இயற்கையின் பேழையிலிருந்து! 21: ராட்லரின் சோழமண்டலக் கரையோரத் தாவரப் பயணம்

By ப.ஜெகநாதன்

சாலையோரமாக நடந்தே வெகுதூரம் புனிதப் பயணம் செல்வோரைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். இரவு பகல் பார்க்காமல், தூரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சில நேரம் காலணிகூட இல்லாமல், நடந்தே அவர்களது இலக்கை அடையும் குறிக்கோளுடன் செல்வதைப் பார்க்கும்போதெல்லாம், இதுபோல் நாமும் ஒரு முறையாவது பயணம் மேற்கொள்ள வேண்டும் எனப் பல முறை எண்ணியது உண்டு.

புனிதத் தலத்திற்குத்தான் இப்படிப் பயணம் மேற்கொள்ள வேண்டுமா? பறவைகளையும் தாவரங்களையும் நிலவமைப்புகளையும் பார்க்கவும் பதிவுசெய்யவும்கூடப் புனிதப் பயணம் மேற்கொள்ளலாம் அல்லவா? இந்தியப் பறவையியல் முன்னோடிகளில் ஒருவரான சாலிம் அலி மானசரோவர் ஏரிக்கும் கைலாய மலைக்கும் 1945இல் பயணம் மேற்கொண்டார்.

அவரது பயண அனுபவக் குறிப்புகளையும் வழியில் நோக்கிய பறவைகளைப் பற்றிய குறிப்புகளையும் ‘An Ornithological Pilgrimage to Lake Manasarowar and Mount Kailas’ எனத் தலைப்பிட்டு ஓர் அருமையான கட்டுரையை எழுதினார்.

தாவரப் பயணம்: டச்சு நாட்டிலிருந்து தரங்கம்பாடிக்கு 1776இல் வந்த யோஹான் பீட்டர் ராட்லர் (Johan Peter Rottler) எனும் தாவரவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பாதிரியாரைப் பற்றிய ஒரு கட்டுரை என்னை வியப்பில் ஆழ்த்தியது. தாவரவியலில் மட்டுமல்லாமல், தமிழிலும் இவர் புலமை பெற்று தமிழ்-ஆங்கிலம் அகராதியை (மூன்று தொகுதிகள்) தொகுத்தவர்.

பல தாவரங்களின் தமிழ்ப் பெயரை இவரது அகராதியில் காணலாம். 1803ஆம் ஆண்டு வரை தரங்கம்பாடியில் இருந்துவிட்டு, தற்போதைய சென்னையில் உள்ள வேப்பேரிக்கு இவர் மாற்றலாகி வந்தார். இங்கே இவரது பெயரில் ராட்லர் சாலை உள்ளது. நம்மை வியப்பில் ஆழ்த்தும் தகவல், இவர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தரங்கம்பாடியிலிருந்து மதராஸுக்குப் பயணம் மேற்கொண்டு, பின்னர் தரங்கம்பாடிக்கே திரும்பவும் பயணித்துள்ளார்.

சென்றுவந்த வழி எங்கும் மதபோதனையை மட்டுமே செய்யாமல், தாவரங்களையும் சேகரித்து அவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதி ஆவணப்படுத்தியுள்ளார். இந்தப் பயணத்தின்போது ராட்லர், தான் சேகரித்த தாவரங்களை அக்காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த தாவரவியலாளரான வில்லியம் ராக்ஸ்பர்கிற்கு அனுப்பி, அவற்றின் அடையாளம் குறித்த கருத்துகளைக் கேட்டிருக்கிறார்.

இதன் பின்னர் அவர் சேகரித்த உலர்தாவரத் தொகுப்பினை பெர்லினில் இருந்த சி.எல்.வில்டனவ் எனும் தாவரவியலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார். அத்தாவரங்கள் குறித்த விவரங்களை பெர்னிலிருந்து வெளியாகும் இயற்கை சார்ந்த அறிவியல் இதழில் 1803இல் வில்டனவ் கட்டுரையாக எழுதியுள்ளார்.

ஆனால், இந்தக் கட்டுரை ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்டது. தமிழ்நாட்டின் மூத்த தாவரவியலாளரான காலஞ்சென்ற கே.எம்.மேத்யூ 1993இல் ஜெர்மானிய மொழி தெரிந்த இரண்டு பேரின் உதவியுடன் இக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஓர் அறிவியல் இதழில் வெளியிட்டார்.

சென்னையில் மறைந்து போன தாவரங்கள்
வெண் கோஷ்டம் எனும் இஞ்சி வகைத் தாவரம்

மூன்று கட்டப் பயணம்: ராட்லரின் பயணம் மூன்று கட்டங்களாகத் தரப்பட்டுள்ளது.

1. தரங்கம்பாடியிலிருந்து மதராஸ் (24 செப்டம்பர் - 7 அக்டோபர் 1799)

2. மதராஸ் அதனையடுத்த பகுதிகள் (8 அக்டோபர் – 28 டிசம்பர் 1799)

3. கடலூர் அருகேயுள்ள வந்தவாசி வழியே தரங்கம்பாடி (28 டிசம்பர் 1799 – 16 ஜனவரி 1800)

இவரது பயணத்தின் முதல் கட்டத்தில் தரங்கம்பாடியிலிருந்து சீர்காழி, கொள்ளிடம், பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, ஆலம்பாறை, சத்ராஸ் (சதுரங்கப்பட்டினம்), மகாபலிபுரம், திருப்போரூர் ஆகிய ஊர்கள் வழியே மதராசை அவர் அடைந்துள்ளார்.

பின்னர் மதராசில் லிட்டில் மவுன்ட் (பரங்கிமலைக்கு அருகிலுள்ள பகுதி), மாம்பலம், ரெட் ஹில்ஸ் (செங்குன்றம்), பல்லாவரம் ஆகிய பகுதிகளில் சுமார் மூன்று மாதங்கள் பயணித்துத் தாவரங்களைச் சேகரித்துள்ளார்.

வந்த வழியில் திரும்பிச் செல்லாமல் கள்ளஞ்சாவடி அல்லது கந்தன்சாவடி, முடிச்சூர், படப்பை, திருப்பன்னம் (திருப்பனமூர்?), மடிப்பாக்கம், சீவரம், பாலூர் (?), காவாந்தண்டலம், செய்யாறு, உத்திரமேரூர், வெள்ளக்கோடு (?), வந்தவாசி, விழுதுப்பட்டு, திண்டிவனம், பெரும்பாக்கம், இரியூர், திருவக்கரை, கடலூர், கொள்ளிடம் வழியே 16 ஜனவரி 1800 அன்று தரங்கம்பாடிக்குத் திரும்பியுள்ளார்.

ராட்லர் சென்று வந்த
ஊர்களின் நிலப்படம்

பெயர்க் குழப்பம்: ஊரின் பெயர்கள் யாவும் ராட்லர் இருந்த காலத்தில் வழங்கியதுபோல எழுதப்பட்டிருக்க, அவற்றிற்கு ஒப்பாக 90களில் வழங்கப்பட்ட ஆங்கிலப் பெயர்களை கே.எம்.மேத்யூ பட்டியலிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக தரங்கம்பாடி அக்காலத்தில் Tranquebar என்று எழுதப்பட்டதை Tarangambadi என்று தந்துள்ளார்.

எனினும் ஒரு சில இடங்களைக் கண்டறிய முடியவில்லை. ஆங்கிலத்தில் Wengkodu என்பது Vellakodu? என்றும், Woolimodu என்பதை Viludippattu என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊரின் பெயருக்கு அருகில் உள்ள கேள்விக்குறி, அந்த ஊராக இருக்கலாம் என்பதை கே.எம்.மேத்யூ அனுமானித்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.

ராட்லர் Gallaburam என்று குறிப்பிட்டுள்ள இடம் பல்லாவரம் என்பதையும் மேலும் மதராசைச் சுற்றியுள்ள சில இடங்களின் தற்போதைய பெயர்களை அனந்தநாராயணன் ராமன் எழுதிய கட்டுரைகளின் வாயிலாக அறிய முடிகிறது.

கே.எம்.மேத்யூ அவரது கட்டுரையில் ராட்லர் சென்ற இடங்களின் பெயர்களை மட்டுமல்லாமல், அவற்றின் நிலப்படங்களையும், அவர் ஆவணப்படுத்திய தமிழ்ப் பெயர்களின் பட்டியலையும் (எடுத்துக்காட்டாக புரசு, நந்தியாவட்டை, ஆகாசக் கிழங்கு), ராட்லர் கட்டுரையில் உள்ள தாவரங்களின் அறிவியல் பெயர்ப் பட்டியலையும் தந்திருக்கிறார்.

அறிவியலாளரும் சென்னையின் வரலாறு குறித்து எழுதுபவருமான அனந்தநாராயணன் ராமனும், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த னிவாசன் பிரசாத்தும், ராட்லர் தமது பயணத்தின்போது மதராஸ் பகுதிகளில் பதிவுசெய்த தாவரங்களின் தொகுப்பு, அவற்றின் தற்போதைய பரவல் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையை 2010இல் எழுதினர்.

ராட்லருக்குப் பிறகு, மதராஸ் பகுதிகளில் உள்ள தாவரங்களை ஆவணப்படுத்திப் பலர் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் முக்கியமான (அதாவது மதராசின் பல பகுதிகளில் களஆய்வு செய்யப்பட்ட) நூல்களான பி.வி.மயூரநாதன் எழுதிய ‘மெட்ராஸ் நகரத்தின் பூக்கும் தாவரங்கள்’ (1929இல் வெளியானது) என்கிற நூலையும், இதன் தொடர்ச்சியாக இ. பார்னஸ் 1938இல் வெளியிட்ட நூலையும், சி.லிவிங்ஸ்டனும் ஏ.என்.ஹென்றியும் 1994இல் எழுதிய நூலையும் ராமன், பிரசாத் இணையர் ஒப்பாய்வு செய்தனர்.

இதில் எந்தெந்தத் தாவரங்கள் 200 ஆண்டுகளுக்குப் பிறகும் மதராஸ் பகுதிகளில் தென்படுபவை, புதிதாக இப்பகுதிகளில் பதிவுசெய்யப்பட்டவை, தற்போது பதிவுசெய்யப்படாதவை ஆகிய விவரங்களைத் தங்களது நூலில் தந்துள்ளனர்.

மறைந்த தாவரங்கள்: மதராஸ் பகுதிகளில் 80 வகையான தாவரங்களை ராட்லர் பதிவுசெய்துள்ளார். இவற்றில் 47 வகையான தாவரங்கள் 1929இல் பதிவு செய்யப்படவில்லை. மீதமுள்ள 33 வகையான தாவரங்களுடன் சேர்ந்து புதிதாக 10 தாவர வகைகள் இருப்பது, 1994இல் வெளிவந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ராட்லர் கால மதராசில் தென்பட்ட வெண் கோஷ்டம் எனும் இஞ்சி வகைத் தாவரமும் (Costus Speciosus), செங்கருங்காலி (Senegalia Chundra) மரமும் தற்போது உள்ள சென்னையில் முற்றிலுமாக அற்றுப்போய் விட்டன என்பது இந்த ஒப்பாய்வில் தெரியவந்துள்ளது.

ராட்லர் தென்னிந்தியாவில் வாழ்ந்த 60 ஆண்டுகளில் சுமார் 2,000 தாவர மாதிரிகளை உலர்தாவரத் தொகுப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். இவை அனைத்தும் தாவரவியலாளர்களின் ஆராய்ச்சி களுக்குப் பல வகையில் உதவியாக இருந்துள்ளன. இருநூறு ஆண்டுகளுக்கு முன் சேகரித்தவற்றை உலர்தாவரத் தொகுப்பாகவும், எழுதிவைத்தும் முறையாக ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியமானது என்பதை இன்றளவும் இந்தத் தரவுகள் பயன்படுவதை வைத்து நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்