இயற்கையின் பேழையிலிருந்து! - 13: 300 ஆண்டுகளுக்கு முன் ஜார்ஜ் கோட்டைப் பறவைகள்

By ப.ஜெகநாதன்

இந்தியாவில் பறவைகள் குறித்த தகவல்கள் பழைய இலக்கியங்களில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்த பறவைகளை அவதானித்து, அவற்றைச் சேகரித்து அல்லது படமாக வரைந்து முறையாக ஆவணப்படுத்தியது ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர்தான். அந்த வகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் இப்படிப்பட்ட ஒரு பறவைப் பட்டியல் வெளியிடப்பட்டது மதராசபட்டினத்திலிருந்துதான் (தற்போதைய சென்னை) என்றால் வியப்பாக இருக்கிறது! அதுவும் 300 ஆண்டுகளுக்கு முன்!

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவருமான ஜான் ரே லத்தீன் மொழியில் பதிப்பித்த சினாப்சிஸ் மேதோடிகா ஏவியம் & பிஸ்கம் (Synopsis Methodica Avium & Piscium) என்கிற நூல் உலகின் பல இடங்களில் உள்ள பறவைகள், மீன்கள் குறித்த சுருக்கமான தகவல்களைக் கொண்டது. இந்த நூலில் ஒரு பகுதியாக ‘ஏவியம் மட்ராஸ்பட்டனரம்’ (Avium Maderaspatanarum) எனும் தலைப்பில் அப்போதைய மதராசப்பட்டினத்தின் புனித ஜார்ஜ் கோட்டைப் பகுதியிலிருந்து பார்க்கப்பட்ட பறவைகளின் சுருக்கமான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இந்தப் பறவைப் பட்டியலைத் தயாரித்து, அப்பறவைகளின் வரைபடங்களை நம்மூர் ஓவியர்களை வைத்து வரைந்து, அந்த நூலில் உள்ள கட்டுரையில் இடம்பெறச் செய்தவர் எட்வர்டு பல்க்லி (Edward Bulkley) என்பவர். இந்த நூல் வெளிவந்தது 1713ஆம் ஆண்டு!

மதராசப்பட்டினப் பறவைகள்: வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படும் கார்ல் லின்னேயஸ், (Carolus Linnæus) என்பவர் சிஸ்டெமா நேச்சரே (Systema Naturae) எனும் உயிரினங்களின் வகைப்பட்டு நூலை 1735இல் வெளியிட்டார். அப்போதிலிருந்துதான் உயிரினங்களை இருசொல் வைத்துப் பெயரிடும் முறை தொடங்கியது. அதற்கு முன்பு ஜான் ரே போன்றவர்களால் ஓர் உயிரினத்தின் பண்பு, தோற்றம் ஆகியவற்றை வைத்து நீண்ட விளக்கங்கள் கொண்ட பெயர்களை இடுவதுதான் வழக்கில் இருந்தது. இது போலவே எட்வர்ட் பல்க்லியும் இப்பறவைகளின் பெயர்களைத் தந்துள்ளார். அந்தக் கட்டுரையில் மொத்தம் 27 வகையான பறவைகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

எனினும் 24 வரைபடங்கள்தாம் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பறவைகளின் தமிழ்ப் பெயரையும், 17 பறவைகளின் தெலுங்குப் பெயரையும் கட்டுரையில் தந்துள்ளார். தற்போது வெண்மார்பு கானாங்கோழி என அழைக்கப்படும் பறவையை ஆங்கிலத்திலேயே Caunangoly அதாவது கானாங்கோழி என்றும், அதன் ஆங்கிலப் பெயராக Madrass Rail-Hen (இதன் தற்போதைய ஆங்கிலப் பெயர் White-breasted Waterhen) என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழில் நீர் கிழிப்பான் (தற்போதைய ஆங்கிலப் பெயர் Indian Skimmer) என்று அழைக்கப்படும் பறவைக்கு Coddel Cauka, அதாவது ‘கடல் காக்கா’ என்றும் அதன் ஆங்கிலப் பெயராக Madrass Sea-crow என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலில் உள்ள வரை படங்களை வைத்து எல்லாப் பறவைகளையும் சரியான முறையில் அடையாளம் காண முடியவில்லை. மேலும் பறவைகள் குறித்த விளக்கங்கள் யாவும் லத்தீன் மொழியில் இருப்பதால் அதன் பொருளைப் புரிந்துகொள்வதும் சற்றுச் சிரமம். பதினாறு வகையான பறவைகளை மட்டுமே இந்நூலிலிருந்து அடையாளம் காண முடிந்தது. இணையத்தில் இந்த நூல் கறுப்பு-வெள்ளையில்தான் கிடைக்கிறது. இந்நூலின் அச்சுப் பிரதியில் இப்பறவைகளின் வரைபடங்கள் பல வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் இப்போது பிரிட்டீஷ் நூலகத்தில் உள்ளது.

பறவைகளின் பெயரும் வகைப்பாடும்: பொதுவாக ஓர் உயிரினத்தை, இது இன்ன வகையை, இன்ன இனத்தைச் சேர்ந்தது என வகைப்படுத்துவது, அவற்றின் உருவ மாதிரிகளை (Specimens) வைத்துத்தான். ஆனால், சில உயிரினங்கள் அவற்றின் வரைபடங்களை வைத்தே இது புதிய வகையான உயிரினம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வேதிவால் குருவியும் (Indian Paradise Flycatcher), கறுப்பு வெள்ளை வாலாட்டியும் (White-browed Wagtail) எட்வர்ட் பல்க்லியின் கட்டுரையில் உள்ள கோட்டோவியத்தை வைத்தே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கறுப்பு வெள்ளை வாலாட்டியின் அறிவியல் பெயர் மோண்டாசில்லா மெடராஸ்பட்டன்சிஸ் (Motacilla maderaspatensis) என்பதில் இரண்டாவதாக உள்ள பெயர் ‘மெட்ராஸ்’ என்பதைக் குறிக்கும் என்பது புரிந்திருக்கும்.

இது போலவே Madrass Jay என்று ஒரு பறவையும் இந்தக் கட்டுரையில் உள்ளது. இதன் தெலுங்குப் பெயர் பொன்னுக்கிப் பிட்டா (Ponnunky Pitta) என்று தரப்பட்டுள்ளது. ‘பிட்டா’ (குழந்தை) என்றால் தெலுங்கில் சிறிய பறவை என்று பெயர். இதில் சிறப்பு என்னவென்றால் இதில் உள்ள பிட்டா Pitta எனும் தெலுங்கு வார்த்தை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த பறவைகளின் பெயராக வைக்கப்பட்டதற்கு அடிப்படை இந்தக் கட்டுரைதான். இந்த Madrass Jay தான் தற்போது வழக்கில் உள்ள Indian Pitta வாக (தமிழில் ஆறுமணிக் குருவி) ஆனது. குண்டுகரிச்சான் என்று நாம் அழைக்கும் Oriental Magpie Robin பறவையின் அறிவியல் பெயர் Copsychus saularis. இங்கே எட்வர்ட் பல்க்லி அவரது கட்டுரையில் இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயராக Cock Saulary (ஆண் பறவை), Hen Saulary (பெண் பறவை) என்று தந்துள்ளார். இந்த Saulary தான் இப்பறவையின் அறிவியல் பெயரில் saularis என்று தரப்பட்டுள்ளது. செளலரி - Saulary என்பது ஓர் இந்தி வார்த்தை. இதற்கு ‘நூறு பாடல்கள்’ என்று பொருள். குண்டுகரிச்சான் இனிமையாகத் தொடர்ந்து பல ஒலிகளை எழுப்பிப் பாடுவதால் இந்தியில் இப்பெயர் பெற்றது.

எட்வர்டு பல்க்லி: இந்தக் கட்டுரையை எழுதிய ஆங்கிலேயரான எட்வர்டு பல்க்லி ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணர். இவர் புனித ஜார்ஜ் கோட்டையில் மருத்துவராகச் சேர்ந்தது 1692இல். இந்தியாவிலேயே முதன்முதலாகப் பிரேதப் பரிசோதனையைச் (1693இல்) செய்தவராக அறியப்படுகிறார். இவரது சமாதி மதராஸ் மருத்துவக் கல்லூரிக்கு எதிரே உள்ள ராணுவ வளாகத்தில் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் இவரைப் போன்ற அதிகாரிகள், அவர்களது துறைசார்ந்த வேலைகளை மட்டுமே செய்யாமல் அவர்களுக்கு விருப்பமுள்ள வேறு துறைகளைப் பற்றிய தகவல்களையும் சேகரித்து அறிவியல் அறிவு மேம்படப் பங்களித்துள்ளனர்.

அது போலவே, எட்வர்டு பல்க்லி மதராஸ் பகுதிகளில் இருந்த தாவரங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து (முக்கியமாக மருத்துவக் குணமுள்ள மூலிகைத் தாவரங்கள்) லண்டனில் இருந்த ஜேம்ஸ் பெட்டிவர் எனும் மருந்துக் கலவையாளருக்கு அனுப்பி வந்திருக்கிறார். அப்படி அனுப்பப்பட்டதுதான், இந்தப் பறவைகள் பற்றிய குறிப்பும். இப்படி ஒரு சில பறவைகளை வகைப்படுத்துவதற்கும், பெயரிடுவதற்கும் அடிப்படையாக அமைந்தது ‘நம்ம சென்னை’யில் இருந்து எழுதப்பட்டது இந்தக் கட்டுரை என்பது ஒரு சுவாரசியமான, பெருமைக்குரிய விஷயம் தானே!

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்