒரு சிறு பகுதியை மட்டும் பிரித்து, நீண்டு நிற்கிற ஓலைகளுக்குக் குறுக்காக சுற்றிக் கட்டிவிட்டால் பயன்பாட்டுக்கு ஏற்ற பனை ஓலை பட்டை தயார்.
பனை ஓலைப் பட்டைகளின் தொன்மையும் எளிமையும்தான் அவற்றை இன்றுவரை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. குமரியிலுள்ள அனைத்து மதத்தினரும் தங்கள் விழாக்களின்போது, சடங்குகளின்போது பனை ஓலைப் பட்டையில் ஏதேனும் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு.
இன்றளவும் புனித வெள்ளியோ குருத்தோலை ஞாயிறோ கிறிஸ்தவ தேவாலயங்களில் பனை ஓலை பட்டையில் கஞ்சி கொடுப்பது வழக்கம். கிடா அல்லது கோழி பலியிட்டு நாட்டார் தெய்வங்களை வணங்கும்போதும் பனை ஓலை பட்டையில் கறிசோறு வழங்கும் நடைமுறை இன்றும் உண்டு. பதனீரோ, கஞ்சியோ, கறிக்குழம்போ பனை ஓலை வாசத்துடன் நம் நாக்கில் வந்து விழுவது பசியை நன்கு தூண்டும்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு:malargodson@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
49 mins ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago