இந்தியாவில் இருந்த ஓர் அழகான பறவை இனம் செந்தலை வாத்து (Pink-headed duck). இவை 1950களில் முற்றிலும் அற்றுப்போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் பல பகுதிகளில் பரவியிருந்த இவை, அதிகமாகத் தென்பட்டது கங்கை நதிச் சமவெளிகளில், குறிப்பாக கங்கைக்கு வட பகுதியிலும் பிரம்மபுத்திரா நதிக்கு மேற்கிலும்தான் எனத் தெரிகிறது. இப்பகுதி தற்போதைய பிஹார் மாநிலத்திலுள்ள சில இடங்களில் அமைந்துள்ளன.
இது தவிர ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு (பழவேற்காடு), பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் இவை அரிதாகக் காணப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியா தவிர, நேபாளம், வங்கதேசம், மயன்மாரிலும் அவ்வப்போது தென்பட்டுள்ளன. இந்தியாவில் 1930 வாக்கிலிருந்தே இவை மிகவும் அரிதான ஒரு வாத்தினமாக அறியப்படுகிறது. பிறகு இந்தியாவில் 1966 வரை பல ஆர்வலர்கள் இப்பறவையைத் தேடியும் இவை இருப்பதற்கான உறுதியான தடயம் ஏதும் கிடைக்கவில்லை.
இப்பறவையை ஒத்த செங்களியன் (Red-crested Pochard) எனும் வாத்து வகையுடன் குழப்பிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் சரியான ஆதாரம் இல்லாமல் இவற்றின் இருப்பை உறுதிசெய்வது கடினம். அண்மைக் காலத்தில் (2017 வரையில்) மயன்மாரிலும் இவற்றைத் தேடி, சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
கூட்டம் கூட்டமாக வீழ்த்தப்பட்டன: இவை அற்றுப்போனதற்கான முக்கியக் காரணம், சகட்டுமேனிக்கு சுட்டு வீழ்த்தப்பட்டதும் அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதுமே என அறிஞர்கள் ஊகிக்கிறார்கள். பெரும்பாலும் உயர்ந்தோங்கி வளர்ந்த புற்கள், நீர்த்தாவரங்கள் நிறைந்த பகுதிகளில், குறிப்பாக ஏரிகளில், காடுகளின் ஓரங்களிலுள்ள சதுப்புநிலங்களில் இவை இருந்ததாகத் தெரிகிறது. இந்தியாவில் கிழக்குக் கடற்கரை ஓரமாக (நெல்லூருக்கு வடக்கே) இருந்த நீர்த்தாவரங்கள் மிகுந்த ஏரிகளில் இவை பரவியிருந்தன. இந்த வாழிடங்கள் எல்லாம் சிறிதுசிறிதாக வேளாண்மைக்கும் வேறு பயன்பாட்டுக்கும் அழிக்கப்பட்டன.
» 40 வட்டாட்சியருக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு
» ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் நர்கீஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
மேலும், வாத்து வேட்டை அக்காலத்தில் சர்வசாதாரணமான ஒரு நிகழ்வாக இருந்துள்ளது. கொல்கத்தா சந்தையில் 1870களில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில், சில வேளைகளில் ஆயிரக்கணக்கில் பல வகையான பறவைகள் உயிருடனோ இறந்த நிலையிலோ குவிக்கப்பட்டன.
பின்னர், 1920களில் நாளொன்றுக்கு ஒருவர் மட்டும் சுமார் 140 வாத்துகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் குறிப்புகள் உள்ளன. இந்நிகழ்வுகள் யாவும் செந்தலை வாத்துகள் அதிகம் பரவியிருந்த பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அரிதாக இருந்த இவை, மேலும் ஆபத்துக்குள்ளாகி பின்னாள்களில் முற்றிலும் அற்றுப்போயிருக்கலாம் என நம்பப்படுகிறது.
வளர்க்கப்பட்ட வாத்து: அழகான செந்நிறத் தலையுடைய இந்த வாத்து, ஆர்வலர்களை மட்டுமல்லாமல், பறவைகளைக் கூண்டில் அடைத்து வளர்ப்போரையும் கவர்ந்திருக்கிறது. லண்டன் உயிரியல் பூங்காவுக்கு முதன்முதலில் 12 ஜனவரி 1874இல் இவை கொண்டுசெல்லப்பட்டன.
அன்றைய கல்கத்தாவின் ஷெரிஃபாகவும், ரிசர்வ் வங்கியின் இயக்குநராகவும் இருந்தவர் சர் டேவிட் எலியாஸ் எஸ்ரா; பிரபல பறவை வளர்ப்பாளரும்கூட. உலகில் வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன் செந்தலை வாத்துகள் இவரது பறவை வளர்ப்புத் தோட்டத்திலும் கல்கத்தா உயிரியல் பூங்காவிலும் வைத்து வளர்க்கப்பட்டன.
இவரது இளைய சகோதரர் ஆல்பிரெட் எஸ்ராவும் பல அரிய உயிரினங்களைச் சேகரிப்பதிலும், குறிப்பாக, பறவைகளைச் சேகரித்து அவற்றை அடைப்பினப்பெருக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டவர். இங்கிலாந்தில் இதற்கென ஃபாக்ஸ்வாரன் பூங்காவில் (Foxwarren Park) பல ஆண்டுகளாகப் பறவைகளையும் பல உயிரினங்களையும் வைத்துப் பராமரித்து வந்தார்.
இவர் செந்தலை வாத்துகளை அங்கே கொண்டுவர ஆசைப்பட்டு 1923இல் செந்தலை வாத்துகளைப் பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.100 சன்மானம் வழங்குவதாக நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுத்தார். அதன் விளைவாக 1926 முதல் 1929 வரையில் சுமார் 16 செந்தலை வாத்துகள் அசாமில் இருந்தும் தற்போதைய வங்கதேசத்தில் இருந்தும் பிடிக்கப்பட்டு இங்கிலாந்தில் இவரது பூங்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
இவற்றில் சில வாத்துகள் 12 ஆண்டுகாலம் வரையில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. ஆண், பெண் வாத்துகள் இருந்தபோதும் இவை இனப்பெருக்கம் செய்யவில்லை. இந்த வாத்துகள் இயற்கையான சூழலில் 1920களில் அரிதாக இருந்த வேளையில், இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டது அவற்றை மேலும் அழிவின் விளிம்புக்கே தள்ளிவிட்டது.
இங்லிஸின் பங்கு: செந்தலை வாத்தைக் கடைசியாகச் சேகரித்தது சார்லஸ் மெக்ஃபர்லேன் இங்லிஸ் என்னும் இயற்கையியலாளர். 7 ஏப்ரல் 1923 அன்று இவர் சுட்டு வீழ்த்திய இரண்டு வாத்துகள் பாடம் செய்யப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன.
இவர் சேகரித்த எட்டு செந்தலை வாத்துகளில் இரண்டு சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இவைகூட இவர் சேகரித்த கடைசி செந்தலை வாத்தாக இருக்கக்கூடும். பறவை வளர்ப்பாளரான ஆல்பிரெட் எஸ்ராவின் பூங்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பறவைகளில் கடைசி பறவை 16 மே 1938இல் இறந்துபோனது. இதுவும் பாடம்செய்யப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
எங்கோ இயற்கையான வாழிடத்தில் பிறந்த செந்தலை வாத்தின் கடைசி சந்ததி அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் முடிவுபெற்றுள்ளது. கிட்டத்தட்ட இந்த வாத்தின் நிலைதான் இதை சுட்டுச் சேகரித்த சார்லஸ் இங்லிஸுக்கும் நேர்ந்தது. ஸ்காட்லாந்தில் பிறந்தவர் இவர், 1889இல் இந்தியாவுக்கு வந்து அசாம் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியத் தொடங்கினார். இந்தியாவில் உள்ள பல வகையான உயிரினங்களைச் சேகரித்தும், அவற்றை ஓவியமாக வரைந்தும், குறிப்புகளைக் கட்டுரைகளாக அறிவியல் இதழ்களில் வெளியிட்டும் வந்தவர்.
இவர் டார்ஜிலிங்கில் இருந்தபோது அங்குள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைப் புனரமைத்து அங்கே ஓர் அறிவியல் இதழையும் தொடங்கினார். அங்கிருந்து ஓய்வுபெற்றவுடன் ஊட்டியில் உள்ள குன்னூருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு வந்தபோது அவரது சேகரிப்பில் இருந்த பாடம்செய்யப்பட்ட பறவைகளையும் முட்டைகளையும் எடுத்து வந்திருந்தார். அவரது மறைவுக்குப் பின் அவரது மனைவி சிபில் டோரத்தி ஹன்ட், இரண்டு பாடம்செய்யப்பட்ட செந்தலை வாத்துகள் உள்பட அவர்களிடம் இருந்த சேகரிப்பை சென்னை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
சென்னை அருங்காட்சியகக் குறிப்பில் இவர் பெயர் அடிக்கடி தென்பட இவரைப் பற்றிய விவரங்களை தேடிப் படிக்க நேர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவுக்குப் பயணித்தபோது டார்ஜிலிங் சென்று அவர் புனரமைத்த ‘பெங்கால் இயற்கை வரலாற்று அருங்காட்சியக’த்துக்குச் சென்றுவந்தேன். அருங்காட்சியகத்தின் முகப்பில் இவரது படம் வைக்கப்பட்டிருந்தது; அவர் சேகரித்த பல உயிரினங்கள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அவர் முகத்தைப் பார்த்தாகிவிட்டது. குன்னூரில் அவர் சமாதி எங்கே இருக்கிறது என நண்பர்களிடம் விசாரித்ததில், டைகர் ஹில் கல்லறையில் இருக்கலாம் என அறிந்தோம். 2022 ஜனவரி மாதத்தில் அங்கு சென்று மாதா கோயில் அலுவலருடன் தேடியபோது ஒருவழியாக சார்லஸ் இங்கிஸின் கல்லறையைக் கண்டுபிடித்தோம். செந்தலை வாத்தைக் காண்பது அரிது, குறைந்தபட்சம் அதைப் பாடம்செய்து வைத்தவரின் கல்லறையையாவது பார்க்க முடிந்ததே எனத் திருப்திப்பட்டுக்கொண்டேன்.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago