ஈரோட்டில் பல்லுயிர்கள் சூழல் நிரம்பிய எலத்தூர் குளம்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் நம்பியூர் அருகே உள்ளது எலத்தூர் குளம். நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையானது பல சிற்றோடைகள் வழியே இணைந்து ஒரு பெரும் ஓடை வாயிலாக இக்குளத்திற்கு நீரை சேர்க்கிறது. குளத்திலிருந்து வெளியேறும் நீரானது பவானி ஆற்றில் அரசூர் அருகே கலக்கிறது.

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் வாயிலாகவும் இக்குளத்திற்கு பவானி நீர் கிடைக்கிறது. நீர் வரும் வழிகள் பெரிதாக மாசடையாததால் இக்குளத்தின் நீர் சுத்தமாகவும் நன்னீர் உயிர்ச்சூழலை ஊக்குவிப்பதாகவும் உள்ளது. இக்குளத்தின் வடமேற்கு பகுதியில் வனத்துறையினால் உருவாக்கப்பட்ட உடை, கருவேலம், அரப்பு, வேம்பு ஆகிய மரங்களை அடக்கிய முட்புதற்காடுகள் உள்ளன. குளத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சிசு மற்றும் ஆயா மரங்கள் அடங்கிய சிறு காடு உள்ளது. குளத்தின் மேற்கே உயரமான குளக்கரையும் கிழக்கே வயல்வெளிகளும் உள்ளன. வடகிழக்கு திசையில் குளத்திற்கு நீர் வரும் வழிப்பாதையை ஒட்டி சதுப்பு நிலமும் அதற்கு அடுத்ததாக ஆழமான நீர் நிலப்பகுதியும் அதன் பிறகு நீர் வெளியேறும் இடத்தில் வறல் புல்வெளிகளும் பாறை பகுதியும் உள்ளது.

தொடரும் உணவுச் சங்கலி

இக்குளத்திற்கு அருகே ஈரோட்டின் பல்லுயிர் செழிப்பு நிறைந்த நாகமலை குன்று உள்ளது. இந்த மலை குன்றுக்கும் எலத்தூர் குளத்திற்கும் இடையே பல்லுயிர் சூழலில் ஒரு உணவுச் சங்கிலி காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. நாகமலையில் இனப்பெருக்கம் செய்து வாழும் இறைக்கொல்லிப் பறவைகளான ராஜாளிகழுகு கொம்பன் ஆந்தை ஆகியவை தங்களது உணவை வேட்டையாட இக்குளத்திற்கு வந்து செல்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சிறப்பான உயிர்ச்சூழல் உள்ள இக்குளத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 170 வகையான பறவைகள் வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 பறவைகள் மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் வலசை வந்து செல்லும் பறவை இனங்கள். இதுபோக இக்குளத்தில் 45 வகையான உள்ளூர் பறவைகள் இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. வலசை காலத்தில் இக்குளத்தில் இரவில் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் தங்கி வசிக்கிறது. குறிப்பாக வறண்ட சிசு மரங்களில் 2000க்கும் மேற்பட்ட கொக்கு நாரை நீர்காகம் ஆகிய பறவைகள் தங்குகின்றன.

கருநாரை, மரநெட்டக்காலி, மஞ்சள் வயிற்று கதிர்குருவி, ஐரோப்பிய பஞ்சுருட்டான், போன்று அரிதாக வலசை வரும் பறவைகள் வரித்தலை வாத்து, வெண் புருவ வாத்து, தட்டைவாயன், ஊசிவால் வாத்து, கிளுவை போன்ற வலசை வரும் வாத்துகள் விரால் அடிப்பான், வெண்தோள் கழுகு உள்ளிட்ட வலசை வரும் இரைககொல்லி பறவைகள் எலத்தூர் குளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள ஆற்று ஆலா, பெரிய புள்ளிக்கழுகு, வெண்கழுத்து நாரை, செந்தலை வல்லூறு, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, வெள்ளை அன்றில் போன்ற பறவைகளும் இக்குளத்தில் காணப்படுகின்றன.

அதிக பறவை இனங்கள்

சமீபத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் நிகழ்ந்த 2024ஆம் ஆண்டிற்கான ஊர் புற பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் அதிக பறவை இனங்கள் வாழும் வாழ்விடமாக இவ்விடம் கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 28 2024 அன்று நிகழ்ந்த தமிழக ஒருங்கிணைந்த நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பிலும் இக்குளமானது சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் அதிக பறவை இனங்கள் உள்ள இடமாக அறியப்பட்டுள்ளது.

இதுபோக 89 வகையான பூச்சிகள் ஆறு வகையான பாலூட்டிகள் 11 வகையான ஊர்வனங்கள் இங்கு ஆவணம் செய்யப்பட்டுள்ளன.இக்குளத்தில் இருந்து பாசனத்திற்கு நீர் நேரடியாக எடுக்கப்படுவதில்லை. இக்குளத்தில் நீர் தேங்கும்போது சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் அளவு அதிகரிக்கிறது.

பல்லுயிர் சூழல் நிறைந்த இக்குளத்தை அரசு முறையாக ஆவணப்படுத்தி பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் எனவும், பறவைகளின் வாழ்விடமான இவ்விடத்தில் நிலப் பயன்பாடு மாற்றம் ஏதும் செய்யாமல் பறவைகள் வாழ்வை மேன்மைப்படுத்தும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் பறவை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்