பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தாவரங்களையும் விலங்குகளையும் அறிவியல் முறைப்படி ஆவணப்படுத்த ஆரம்பித்தனர். இது தவிர கனிம வளங்களைக் கண்டறிதல், மானுடவியல், இனவரைவியல், நிலப்படங்கள் தயாரித்தல் எனப் பல அறிவியல் துறைகளில் அவர்களது ஆதாயத்திற்காக ஆராய்ச்சிகளை முன்னெடுத்துப் பல நூல்களையும் கட்டுரைகளையும் பதிப்பித்தனர்.
இவற்றில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களின் பெயர்களே முதன்மையாக இருக்கும். எனினும், உள்ளூர் மக்கள் பலரும் அவர்களுடைய களப்பணியிலும், நூல்களை எழுதுவதிலும், அதற்கான ஓவியங்களை வரைவதிலும் பல வகையில் பங்களித்துள்ளனர். ஆனால் அவர்களது பெயர்களை வெகு அரிதாகவே நாம் அந்தப் படைப்புகளில் காண முடியும்.
அது போலவே அறிவியல் துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே பெண்கள் பலர் பெரும் பங்களித்திருந்தாலும் (அவர்கள் ஆங்கிலேயர்களாக இருந்தாலும்கூட), அவை அறியப்படாமலோ, கண்டுகொள்ளப்படாமலோ, அவர்களது படைப்புகள் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டோ, தகுந்த அங்கீகாரம் தரப்படாமலோதான் இருந்திருக்கின்றன.
ஓவியங்களைப் பொறுத்தவரை பல படைப்புகளில் அவற்றை வரைந்தது யார் என்பதே குறிக்கப்படாமல் இருக்கும். இதனால் வரையப்பட்ட விதத்தையோ தனித்துவத்தை வைத்தோதான் இவை ஒரே ஓவியரால் வரையப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டது.
» 650 நெல் ரகங்களை பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது
» பொது சிவில் சட்டம் நிறைவேற்ற உத்தராகண்ட் சட்டப்பேரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது
இந்திய ஓவியர்களுக்கு இயற்கை சார்ந்த ஓவியங்களை வரையும் அனுபவம் இல்லாததால், தாவரங்களையும் விலங்குகளையும் நுணுக்கமாக, உள்ளதை உள்ளபடி வரைவதற்கு ஆங்கிலேயர்கள் அவர்களுக்குப் பயிற்சியளித்தனர். அதற்கு முன் இவர்கள் பெரும்பாலும் அரசவை ஓவியர்களாகப் பணிபுரிந்தவர்களாக இருந்திருக்கக்கூடும்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பாலான ஓவியர்கள் தஞ்சாவூர் பாணி ஓவியங்களை வரையும், மூச்சீஸ் (Moochies) என்று அழைக்கப்பட்ட தெலுங்கு பேசும் ராஜு, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்கள் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தற்போதுள்ள ஆந்திரப் பகுதிகளில் இருந்து தெற்கு நோக்கிப் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம்.
சோழ மண்டலக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள தாவரங்களை 1780 களில் ஆவணப்படுத்திய வில்லியம் ராக்ஸ்பர்க் தாமிரத் தகட்டில் செதுக்கி (Engraving) வரையப்பட்ட ஓவியங்களையும், அச்சுக் கட்டைகளைக் (Wood block) கொண்டு துணிகளில் அச்சிடும் சீந்த் (ஆங்கிலத்தில் Chintz) அச்சு ஓவியர்களை வைத்துமே தனக்குத் தேவைப்பட்ட தாவர ஓவியங்களை வரையவைத்துள்ளார்.
மதராஸ் மாகாண வனத்துறையின் முதல் வனக்காப்பாளரான ஹ்யூ கிளெக்ஹான் தற்போதைய கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவில் இருந்தபோது சந்தனமரக் கடைசலில் ஈடுபடும் சமூகத்தினரை வைத்து அங்குள்ள தாவரங்களை சுமார் 500 ஓவியங்களில் ஆவணப்படுத்தினார். எனினும், இவற்றில் ஒன்றில்கூட இவற்றை வரைந்த ஓவியரின் பெயர் இல்லை.
தென்னிந்தியாவின் தாவர வகைப் பாட்டியலின் முன்னோடிகளில் ஒருவரான ராபர்ட் வைட் 1840களில் எழுதிய தாவரவியல் நூல்களில் கற்பாள அச்சுமுறையில் அச்சடிக்கப்பட்ட (லிதகிராப்) ஓவியங்களைத் தந்துள்ளார். இதே காலகட்டத்தில் இருந்த மற்ற ஆங்கிலேய உயிரியலாளர்களைப் போல அல்லாமல், இவரது நூல்களில் உள்ள ஓவியங்களில் வரைந்தவர்களின் பெயரைக் காணலாம். குறிப்பாக ரங்கையா (Rungiah), கோவிந்து (Govindoo) ஆகிய இரண்டு ஓவியர்களை வைத்தே பெரும்பாலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவரான ஜான் ரே லத்தீன் மொழியில் 1713ஆம் ஆண்டு பதிப்பித்த நூல் சினாப்சிஸ் மேதோடிக்கா ஏவியம் & பிஸ்கம் (Synopsis Methodica Avium & Piscium). இதில் ஒரு பகுதியாக ஏவியம் மட்ராஸ்பட்டனரம் (Avium Maderaspatanarum) எனும் தலைப்பில் அப்போதைய மதராசப்பட்டினத்தில் பார்க்கப் பட்ட பறவைகளின் பட்டியலும், அவற்றின் கோட்டோவியங்களும் தரப்பட்டுள்ளன. அந்தப் பறவைகள் குறிப்பில் ஓரிடத்தில் ராஜண்ணா (Rajana) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஓவியங்களை நம்மூர் ஓவியர்களை வைத்து வரைந்து, அந்த நூலில் இடம்பெறச் செய்தவர் எட்வர்டு பல்க்லி. எனினும், அந்த ஓவியரைப் பற்றி அதற்கு மேல் எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.
இந்தியப் பறவையியலின் முன்னோடிகளில் ஒருவரான டி.சி. ஜெர்டான் திருச்சியில் இருந்தபோது உள்ளூர் ஓவியர்களை வைத்து 50 இந்தியப் பறவை ஓவியங்களை வரைய வைத்திருக்கிறார். இவற்றை Illustrations of Indian Ornithology எனும் தலைப்பில் 1843 – 1847 வரை பதிப்பித்துள்ளார். இந்த ஓவியர்கள் அதற்கு முன் அரசவையில் உள்ள ராஜாக்களையும், ராணிகளையும் அரிசித்தாளிலும் (Rice paper), மைக்காவிலும் (இது ஆங்கிலத்தில் Trichinopoly talc என்று அறியப்படுகிறது) வரைந்து கொண்டிருந்தவர்கள். இவர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தியப் பறவைகளை ஓவியங்களாகத் தீட்டவைத்துள்ளார். இவற்றில் 24 ஓவியங்களில் சி.வி.கிஸ்ட்னராஜு (C. V. Kistnarajoo) என்பவரின் பெயரைக் காண முடிகிறது.
மார்கரெட் புஷ்பை லாசெலஸ் கோபர்ன் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த ஒரு பெண் பறவையியலாளர். இவர் 1829ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்து தமது 98ஆவது வயதில் (1928ஆம் ஆண்டு) கோத்தகிரியில் மறைந்தார். இவர் கோத்தகிரியில் இருந்த காலத்தில் அங்குள்ள பறவைகளின் கூடு, இனப்பெருக்கம் செய்யும் காலம் முதலியவற்றை கூர்ந்து கவனித்து, அந்தக் குறிப்புகளை இந்தியப் பறவையியலின் தந்தை என அறியப்படும் ஆலன் ஆக்டேவியன் ஹியூமிற்குத் தொடர்ந்து அனுப்பி வந்திருக்கிறார். ஹியூம் 1889இல் எழுதிய இந்தியப் பறவைகளின் கூடுகளும் முட்டைகளும் (The nests and eggs of Indian birds) எனும் நூலில் மார்கரெட் கோபர்னின் குறிப்புகளைப் பல இடங்களில் காணலாம். ஹியூமே இவரது கூர்ந்துநோக்கும் பண்புகளையும், விவரமான குறிப்புகளையும் அந்த நூலில் பாராட்டி எழுதியுள்ளார். மார்கரெட் கோபர்ன் ஒரு சிறந்த ஓவியரும்கூட. கோத்தகிரி பகுதியில் உள்ள பறவைகள், பூக்கள், தாவரங்கள், வண்ணத்துப்பூச்சிகள் யாவற்றையும் மிகவும் அழகாக அவர் ஓவியமாகத் தீட்டியுள்ளார். இவரது காலத்தில் வாழ்ந்த பல ஆண் பறவையியலாளர்களின் ஒளிப்படங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியப் பறவையியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த மார்கரெட் கோபர்ன் எப்படி இருப்பார் என இன்றுவரை யாருக்கும் தெரியாது என்பது வேதனையான ஒன்று. இவரது ஓவியமும் பறவைக் குறிப்புகளுமே இவரது ஒரே அடையாளம்.
டி.சி.ஜெர்டானின் மனைவியும் தாவரங்களை வரைவதில் திறமையானவர். தாவரவியலாளரான ராபர்ட் வைட் இவரது திறமையைப் போற்றும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே தென்படும் ஒரு வகை காட்டுக் காசித்தும்பைச் (Balsam) செடிக்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளார். அந்தச் செடியின் அறிவியல் பெயர் என்ன தெரியுமா? இம்பெஷன்ட்ஸ் ஜெர்டானியே! ஆனால், அவரது பெயர் புளோரா அலெக்சாண்ட்ரியா மாடில்டா மெக்லோட். சரி பெயர் நீளமாக இருந்தால் என்ன, சுருக்கமாக இம்பெஷன்ட்ஸ் புளோரா என்றாவது வைத்திருக்கலாம் அல்லவா? இன்னும் ஓர் எடுத்துக்காட்டு ஜான் கௌல்டு ஓர் இயற்கையியலாளர், பறவை ஓவியர். இவரது மனைவியும் சிறந்த பறவை ஓவியர். இமயமலைப் பகுதிகளில் தென்படும் ஒரு தேன்சிட்டுக்கு இவரது நினைவாகப் பெயர் வைக்கப்பட்டது. Mrs. Gould’s Sunbird அதாவது திருமதி கௌல்டின் தேன்சிட்டு! ஆனால், அவரது பெயரோ எலிசபத் கௌல்டு!
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்து இந்த நிலை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. எனினும் இயற்கை சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளையும், பங்களிப்பிற்கான அங்கீகாரங்களையும் பெண் களும், இந்தச் சமூகத்தில் வாழும் பலரும், இன்றுவரை மிகவும் சிரமப்பட்டே பெற முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை.
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர். | தொடர்புக்கு: jegan@ncf-india.org
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago