அது ஒரு செப்டம்பர் மாதக் காலை நேரம். என் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பரந்து விரிந்த புல்வெளி. வெம்மை அதிகமில்லாத அந்த இளங்காலை சூரிய ஒளியில் முழங்கால் அளவிற்கு வளர்ந்திருந்த புற்களின் இளம்பச்சை நிறம் பளீரெனத் தெரிந்தது. மேகங்கள் அற்ற வானம். அப்படி ஓர் அழகான இடத்தை அதுவரையில் நான் கண்டதில்லை. மெல்லிய காற்று தலைமுடியைக் கோதிச் சென்றது. காலை வேளையில் சுறுசுறுப்பான பறவைகளின் இனிமையான குரலொலிகள் அந்த இடத்தை நிரப்பிக்கொண்டிருந்தன. அவற்றில் தனித்துக் கேட்டது குவிக்குவிக்.....குவிக்குவிக்....எனும் இனிமையான குரலொலி. அது எந்தப் பறவையினுடைய அழைப்பு என அருகிலிருந்தவரிடம் கேட்டபோது, அதுதான் மழைக்காடை (Rain Quail) என்றார்.
அந்தத் திகைப்பூட்டும் குரலோசையை வியந்து ரசித்துக்கொண்டிருந்தபோதே, உடனிருந்தவர் என் தோளைத் தொட்டு எதிரே இருந்த புல்வெளியைக் காட்டினார். பசுமையான புற்களுக்கிடையே கறுப்பாக இருந்த ஓர் ஆண் வரகுக்கோழி, தலையை மேலே உயர்த்துவதும் பின் கீழே குனிந்து இரை தேடுவதுமாக இருந்தது. நான் வரகுக்கோழியை முதன்முதலாகக் கண்டது அப்போதுதான். இது நடந்தது 23 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ரோலப்பாடு காட்டுயிர் சரணாலயத்தில்.
அற்புதக் காட்சி: தமிழ்நாட்டிலும் இது போன்ற பரந்த புல்வெளிகள் பல இடங்களில் இருந்தன. கானமயில்/கானல்மயில்களின் (Great Indian Bustard) வாழிடமான புல்வெளிகள்தாம் வரகுக்கோழிகளின் வாழிடமும். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் வரகுக்கோழியின் தலை, உடலின் கீழ்ப்பகுதி யாவும் கறுப்பு நிறத்தில் இருக்கும். கழுத்து வெள்ளையாக இருக்கும். பின்னந்தலையில் கறுப்பு சிறகுகள் ஒன்றிரண்டு சிலுப்பிக்கொண்டிருக்கும். மேல் பகுதி பழுப்பு நிறத்திலும் அதில் கறுப்புத் திட்டுகளும் இருக்கும். இறக்கைகளை மடக்கி வைத்திருக்கும்போது பெரிய வெள்ளைத்திட்டு உடலின் பக்கவாட்டில் இருப்பது தெரியும். பார்ப்பதற்குக் கோழியின் அளவை ஒத்திருந்தாலும் கால்கள் நீண்டு காணப்படும்.
பெட்டையைக் கவர்வதற்காகக் காலையிலும், மாலையிலும் ஆண் வரகுக்கோழி கால்களை உந்தி, இறக்கைகளைப் படபடவென அடித்து சுமார் ஒரு மீட்டர் வரை குதித்து மேலெழுந்து, மீண்டும் அதே இடத்தில் இறங்கி நிற்கும். மேலே எழும்பும்போது கழுத்தை வளைத்துப் பின்னோக்கி உடலின் மேல் கிடைமட்டமாக வைத்துக்கொள்ளும். கால்களையும் மேலே இழுத்துக்கொள்ளும். இப்படி இவை மேலே எழுந்து இறக்கைகளைப் படபடவென அடித்துக்கொள்ளும்போது ஏற்படும் ஒலி, கிலுகிலுப்பையிலிருந்து வரும் ஒலியை ஒத்திருக்கும். இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் கண்டுகளிக்க விரும்பும் ஓர் அற்புதக் காட்சி இது.
» ஹலால் சான்றிதழுக்கு தடை விதித்தது சரிதான்: உ.பி. மவுலானா கருத்து
» ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - ஆந்திர முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அழியும் தறுவாயில்... பெட்டை வரகுக்கோழியின் பழுப்பு நிற உடலில் கறுப்புத் திட்டுகள் இருக்கும். காய்ந்த புற்களுக்கு இடையில் இவற்றைக் கண்டறிவது கடினம். ஆண் வரகுக்கோழி இளம்பருவத்திலும், இனப்பெருக்கம் செய்யாத காலத்திலும் தோற்றத்தில் பெட்டையை ஒத்திருக்கும். இவை தரையில் முட்டையிடும். பெண் பறவை மட்டுமே அடைகாக்கும். பெரும்பாலும் பூச்சிகளையும், பல்லி, சிறிய ஓணான், விதைகள் முதலியவற்றையும் உணவாகக் கொள்ளும்.
ஒரு காலத்தில் இந்தியாவில் பல இடங்களில் பரவிக் காணப்பட்ட இப்பறவை, புல்வெளிகள் குறைந்ததாலும், வேட்டை காரணமாகவும் எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்து தற்போது ராஜஸ்தான், குஜராத், மத்திய இந்தியாவில் உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளன. இவை எண்ணிக்கையில் குறைந்து வருவதால் அழியும்தறுவாயில் உள்ள பறவையாக (Critically Endagnered) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சியில்... இவை தமிழ்நாட்டிலும் பல இடங்களில் இருந்ததாகவும் இங்கே இனப்பெருக்கம் செய்ததாகவும் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. மதராஸை (தற்போதைய சென்னை) அடுத்த பகுதிகளிலும் வரகுக்கோழிகள் இருந்திருக்கின்றன. இதற்கு ஆதாரமாக 1871இல் இப்பகுதிகளில் இருந்தும், 1969க்கு முன் சென்னைக்கு வடக்கே உள்ள பொன்னேரி பகுதிகளில் பிடிக்கப்பட்ட வரகுக்கோழிகள் பாடம்செய்யப்பட்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்ட ஆண், பெண் வரகுக்கோழியும் அதன் முட்டையும் மெட்ராஸில் இருந்து கொண்டுவரப்பட்டவை எனும் தகவல் பலகையைக் கொண்டுள்ளது.
புகழ்பெற்ற பறவையியலாளரான டி.சி.ஜெர்டான் 1844இல் எழுதிய நூலில் திருச்சிராப்பள்ளியை அடுத்த பகுதிகளில் இருந்து அக்டோபர் மாதங்களில் அங்குள்ள வேட்டையாடிகள் கணிசமான எண்ணிக்கையில் வரகுக்கோழியைப் பிடித்துக் கொண்டுவந்ததாகக் குறிப்பிடுகிறார். அவற்றில் பெரும்பாலும் கறுப்பு சிறகுகளைக் கொண்டவை (ஆண் பறவை) என்பதையும், அவை பிப்ரவரி மாதங்களில் இங்கிருந்து புறப்பட்டு வடக்கே வலசை போகும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஒரு சில ஆண் வரகுக்கோழிகள் ஆகஸ்ட் மாதங்களிலும் பிடிக்கப்படுகின்றன என்பதை வைத்து இவற்றில் ஒரு சில இங்கேயே தங்கிவிடுவதாகவும் சொல்கிறார்.
இப்போது இருக்கிறதா? - திருச்சியில் பிடிக்கப்பட்ட வரகுக்கோழி ஒன்று திருச்சி புனித வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரியில் உள்ள அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகத்தில் பாடம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எந்தஆண்டு பிடிக்கப்பட்டது எனும் விவரம்தெரியவில்லை. இதே அருங்காட்சி யகத்தில்தான் தமிழ்நாட்டின் கடைசி கானமயிலும் பாடம்செய்து வைக்கப் பட்டுள்ளது. நீலகிரி பகுதியில் உள்ள பைகாரா, நடுவட்டம் ஆகிய இடங்களிலும் சேலம் மாவட்டத்திலும் இவை பதிவுசெய்யப் பட்டதாக, 1883இல் வெளியான குறிப்புகள் உள்ளன. மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தானில் இவை தென்பட்டதாக 1904இல் வெளியான குறிப்பு சொல்கிறது. இதன் பிறகு 1980களில் தென் காசியிலும், கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம் பகுதியிலும் தென்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் வந்தன. அண்மைய காலத்தில் வரகுக்கோழி தமிழ்நாட்டில் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
நாமும் கண்டறியலாம்: கானமயிலைப் போல வரகுக்கோழிகள் புல்வெளிகளை மட்டுமே சார்ந்தில்லாமல் விளைநிலங்கள், சற்றே உயரமான பகுதிகளில் உள்ள வெட்டவெளிகள், புதர் மண்டிய இடங்களிலும் அவ்வப்போது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவை உருவில் கானமயிலைவிடச் சிறியதாக இருப்பதால் புல்வெளி, புதர் மண்டிய இடங்களில் இவற்றின் இருப்பை எளிதில் கண்டறிவது சிரமம். பெங்களூருவுக்கு அருகில் உள்ள ஹெசரகட்டா புல்வெளிப் பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் 2011இல் இது பார்க்கப்பட்டது. கேரளத்திலும் 90களில் அவ்வப்போது இவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. அண்மையில் 2020இல் காசர்கோட்டிலும், 2023இல் கண்ணூரிலும் பார்க்கப்பட்டுள்ளது. இவை இங்கே வலசை வருபவை. எனவே, தமிழ்நாட்டிற்கும் இவை வருவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. இதற்கு முன் பதிவுசெய்யப்பட இடங்கள், அங்குள்ள எஞ்சியுள்ள புல்வெளிகள், புதர்க்காடுகள் முதலிய இடங்களில் இவை வலசை வரும் காலத்தில் சென்று தேடினால், வரகுக்கோழிகளைத் தரிசிக்கும் நல்வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago