இயற்கையின் பேழையிலிருந்து! 23: இயற்கை அறிவியலுக்கு சரபோஜியின் கொடை

By ப.ஜெகநாதன்

இரண்டாம் சரபோஜி ராஜாவிற்கு இயற்கை வரலாற்று அறிவியலில் மிகுந்த நாட்டம் இருந்தது. மராத்தி மொழியில் சுருக்கெழுத்தில் எழுதப்பட்ட ஆவணக் குறிப்புகளில் இருந்து (மோடி ஆவணங்கள்) இதை அறிய முடிகிறது.

தாவரங்கள் சேகரிப்பு: இரண்டாம் சரபோஜியின் அரண்மனை ‘ஆரோக்கியசாலா’வில் (வைத்தியசாலை) மூலிகைத் தாவரத் தோட்டம் இருந்துள்ளது. பல இடங்களிலிருந்து தாவரங்களையும், அவற்றின் வித்துகளையும் இந்தத் தோட்டத்திற்கு தருவித்துள்ளார். இங்கிருந்து உள்ளூர் மூலிகைத் தாவரங்களையும் பல இடங்களுக்கு அனுப்பியுள்ளார்.

குற்றாலத்தில் இருந்த தோட்டத்திலிருந்து லவங்கப்பட்டை மரக்கன்றுகள், அவரது தோட்டத்திலும், தஞ்சாவூரில் பல இடங்களிலும் நட்டு வளர்க்க எடுத்து வரப்பட்டிருக்கிறது. திருவாங்கூரில் இருந்து தேக்கு மரக்கன்றுகளும் தென்னங்கன்றுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. கடலூர் வாழைப்பழங்கள் சிறந்த சுவையை யுடையவை என்பதைக் கேள்விப்பட்டு, அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கன்றுகளை அவரது தோட்டத்தில் வளர்த்து வந்துள்ளார்.

தோட்டவேலைகளில் அனுபவம் மிக்கவரான சென்னபட்டினம் பள்ளிகொண்டான் மேஸ்திரி என்பவரின் ஆலோசனையின்படி இவை நடந்துள்ளன. மாங்கன்றுகள், பப்ளிமாஸ், சாத்துக்குடி எனப் பல வகையான தாவரங்கள் இவர் சொன்ன வழிமுறைகளில் சரபோஜி தோட்டத்தில் வளர்க்கப்பட்டுள்ளன.

கல்கத்தாவிலிருந்து மரமல்லிகை மரத்தை மதராசுக்கு சரபோஜி கொண்டுவந்த தகவலை, அக்காலகட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற தாவரவியலாளரான வில்லியம் ராக்ஸ்பெர்க் ‘Plants of the Coromandel Coast’ (1819), அதாவது சோழமண்டலக் கடற்கரைத் தாவரங்கள் எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்.

தாவரங்களை மட்டுமல்ல, அவை குறித்த பல நூல்களையும் தமது நூலகத்தில் சரபோஜி சேகரித்து வைத்திருந்துள்ளார். தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், அவற்றை உலர் தாவரத்தொகுப்பாகப் பாடம் செய்தும், அவற்றை அடையாளம் காணும் வகையில் அரசவை ஓவியர்களை வைத்து நுணுக்கமான ஓவியமாகத் தீட்டி ஆவணப்படுத்தியும் உள்ளார்.

சரபோஜி அரண்மனையில்பல வகைப் பாலூட்டிகளையும் பறவைகளையும் வளர்த்து வந்துள்ளார். கலப்பில்லாத நாய்கள், குதிரை களைத் தனது சேகரிப்பில் வைத்திருந்துள்ளார். இந்தியாவின் பல மூலைகளுக்கு அவரது ஆள்களை அனுப்பிக் குதிரைகள், ஒட்டகங்கள், இலங்கையிலிருந்து யானைகள், குரங்குகள் முதலியவற்றை வாங்கி வரச்செய்திருக்கிறார்.

வல்லூறு வகைப் பறவைகள்: இரைக்கொல்லிப் பறவைகளான வல்லூறு வகைப் பறவைகள் இந்தியாவின் பல இடங்களில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டதற்கான குறிப்புகள் பல உள்ளன. இவை ஃபாஸ் (Bauze), பெஹாரி (Behari), பேஷ்ரா (Beshara) என மராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

Bauze என்பது Baza எனும் பறவையாகவே இருக்க வேண்டும். தற்போது வழக்கத்தில் உள்ள Jerdon’s Baza, Black Baza போன்று வல்லூறு வகைப் பறவைகளாக இவை இருக்க வாய்ப்பு உண்டு. Behari என்பதை தமிழில் வைரி, பைரி என்று வழங்கப்படும் வல்லூறு வகையாக இருக்கக்கூடும். Beshara என்பது தற்போது Besra என்று அறியப்படும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தென்படும் வல்லூறு வகையாக இருக்க வேண்டும்.

இந்தப் பறவைகளின் ஓவியங்கள் பிரிட்டிஷ் நூலகத்திலும், சரஸ்வதி மகால் நூலகத்திலும் இருந்தாலும், அவை பொதுவெளியில் இல்லாத காரணத்தால் மேற்கொண்டு விவரங்களை அறிய முடியவில்லை. ‘Painted manuscripts of the Saraswati Mahal library’ எனும் நூலில் ஓர் இளம் வல்லூறு (Shikra) ஓவியம் உள்ளது.

சிவகங்கைப் பூங்காவில் சாரஸ் பெருங்கொக்கு: சரபோஜி 1821இல் காசிக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டபோது சாரஸ் பெருங்கொக்குகளை வாங்கி வந்துள்ளார். இவற்றில் ஓர் இணையை அரண்மனை தஸ்தான் மகாலிலும், மீதியைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகில் உள்ள சிவகங்கைப் பூங்காவிலும் விட்டு வைத்துள்ளார். இவற்றில் ஒன்றை ஆங்கிலேயர் ஒருவர் சுட்டுக் கொன்றுவிட்டார்.

இதனால் வருத்தமடைந்து, சரபோஜிக்கு அவர் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த சாரஸ் பெருங்கொக்குகளை அந்த ஆங்கிலேயரிடமே கொடுத்துப் பாதுகாக்கச் சொல்லி, அவற்றைக் கொல்ல வேண்டாம் என சரபோஜி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பின்னர் சாரஸ் பெருங்கொக்குகளைக்கல்கத்தாவிலிருந்தும், கட்டக்கில் இருந்தும் அவரது அரண்மனைக்கு வாங்கி வந்துள்ளார்.

பறவைகளையும் காட்டுயிர்களையும் சரபோ ஜியின் நண்பர்கள் பரிசாகவும் தந்துள்ளனர். பிரிட்டிஷ் உள்ளுறைஞரான வில்லியன் பிளாக்பர்ன் இரண்டு சிறுத்தைகளையும் (leopards), அவருக்குப் பின் வந்த உள்ளுறைஞரான ஜான் ஃபைபே ஓர் இளம் சிவிங்கிப்புலியையும் (Cheetah), வேறு சிலர் கடமான், வெளிநாட்டுப் பறவைகள் எனப் பல காட்டுயிர்களை சரபோஜிக்குப் பரிசாக அளித்துள்ளனர்.

சரபோஜி சேகரித்த சில உயிரினங்களை மற்றவர்களுக்குப் பரிசாகவும் அளித்துள்ளார். Shama என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சோலைப்பாடி எனும் இனிமையாகப் பாடும் பறவையை ஹைதரா பாத்திலிருந்து தஞ்சாவூருக்கு வாங்கி வந்து பிளாக்பர்னுக்குப் பரிசாகத் தந்துள்ளார்.

காட்டுயிர்கள் வேட்டை

இரைக்கொல்லிப் பறவைகளை (Falconry) பழக்கி, மற்ற சிறிய பறவைகளை வேட்டையாடவும் சரபோஜி வைத்திருக்கிறார். தஞ்சாவூரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் இப்படி வேட்டைக்கு ஒரு முறை ஏற்பாடு செய்து, அதில் அவரது நண்பர்கள் பலர் கலந்துகொண்டு வேடிக்கை பார்த்ததாகக் குறிப்புகள் உள்ளன.

சரபோஜி அவ்வப்போது வேட்டையிலும் ஈடுபட்டிருக்கிறார். தஞ்சாவூர்க் காடுகளில் இருந்து புலி, சிறுத்தை, கரடி ஆகியவற்றைப் பிடித்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

சரபோஜி தமது பரிவாரங்கள் புடைசூழ, அவருக்கு விருப்பமான வேட்டையாடியான அண்ணாசாமி என்பவரோடு சேர்ந்து, வேட்டை நாய்களுடன் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கும், பில்வநல்லூர் காட்டுப்பகுதிகளுக்கும் (இது தற்போதைய வில்லியனூராக இருக்கலாம்), ஓரத்தநாட்டுக்கு அருகில் உள்ள அரசப்பட்டு போன்ற இடங்களுக்கெல்லாம் வேட்டையாடச் சென்றிருக்கிறார். பிடிக்கப்பட்ட காட்டுயிர்களை எல்லாம் பொதுமக்கள் பார்வைக்காக வேட்டை மகாலில் வைத்துள்ளார்.

காட்டுயிர் மருத்துவ முன்னோடி: காட்டுயிர் மருத்துவ (Wildlife Veterinary) மேலாண்மை முன்னோடியாகத் திகழ்ந்தவர் சரபோஜி. அரசவைக் கவிஞர்களில் ஒருவரான பாலகாப்பிய முனி என்பவர் யானைகளுக்கு மருத்துவம் செய்வதை விரிவாக விளக்கும் ‘கஜசாஸ்திரம்’ எனும் ஆய்வுநூலைப் மராத்தி மொழியில் படைத்தார்.

மோடி ஆவணக் குறிப்புகளில் பல இடங்களில் பல வகையான உயிரினங்களின் நோய்களைக் குணப்படுத்தும் முறைகள் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. யானைகளைப் போலவே குதிரைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறைகளை ‘அஸ்வ சாஸ்த்ரா’ எனும் மராத்தி நூல் விளக்குகிறது. ஒட்டக நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.

சிவிங்கிப்புலிகளையும் (Cheetah), காரகல்பூனையையும் (Caracal) வைத்து மான்கள், பறவைகள் முதலியவற்றை வேட்டையாடி யுள்ளார். காரகல் வட இந்தியாவில் தென்படும் ஒரு பூனை வகை. இவற்றின் காதுகள் மேல் நோக்கி நீண்டும், மேல் பகுதி கறுப்பாகவும், காதுகளின் கூர்மையான நுனியில் கறுப்பு ரோமங்கள் நீட்டிக்கொண்டும் இருக்கும். மற்ற அரசர்கள்போல இவற்றை வைத்து சரபோஜி கேளிக்கைக்காக வேட்டையில் மட்டுமே ஈடுபடவில்லை.

அவற்றைக் கூர்ந்து கவனித்து, நெருங்கிப் பழகி அவர் அவதானித்ததை எழுதி ஆவணப்படுத்தினார். அரசவையில் இருந்த வெங்கடதாஸ் எனும் ஓவியரை வைத்து அவற்றை ஓவியமாகத் தீட்டவைத்துள்ளார். இவற்றைப் போலவே புலி, சிறுத்தை ஆகியவற்றின் விவரங்களையும், உடல் அளவுகளையும், அவற்றைப் பராமரிக்கும் முறைகள் பற்றியும் எழுதி ஆவணப்படுத்தியுள்ளார்.

சரபோஜி 1805இல் அதிராம்பட்டினத்திற்குச் சென்றபோது அங்கு கண்ட மீன்களை ஓவியமாகத் தீட்ட வைத்து உள்ளுறைஞரான பெஞ்சமின் டோரினுக்கு அனுப்பியுள்ளார். இதோடு அங்கிருந்த கிளிஞ்சல்கள், தவளை, நண்டு என இன்னும் பல கடல் உயிரினங்களின் ஓவியங்களையும் அனுப்பியுள்ளார்.

அப்படி அனுப்பப்பட்ட ஓர் ஓவியத்தின் விவரங்களில் Putticandoo பகுதியில் உள்ள காடுகளிலும், வேதாரண்யத்தில் உள்ள காடுகளிலும் Gaur - காட்டுமாடு இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் Putticandoo எனும் பகுதி எதுவென்று தெரியவில்லை. இந்தத் தகவலின் மூலம் தஞ்சாவூரில் காட்டுமாடுகள் இருந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து மேலும் ஆராய வேண்டும். பிரிட்டிஷ் நூலகத்தில் டோரினுக்கு சரபோஜி அனுப்பிய 117 ஓவியங்கள் உள்ளன. இது தவிர ஒரு சில ஓவியங்களை ‘Painted manuscripts of the Saraswati Mahal library’ எனும் நூலில் உள்ளன. இந்த நூல் தமிழ் இணைய மின்னூலகத்தில் கிடைக்கிறது. மேற்சொன்ன நூலகங்களில் உள்ள ஓவியங்கள், ஆவணங்கள் யாவற்றையும் எண்ணிமப்படுத்தி (digitization) இணையத்தில் பதிவேற்றினால் அவை அனைவருக்கும் பயன்படும்.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்