காலநிலைப் பேரிடர்: மிகவும் சூடான 2023

By செய்திப்பிரிவு

# கடந்த லட்சம் ஆண்டுகளிலேயே 2023தான் மிகவும் சூடான ஆண்டு என்கிற ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள போலோக்னாவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றப் பணிகள்’ என்கிற அமைப்பு, இத்தகவலை வெளியிட்டுள்ளது.
# 2023இன் எல்லா நாள்களிலும், உலகம் தொழில் மயமானதற்கு முந்தைய காலத்தில் நிலவியதைவிட ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாகவே இருந்ததாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
# பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் 2015இல் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடந்தது. 2045இல் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தொட்டிருக்கும் என அப்போது கணிக்கப்பட்டது. ஆனால், அச்சுறுத்தி வந்த அந்த இலக்கை புவி 2034லேயே எட்டிவிடும் என்பதற்கான அறிகுறியாக 2023 நிலவரம் உள்ளதாக இவ்வமைப்பு கூறியுள்ளது.
# உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொல்லியல் சான்றுகள், மரங்களின் ஆயுளைக் கணிக்கும் மரவளையங்கள், பனிப்பாறைகளில் காணப்படும் காற்றுக்குமிழிகள் போன்றவற்றை ஆராய்ந்ததில், இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
# 2023இல் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் வாயுக்களின் வெளியேற்றம், அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருந்ததே, இந்த நிகழ்வுக்கு முதன்மையான காரணம் எனக் கூறப்படுகிறது

வலசை பயணத்திலும் மாற்றம்: சிலிகா ஏரி ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி, குர்தா, கஞ்சம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள உப்பு நீர் ஏரியாகும். ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை காஸ்பியன் கடல், பைக்கால் ஏரி, ஆரல் கடல், ரஷ்யாவின் பிற தொலைதூரப் பகுதிகள், மங்கோலியாவின் கிர்கிஸ் புல்வெளிகள், மத்திய - தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளிலிருந்து கூழைக்கடா, பூநாரை, வெள்ளை வயிறு ஆழிக்கழுகு, இலைக்கோழி, கொக்கு உள்ளிட்ட 97 பறவையினங்கள், இந்த ஏரிக்கு வலசை வருவது வழக்கம்.

இவை வாழும் பகுதிகளில் குளிர் அதிகமாகும்போது, அவற்றைவிட வெப்பம் அதிகமாக உள்ள சிலிகா ஏரிக்கு வலசை வரும். இந்த ஆண்டு, இவை விரைவாகவே ஏரியை வந்தடைந்துவிட்டன. இவற்றின் வாழிடங்களில் குளிர்காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டதுதான், இதற்குக் காரணம். புவி வெப்பமாதல் காரணமாக ஏற்படும் மாற்றங்களில் இதுவும் ஒன்று எனச் சுற்றுச்சூழலியலாளர்கள் கூறுகின்றனர். - ஆனந்தன் செல்லையா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE