1986 ஏப்ரல் 26!
அணு உலை விபத்து எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த உலகம் புரிந்துகொண்ட நாள். அன்றுதான், செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக மரணமடைந்தவர்கள், பாக்கியம் பெற்றவர்களாயினர். தப்பியவர்கள், கதிர்வீச்சின் தாக்கத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்துகொண்டிருக்கின்றனர்.
இருந்தும், ரஷ்யாவுக்கு அணு உலைகள் மீதான காதல் தீர்ந்தபாடில்லை. சமீபத்தில் உலகிலேயே முதன்முறையாக, கடலில் மிதக்கும் அணு உலை ஒன்றை, அங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுக நகரத்தில் அமைத்திருக்கிறது ரஷ்யா.
சட்டத்துக்குப் புறம்பான ஒப்பந்தம்
இப்படி, புதுப்புது அணு உலைகளைத் தன்னுடைய நாட்டில் மட்டும் ரஷ்யா அமைத்திருந்தால், அது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் ‘ரொஸாடம்’ எனும் அரசு அணு உலைக் கழகத்தின் மூலம் இந்தியா, ஈரான், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கடை விரிக்கிறது ரஷ்யா. மேலோட்டமாக, ‘ஆஹா… வளரும் நாடுகளுக்கு ரஷ்யா எப்படியெல்லாம் உதவுகிறது’ என்று சிலாகிக்கலாம். ஆனால், அணு ஆற்றல் தொழில்நுட்பங்களை அந்நாடுகளுக்கு வழங்குவதன் வழியாக, அந்த நாடுகளைத் தன் அணு ஆதிக்கத்துக்குள் அடிமைப்படுத்த ரஷ்யா திட்டமிடுகிறது.
அதற்குச் சரியான அடி, 2017-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி கிடைத்தது. எப்படி?
தென்னாப்பிரிக்காவில் ரஷ்யா ரூ. 45 லட்சம் கோடி மதிப்பில் அமைக்கவிருந்த அணு உலை ஒப்பந்தம் ‘சட்டத்துக்குப் புறம்பானது’ என்று கூறி, தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செர்னோபில் விபத்து நடந்த அதே நாளில், இப்படி ஒரு தீர்ப்பு, ரஷ்யாவுக்குக் கிடைத்த கவித்துவ நீதியாக, உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கருதப்பட்டது.
அணு ஆயுத ஒழிப்பு
இந்த நீதி கிடைப்பதற்கு, இரண்டு பெண்கள்தான் காரணமாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், செர்னோபில் விபத்தின் 32-வது நினைவு நாளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக ‘கோல்ட்மேன் என்விரான்மெண்டல் பிரைஸ்’ எனும் சூழல் போராளிகளுக்கான விருது அளிக்கப்பட்டது.
அவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக அணு உலைகள் மீது தென்னாப்பிரிக்க அரசுக்கு இருக்கும் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தென்னாப்பிரிக்காவில் தற்போது ‘கூபெர்க்’ எனும் ஓர் அணு உலை மட்டுமே இருக்கிறது. கேப் டவுன் நகரத்துக்கு வெளியே அட்லாண்டிஸ் எனும் இடத்தில் அந்த அணு உலை செயல்பட்டு வருகிறது. வளரும் நாடுகளைப் போல, தென்னாப்பிரிக்காவும் நிலக்கரி சார்ந்த மின்சாரத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறது. 80-களில், அணு ஆற்றல் திட்டத்தைச் செயல்படுத்தியது தென்னாப்பிரிக்கா. 1984-ல் செயல்படத் தொடங்கிய கூபெர்க் அணு உலை, 2044-ம் ஆண்டுவரை மட்டுமே செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கட்டத்தில், தானும் ஏன் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று எண்ணியது தென்னாப்பிரிக்கா. ஒருவேளை அண்டை நாடுகளிடமிருந்து ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அந்த நாடு நடத்திய நிறவெறி வன்முறைகளைக் காரணம் காட்டி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உதவி செய்ய முன்வராமல் போகக் கூடும் என்று தென்னாப்பிரிக்கா அஞ்சியது. அந்த அச்சத்தின் வெளிப்பாடாகவே, அணு ஆயுதங்களைக் கையில் எடுக்கத் தொடங்கியது அந்நாடு.
அணு ஆற்றலுக்குப் பயன்படும் முக்கிய மூலப் பொருளான யுரேனியத்தைக் கொண்டு ஆறு அணு ஆயுதங்களைத் தயாரித்தது தென்னாப்பிரிக்கா. அவை அனைத்தும், ஹிரோஷிமாவின் மீது போடப்பட்ட குண்டுகளுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டிருந்தன. ஆனால், அந்தக் குண்டுகளுக்கு ஏற்ற, ஏவுகணைகள் தென்னாப்பிரிக்காவிடம் இல்லை. எனவே, புதிய ஏவுகணைகளைத் தயாரிக்கவோ வாங்கவோ வேண்டிய நிர்பந்தம் அந்நாட்டுக்கு ஏற்பட்டது. அதற்கான பொருளாதார வசதி அந்நாட்டிடம் இல்லை.
எனவே, இந்தக் குண்டுகளைப் பூமிக்கடியில் வெடிக்க வைத்துப் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று திட்டமிட்டது அந்நாடு. அதைத் தெரிந்துகொண்ட அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகள் தந்த அழுத்தம் காரணமாக, அந்தத் திட்டத்தைக் கைவிட்டது தென்னாப்பிரிக்கா. இது நடந்தது 1977-ல். அப்போது பனிப் போர் உச்சத்திலிருந்தது.
பனிப் போரால் உலக நாடுகளிடையே இருந்த மோதல் போக்கு, கொஞ்சம் கொஞ்சமாக 1990-க்குப் பிறகு குறையத் தொடங்கியது. அப்போது, அண்டை நாடுகள் தொடுக்க சாத்தியமுள்ள போர் குறித்த அச்சமும் தென்னாப்பிரிக்காவுக்குக் குறையத் தொடங்க, அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் அந்நாட்டுக்கு இல்லாமல் போனது. மேலும், அந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், அங்கு நிலவிய நிறவெறி வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அந்த மாற்றம், தென்னாப்பிரிக்காவின் அயல்நாட்டுக் கொள்கைகளிலும் எதிரொலிக்க, 1994-ம் ஆண்டு, தன்னிடமிருந்த அணு ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்தது தென்னாப்பிரிக்கா. இதனால், உலகிலேயே அணு ஆயுதங்களை அழித்த முதல் நாடு என்ற பெருமையை அந்நாடு பெற்றது!
பெண்களால் கிடைத்த நீதி
இப்படி ஒரு வரலாற்றைக் கொண்ட நாடுதான், கடந்த 2014-ம் ஆண்டில், அணு உலை தொடர்பாக ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் நாடு முழுக்க 10 அணு உலைகளைக் கட்ட முடிவெடுத்தது தென்னாப்பிரிக்கா. பொதுவெளியில் யாருக்கும் தெரியாமல் நிகழ்ந்த இந்த ஒப்பந்தத்தின் ஆவணங்கள் சில, ‘எர்த்லைஃப் ஆப்பிரிக்கா’ எனும் சூழல் பாதுகாப்புக்கான அமைப்பின் இயக்குநர் மகோமா லேக்கலாகலா என்பவருக்குக் கிடைத்தது.
உடனே, தன்னுடைய தோழியும், ‘சவுத் ஆப்பிரிக்கன் ஃபெய்த் கம்யூனிட்டீஸ் என்விரான்மெண்ட் இன்ஸ்டிடியூட்’ எனும் அமைப்பை நடத்தி வருபவருமான லிஸ் மெக்டெய்ட் உடன் இணைந்து போராட முடிவெடுக்க, இருவரும் நீதிமன்றப் படியேறினார்கள். பல்வேறு தாக்குதல்கள், மிரட்டல்கள் ஆகியவற்றுக்கு இடையில், அவர்கள் மேற்கொண்ட மூன்று ஆண்டு சட்டப் போராட்டத்துக்குக் கடந்த ஆண்டு விடிவு கிடைத்தது!
இதில் மகோமா, ஆப்பிரிக்கர். லிஸ் மெக்டெய்ட் வெள்ளையர். இருவருமே நிறவெறி வன்முறைச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். அப்போது அவர்கள் சந்தித்த துயரங்கள்தாம் இருவரையும் ஒன்றிணைந்து போராட வைத்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் புதிதாக அதிபர் பொறுப்பேற்றிருக்கும் சிரில் ரமஃபோஸா, ‘கூடுதல் அணு ஆற்றல் திட்டங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று உறுதியளித்திருக்கிறார். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ‘உலகிலேயே அணு உலைக்கு முற்றுப்புள்ளி வைத்த நாடு’ என்ற பெருமையையும் தென்னாப்பிரிக்கா பெறும் நாள் தூரத்தில் இல்லை!
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago