நாட்டு மாடுகளே நல்லவை

By செய்திப்பிரிவு

இந்தியாவின் பால் உற்பத்திப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 1970இல் மத்திய அரசு ஜெர்சி, ப்ரவுன் சுவிஸ், ரெட் டேன் உள்ளிட்ட வெளிநாட்டு இனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த இனப் பசுக்கள், உள்நாட்டுப் பசுக்களைவிட அதிக அளவில் பால் தந்தன. அதனால் 1970இல் தலைக்கு 110 கிராமாக இருந்த பால் உற்பத்தி 2022இல் 433 கிராமாக அதிகரித்தது. ஆனால், சமீபத்தில் வெளியான டெல்லி அறிவியல், சூழலியலுக்கான மையத்தின் அறிக்கை, மாறிவரும் காலநிலையில் இந்த வெளிநாட்டுப் பசு இனங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்கிறது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் “தினமும் நோய்வாய்ப்பட்டு 15-16 வெளிநாட்டு இனப் பசுக்கள் வருகின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது வெறும் 2,4 உள்நாட்டு இனப் பசுக்கள்தாம் சிகிச்சைக்காக வருகின்றன” என்கிறார்.

‘ஆசியன் ஜர்னல் ஆஃப் டெய்ரி அண்ட் ஃபுட் ரிசர்ச்' இதழில் உத்தரப்பிரதேச ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் சில தொற்றுநோய்களில் நாட்டுப் பசுக்களுக்கு வெளிநாட்டு இனப் பசுக்களைவிடத் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் வெப்பமண்டல ஒட்டுண்ணிப் பாதிப்புகளுக்கும் இந்த வகை வெளிநாட்டு இனப் பசுக்கள் உள்ளாவதும் அதிகம். இதில் வெளிநாட்டு இனப் பசுக்களின் இறப்பு விகிதம் 40-90 சதவீதமாகும். அதற்கு ஒப்பாக நாட்டு இனப் பசுக்களின் இறப்பு விகிதம் வெறும் 3 சதவீதம்தான் என்கிறது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டு ஆய்வறிக்கை. - விபின்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE