நம்மாழ்வாரின் கனவை நனவாக்கும் திருவிழா

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

நிலத்துக்கும், கால்நடைகளுக்கும், மக்களுக்கும் ஒருசேர உணவு படைக்கும் கடமையை செய்துவந்தவர்கள் உழவர்கள். அந்த உணவு நஞ்சில்லாத உணவாக இருக்க வேண்டுமானால், தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே செய்துவந்த இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பது மட்டும்தான் சிறந்த வழி என்று சொன்னவர் நம்மாழ்வார். அதற்காகத் தான் பணியாற்றி வந்த அரசு வேளாண் துறை பணியைத் துறந்து, இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமைக்குத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார்.

பசுமை புரட்சியின்போது அரசு அறிமுகப்படுத்திய ரசாயன உரங்களால் பெருகிய உற்பத்தியைக் கண்டு மயங்கிய உழவர்கள் இயற்கை உரங்களை உதறித் தள்ள ஆரம்பித்தனர். அவர்களிடம் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் மட்டுமே நஞ்சில்லா உணவு கிடைக்கும் என்ற வார்த்தைகளால் மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. அதற்காக 30 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலமாகக் கிடந்த நிலத்தைப் பண்படுத்தி, கரூர் மாவட்டத்தில் வானகத்தை உருவாக்கினார் நம்மாழ்வார்.

அங்கு இயற்கை வேளாண்மையை மேற்கொண்டு செழிப்பான பூமியாக மாற்றிக் காட்டினார். அதன் பின்னரே மற்றவர்களையும் இயற்கை வேளாண்மை செய்யுங்கள் என வலியுறுத்தி மரபு விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான பிரச்சாரத்தை பரவலாக மேற்கொண்டார் நம்மாழ்வார்.

இதுபோல உழவர்களை ஒருங்கிணைப்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிதான் பாரம்பரிய நெல் திருவிழா. நம்மாழ்வாரின் இந்த முயற்சி தோற்கவில்லை என்பதற்குத் தமிழகம் முழுவதும் தற்போது நடத்தப்பட்டு வரும் நெல், விதைத் திருவிழாக்களும், மரபு உணவுத் திருவிழாக்களுமே சாட்சி. தமிழகத்தில் பல இடங்களிலும் விதைத் திருவிழாக்கள் நடைபெற்றாலும், நம்மாழ்வார் முதலில் நெல் திருவிழாவை தொடங்கி வைத்தது திருத்துறைப்பூண்டியில்தான்.

பயணம் தந்த புது விதை

இந்த நெல் திருவிழாவை நம்மாழ்வார் தொடங்கியதே ஒரு சுவாரசியமான சம்பவம். 2004-ம் ஆண்டு இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வலியுறுத்தி பூம்புகார் முதல் கல்லணைவரை நம்மாழ்வார் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தலைஞாயிறை அடுத்துள்ள வடுகூரில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் வீரப்ப ராமகிருஷ்ணன், நம்மாழ்வாரிடம் ஒரு கைப்பையை கொடுத்தார். ஏதோ பொரி கடலையைத்தான் அதில் போட்டுக் கொடுக்கிறார் என்று நம்மாழ்வார் நினைக்க, அந்த பையிலிருந்த பொருளை வெளியே எடுத்தபோது, அவை நெல் மணிகளாக இருந்தன.

"பிரச்சாரம் செய்த களைப்பில் இருப்பவர்களுக்கு, ஏதோ உண்பதற்குத்தான் தருகிறீர்கள் என நினைத்தால், நெல்லை தருகிறீர்களே இதை வைத்து என்ன செய்வது?" என்று நம்மாழ்வார் கேட்டார்.

"அய்யா இது காட்டுயானம் என்கிற பாரம்பரிய விதைநெல். இதைத்தான் நாங்கள் காலங்காலமாக சாகுபடி செய்து வருகிறோம். இதுபோன்ற மரபு, மருத்துவ குணம்மிக்க விதை நெல் ரகங்கள், ஆங்காங்கே ஓரிரு உழவர்களிடம் உள்ளன. அவற்றைப் பெற்று, அழிந்து வருகிற நெல் ரகங்களை மீட்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். அந்த பிரச்சாரப் பயணத்தின் எஞ்சிய பகுதிகளில், இதுபோன்ற தமிழக மரபு நெல் ரகங்கள் குறித்தும் நம்மாழ்வார் பேசத் தொடங்கினார்.

முதல் ஏழு விதைகள்

அந்தப் பயணத்தில் காவிரி பாசன உழவர்களின் ஆர்வத்தை கண்டு உற்சாகமடைந்த நம்மாழ்வார், அந்த ஆண்டே ஏழு மரபு நெல் ரகங்களை உழவர்களிடமிருந்து தேடிப் பிடித்துப் பெற்றார். திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் உள்ள ஜெயராமனிடம் அவற்றை ஒப்படைத்து, தனது மேற்பார்வையில் அந்தப் பண்ணையில் சாகுபடி மேற்கொண்டார். தொடர்ந்து உழவர்களை ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்வது அவர்களிடம் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தவும் மரபு நெல் ரகங்களை மீட்டெடுக்கவும் 2006-ம் ஆண்டில் மரபு நெல் ரகங்கள் வளர்க்கப்பட்ட ஆதிரெங்கம் வேளாண் பண்ணையிலேயே முதல் நெல் திருவிழாவை நம்மாழ்வார் தொடங்கி வைத்தார்.

அப்போது காட்டுயானம், குழியடிச்சான், பால்குடவாழை, குறுங்கார், சிங்கினிக்கார், குருவிக்கார், பனங்காட்டு குடவாழை உள்ளிட்ட ஏழு ரகங்களை திருவிழாவில் கலந்துகொண்ட 147 உழவர்களுக்கு தலா இரண்டு கிலோ வழங்கி, அடுத்த ஆண்டில் தலா நான்கு கிலோவாகத் திருப்பித் தரவேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு திருவிழா நிறைவடைந்தது. தமிழகம் தழுவிய உழவர்கள் பங்கேற்ற அந்த நெல் திருவிழா, கடந்த 2 ஆண்டுகளாக தேசிய நெல் திருவிழாவாக வளர்ந்துள்ளது. கடந்த 21, 22-ம் தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நெல் திருவிழாவில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் உழவர்கள் பங்கேற்றனர்.

அரசு ஈடுபாடு அதிகரிப்பு

நம்மாழ்வாரின் வழியில் இன்றும் நெல் திருவிழாவை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திவரும் திருத்துறைப்பூண்டி நெல் ஜெயராமன் இது குறித்துக் கூறியது:

தமிழகத்தில் நடைபெறுகிற நெல் திருவிழாக்கள் அனைத்துக்கும் தாய்வீடாகத் திகழ்வது திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் ‘தேசிய நெல் திருவிழா'. ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நோய் தாக்குதலுக்கு உள்ளான நமக்கு, இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வம் இப்போதுதான் அதிகரித்து வருகிறது.

அது பற்றி முன்பே யோசித்து, எச்சரித்தவர் நம்மாழ்வார். அவர் காட்டிய வழியில் நடத்தப்படும் இந்த பாரம்பரிய நெல் திருவிழா இயற்கை வேளாண்மையில் பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. 2006-ம் ஆண்டு 147 விவசாயிகள் மட்டுமே பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய முன்வந்தனர். கடந்த ஆண்டுவரை எங்களிடம் நேரடியாகத் தொடர்பு வைத்துள்ள உழவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

02CHVAN_tvrramakrishnan.jpeg வடுகூர் ராமகிருஷ்ணன்right

தமிழகம் முழுவதும் 96 பாரம்பரிய வேளாண் பண்ணைகளை உருவாக்கி, 169 மரபு நெல் ரகங்களை மீட்டுள்ளோம். இதுதவிர சமுதாய விதை வங்கிகள், கிராம விதை வங்கிகளை உருவாக்கியுள்ளோம். கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 117 இடங்களில் விதைத் திருவிழா நடைபெற்றுள்ளது. இதுதவிர கேரளம், கர்நாடகம், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கும் நெல் திருவிழா விரிவடைந்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு நெல் திருவிழாவில் கலந்துகொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமியிடம் உழவர்கள் வலியுறுத்தியதை ஏற்று, 2014-ம் ஆண்டிலிருந்து அங்கக வேளாண்மைத் துறையை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு வயல்வெளிப் பயிற்சிகளையும் செயல்முறைப் பயிற்சிகளையும் உழவர்களுக்கு வழங்கி, அதற்குச் சான்றிதழும் வழங்கப்பட்டுவருகிறது.

தமிழக அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்த சாந்தா ஷீலா நாயர் 2015-ம் ஆண்டு நெல் திருவிழாவில் கலந்துகொண்டு திட்டக் குழுவிலிருந்தும் இதற்கு உதவிகள் கிடைக்கும் என்று அறிவித்தார். அதன்படி 2016-ம் ஆண்டு முன்மாதிரித் திட்டமாக 12 டன் பாரம்பரிய விதைநெல் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, கோட்டூர் ஒன்றியங்களில் உள்ள உழவர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியை இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தாங்கி வளர்ந்ததோடு, ஏக்கருக்கு 18 முதல் 21 மூட்டைகள் மகசூலும் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டும் பாரம்பரிய விதைநெல் ரகங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு இதே திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த வேளாண் துறை திட்டமிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மரபு நெல் ரகங்களை உற்பத்திசெய்து மதிப்பு கூட்டி விற்கும் விற்பனை மையங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

10 ஆயிரம் பேர் பங்கேற்பு

இயற்கை வேளாண் உற்பத்தி என்று சொல்லி மதிப்புகூட்டுப் பொருட்களை சிலர் உருவாக்கும்போது, செயற்கை உரங்களைக் கலந்து உற்பத்தி செய்த உணவுப் பொருட்களையும் கலந்துவிடுவது, தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. அதற்குத் தீர்வு காணும் வகையில் நெல் திருவிழாவை தேசிய அளவில் கொண்டுசெல்ல கிரியேட் அமைப்பு முக்கியப் பங்காற்றிவருகிறது.

02CHVAN_tvr_jayaraman03.JPG நெல் ஜெயராமன்

இரண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களை தொடங்கி இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களை உறுப்பினர்களாக்கி, நேரடிக் கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுப்பொருட்களையும் முழுமையான இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற நெல் திருவிழாவில் 174 நெல் ரகங்களை 6,864 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். 70 கண்காட்சி அரங்குகளை அமைத்திருந்தோம். இந்த சாதனைகள் அனைத்தும் நம்மாழ்வாரின் கனவை நினைவாக்கும் பயணத்துக்கு கிடைத்த வெற்றி. 2020-க்குள் முழுமையாக இயற்கை வேளாண்மை செய்யும் மாநிலம் என்று அறிவிக்க சிக்கிம் மாநிலம் திட்டமிட்டுள்ளது.

கேரள அரசும் இயற்கை வேளாண்மையை பரவலாக்க முன்வந்துள்ளது. தற்போதைய சூழலில் எதிர்காலத்தில் மரபு நெல் ரகங்களை மீட்பதோடு இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கான பெரும் மாற்றத்தை மேற்கொள்ள தமிழகம் திட்டமிடுமானால். நம்மாழ்வார் தொடங்கி வைத்துள்ள இந்த நெல் திருவிழா அடித்தளமாக இருக்கும்" என்கிறார் ஜெயராமன் பெருமிதத்தோடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்