விசிறிவாலியின் நடன தரிசனம்

By ப.ஜெகநாதன்

குறைந்தது முக்கால் மணி நேரமாவது இருக்கும், அந்தப் பறவையை ஒரு உளவாளியைப் போலப் பின்தொடர்ந்து கவனித்து, அது பறந்து செல்லும் இடமெல்லாம் சென்றுகொண்டிருந்தேன். மரக் கிளைகளின் ஊடே தூரமாகப் பறந்து சென்று, என் கண்ணை விட்டு அது அகலும்வரை.

சிட்டுக்குருவியின் உருவத்தை ஒத்த சிறிய பறவைதான். ஆனால், இறக்கைகளைச் சற்று விரித்து வைத்துக் கொண்டிருப்பதால் கொஞ்சம் பெரிதாகத் தெரியும். நான் பார்த்துக் கொண்டிருந்தது மஞ்சள் விசிறிவாலி (Yellow-bellied Fantail) எனும் அழகான பறவையை. இடம் உத்தராஞ்சல் மாநிலத்தின் ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தை ஒட்டிய சால் மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில்.

சின்ன சாகசம்

இந்தப் பறவை ஈப்பிடிப்பான்கள் (Flycatchers) வகையைச் சேர்ந்தது. இந்த ஈப்பிடிப்பான்களுக்கு ஒரு பிரத்யேகக் குணம் உண்டு. காற்றில் அல்லது இலைகளில், கணுக்களில், கிளைகளில் இருக்கும் பூச்சிகளைப் பறந்து சென்று பிடித்துவிட்டு, முன்பு அமர்ந்திருந்த இடத்துக்கே பெரும்பாலும் திரும்பும் பண்பு கொண்டவை.

அவை சுறுசுறுப்பாகச் சிறகடித்துப் பறக்கும் விதத்திலும், வால் சிறகுகளை அவ்வப்போது விரித்துப் பக்கவாட்டில் ஆட்டி ஆட்டி நடனமாடுவதைப்போல் அங்குமிங்கும் துள்ளித் திரிவதையும் கண்டு பார்ப்பவர்கள் அதிசயித்துப் போவார்கள். பார்ப்பவரின் மனதைக் கொள்ளைகொள்ளும் அழகான பறவை இனங்களில் ஒன்று இது.

இருந்தும் இல்லாமல்

அது காலை நேரம். சூரிய ஒளி மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது. என்றாலும் குளிராகத்தான் இருந்தது. சால் மர இலைகளின் மீது இரவில் பெய்த பனித்துளிகள் சூரிய வெப்பத்தில் மெல்ல உருகித் திரண்டு, கீழே மெல்லச் சொட்டிக்கொண்டிருந்தன. மரத்தின் மேலிருந்த இலைகளிலிருந்து கீழ் கிளைகளில் உள்ள இலைகளில் ‘டப்' என்ற ஒலியுடன் நீர்த்துளிகள் விழுந்து தெறித்துக்கொண்டிருந்தன.

இந்தக் கிளைகளுக்கு இடையில்தான் அந்த மஞ்சள் விசிறிவாலியைக் கண்டேன். மரக்கிளைகளில் பறந்தும், தாவிக்கொண்டும் இருந்த அந்த விசிறிவாலி, இலைகளுக்கிடையே சூரிய ஒளி விழுந்த ஓர் இடத்தில் வந்து அமர்ந்தது. எனது கேமரா மூலம் அதைப் படமெடுக்கவும் நான் முயன்று கொண்டிருந்தேன்.

இயற்கையான சூரிய ஒளியில் எடுக்கப்படும் படத்தின் அழகே தனிதான். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல், கண் மூடி திறக்கும் கணத்தில் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் பறவைகளைப் படமெடுப்பது நிச்சயம் எளிதான காரியமல்ல. இருநோக்கி (பைனாகுலர்) வழியாகக் கண்ணெடுக்காமல் பறவைகளைப் பின்தொடர்வதே கடினமான காரியம்தான். இந்நிலையில் அவற்றைப் படமெடுக்க, பெரிதும் மெனக்கெட வேண்டும். நல்ல படம் அமைய அதிர்ஷ்டமும் இருக்கவேண்டும். பல நேரம் பறவை பறந்து போய், அது அமர்ந்திருந்த கிளை மட்டுமே படத்தில் இருக்கும்.

நடன தருணம்

அன்றைக்கு விசிறிவாலி சிறிது நேரம் என்னை அலைக்கழித்தது. படமெடுக்கும் முயற்சியைக் கைவிட்டு விடலாம் என்றுகூடத் தோன்றியது. அந்நிலையில்தான் சூரிய ஒளி பட்ட இடத்துக்கு, அப்பறவை வந்து அமர்ந்தது. அதன் மஞ்சள் நிற உடலில் இளங்காலை வெயில் பட்டு பொன் நிறத்தில் மின்னியது.

எப்போதும் அது செய்வதுபோல் வால் இறக்கைகளை விசிறி போல் விரித்து, கால்களை மாற்றி மாற்றி வைத்து அங்குமிங்கும் துள்ளியது. சுற்றிலும் உள்ள பூச்சிகளைக் காண்பதற்காகவும், பிடித்து உண்பதற்கான ஆயத்தமாகவுமே அது அப்படிச் செய்கிறது என்றாலும், நடனமாடுவது போலவே தோன்றியது.

வேட்டை தரிசனம்

சூரிய ஒளி என் தலைக்குப் பின்னாலிருந்து வீசியதால், அங்குப் பறந்துகொண்டிருந்த சிறிய பூச்சிகளின் மேல் பட்டுத் தெறித்து மின்னியது. அந்த விசிறிவாலி, பூச்சிகளைப் பார்த்திருக்க வேண்டும். நான் நின்ற இடத்திலிருந்து சுமார் 5 அடி தூரத்துக்கு அருகில் இறக்கைகளைப் படபடத்துப் பறந்து வந்து, அங்குப் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய பூச்சிகளை ஒரே வீச்சில் (பறத்தலில்) பிடித்துக்கொண்டு, மீண்டும் கிளைக்குத் திரும்பியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் என் கண் முன்னே ஒரு மத்தாப்பு மின்னி மறைந்தது போலிருந்தது. காற்றில் நடனமாடி என்னை வாய்பிளந்து நிற்கச் செய்த அந்தப் பறவை, வெளிச்சம் மிகுந்த இடத்துக்குச் சென்று அமர்ந்தது. வாய்ப்பை நழுவவிடாமல், உடனே கேமராவைத் திருப்பிப் படமெடுக்க ஆரம்பித்தேன்.

பிடித்த படம்

எடுத்த படங்களைப் பார்த்தபோது, ஒரு படம் எனக்கே ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தக் காலைச் சூரிய ஒளியில் நனைந்து, இறக்கைகளை அகல விரித்து, வால் இறகுகள் விசிறி போல் அழகாக விரிந்த தோற்றத்துடன் இருந்தது அந்தப் பறவை. அழகின் தெறிப்பு அப்படத்தில் இல்லையென்றாலும், விசிறிவாலியின் பண்பைக் காட்டும் விதத்தில் இருந்ததால், அந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது.

விசிறிவாலிகளைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதினாலும், பல மணி நேரம் பேசினாலும் அவற்றை நேரில், இயற்கைச் சூழலில் பார்ப்பது போன்ற அனுபவம் வேறு எதற்கும் ஈடாகாது. அதை நேரில் பார்ப்பவர்கள் அந்த ஒரு கணத்தை, நிச்சயமாகத் தங்கள் வாழ்வில் என்றுமே மறக்க மாட்டார்கள்.

ப. ஜெகநாதன், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: jegan@ncf-india.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்