தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 63: ‘ஆ’ செல்வம்!

By பாமயன்

மு

ல்லை நிலத்தின் இன்றியமையாத வளம் பசுக்கள் எனப்படும் ஆநிரைகள். பசு என்பது வடமொழிச் சொல். பெற்றம் என்றும், ஆ என்றும் தமிழில் சிறப்பாகப் பெயர் பெற்ற ஆநிரைகள், செல்வத்தின் அடையாளமாக முல்லை நிலத்தில் காணப்பட்டவை. விலங்குகளில் நமது முன்னோர்கள் பழக்கப்படுத்திய சிறப்பான விலங்கு இதுவே. ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றயவை’ என்று திருக்குறள் கூறுகிறது.

பொதுவாக, எருமைகள் வளமையின் குறியீடாக இருப்பவை. இவை மருத நிலங்களில் காணப்படுபவை. ஓர் எருமை இருக்க வேண்டுமாயின் அங்கு ஒரு குளமாவது இருக்க வேண்டும். அந்தக் குளத்தில் எருமை இறங்கும் அளவு கொஞ்சமாவது நீர் இருக்க வேண்டும். நீர் வேண்டுமாயின் மழை வேண்டும். மழை வேண்டுமாயின் நல்ல காடு வேண்டும். எனவே, வளம் இருக்கும் இடத்தின் குறியீடாக எருமை இருக்கும்.

செல்வத்தின் அடையாளம்

ஒரு காட்டில் யானை இருக்க வேண்டுமாயின் அதற்கான தீனிகள் குறிப்பாக மூங்கில், பிரம்பு போன்றவையும் நீர்நிலைகளும் இருக்க வேண்டும். இவை இல்லையாயின் யானைகளும் இருக்கா. எனவே பாலையான மாறும் சூழல் உள்ள முல்லை நிலத்தில் எருமைக்குப் பதில் பசுக்களே இருக்கும். அவை ஓரளவு வறட்சியைத் தாங்கும்.

செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ஆநிரைகள், அன்றைய காலகட்டத்தில் பெருமைக்குரிய விலங்காகக் கருதப்பட்டவை. தொல்காப்பியமும் திருக்குறளும் இந்தச் சொல்லைக் கையாளுகின்றன. மற்ற சங்க இலக்கியங்களில் இச்சொல் இல்லை. பெற்றம் என்றால் பெருமை என்ற பொருளும் உண்டு. எனவே செல்வம், பெருமை என்ற பொருளுடைய சொற்களைப் பயன்படுத்தி அதன் சிறப்பைக் குறித்தனர் நம் முன்னோர்கள்.

ஆநிரைகளைக் கவர்ந்து செல்வது போரில் ஒரு உத்தியாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. முடிமன்னர் காலத்தில், அதாவது முதுகுடுமிப் பெருவழுதிக் காலத்தில் போர் தொடுக்கும் முன்னர் பசுக்களையும், பார்ப்பனர்களையும், பெண்களையும், நோயுற்றவர்களையும், பிள்ளைப்பேறு இல்லாவர்களையும் அம்புக்கு பலியாகாவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாறு எச்சரிக்கை செய்துகொள்வதாக, நெட்டிமையார் குறிப்பிடுகிறார். ஆக பசுக்கள் மிகவும் அடிப்படையான செல்வமாக பன்னெடுங்காலமாகவே வந்துள்ளன.

மாட்டுக்கு உரிமை இல்லையா?

‘தாய்மைப் பொருளியல்’ மேதையான ஜே.சி. குமரப்பா மாட்டுப் பொருளாதாரம் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் கால்நடைச் செல்வம் எவ்வளவு அடிப்படையானது, குறிப்பாகக் கிராமப் பொருளாதாரத்தில் அவற்றின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைக் குறிப்பிடுகிறார். ‘கிராம உத்யோக்’ பத்திரிகையில் டிராக்டர் எந்திரத்தின் தீமை பற்றியும் மாட்டு உழவின் சிறப்பு பற்றியும் எழுதியுள்ளார்.

காந்தியர்கள், பசு என்ற சொல்லைக் காளைகள், எருமைகள் என்ற ஒருங்கிணைப்பாகவே பயன்படுத்தினர். பசுவை, தெய்வமாக மட்டுமே அவர்கள் பார்க்கவில்லை. அதன் பயன்பாட்டுச் சிறப்பைப் பொருளதார முக்கியத்துவத்தை எடுத்தோதினார்கள். குமரப்பா ஒரு முறை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற திட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்குச் செல்லும்போது மாட்டுவண்டியிலேயே சென்றார். அப்போது அவர் தடுக்கப்பட்டார். ஒரு முறையல்ல மூன்று முறை தடுக்கப்பட்டார். அவர் மாட்டு வண்டிக்காக விடாது வாதாடிச் சென்றார். அதை அவரே எழுதும்போது மிகச் சுவையாக இருக்கும்.

பொதுப் பாதையில் பயணிக்க நேரு பெருமானுக்கு இருக்கும் உரிமை, ஒரு மாட்டு வண்டிக்காரருக்கும் இருக்க வேண்டுமல்லவா? அதுவல்லவா உண்மையான ஜனநாயகம் என்று அன்றைய இந்தியாவின் தலைமை அமைச்சர் நேரு பெருமகனிடமே வழக்காடியவர்.

நேரு கூறும்போது ‘குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அநேக ராணுவ வண்டிகள் வரும். அதனால் மாட்டு வண்டிகளுக்கு ஆபத்து வரும் என்று கருதி ‘மாட்டு வண்டிகள் அனுமதி இல்லை’ என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளோம்’ என்றாராம். அதற்கு குமரப்பா, மதிப்பிற்குரிய நேரு அவர்களே நீங்கள் பெரிய படிப்பாளி, வழக்கறிஞர். நானோ எளியவன். பாதிப்பு ஏற்படுத்துபவர்களைத் தடுப்பது முறையா? பாதிக்கப்பட்டவர்களைத் தடுப்பது முறையா? நானாக இருந்தால் பொதுச்சாலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ‘மோட்டார் கார்களுக்கும், லாரிகளுக்கும் அனுமதி இல்லை’ என்றுதான் அறிவிப்புச் செய்வேன் என்றாராம்.

(அடுத்த வாரம்: கால்நடைகளின் தேசம்!)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்