காப்புரிமை: புதிய ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

உலக அறிவுசார் சொத்துரிமைகள் அமைப்பின் கூட்டம் ஜெனிவாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கியமான ஒப்பந்தம் இயற்றப்பட்டுள்ளது. அது இந்திய வேளாண் சார்ந்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதாக அமைந்துள்ளது. தங்கள் மரபணு வளங்களையும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவையும் காப்புரிமை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்துவதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என இந்த ஒப்பந்தம் அறிவுறுத்துகிறது; அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், காப்புரிமை செயல்படும் விதம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது; புதியது அல்லாதவற்றுக்கு அறிவுசார் சொத்துரிமை கொடுப்பதைத் தடுக்கவும் வழிவகை செய்கிறது. இந்திய உழவர்களின் விதை சார் மரபு உரிமைகள் இதனால் பாதுகாக்கப்படும். இந்தியாவின் காப்புரிமைச் சட்டத்தை இன்னும் வலுவாக வெளிப்படைத்தன்மையுடன் வடிவமைக்க மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றும் இந்தக் கூட்டம் பரிந்துரைத்துள்ளது.

நூறு நாள் வேலை தேவை அதிகரிப்பு: இந்தப் பருவ காலத்தில் மழைப் பொழிவில் 40 சதவீதம் வரை பற்றாக்குறை உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலைவாய்ப்பின் தேவை அதிகரித்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட இணையதள மேலாண்மை தகவல் அமைப்பின் தரவுகளின்படி, வேலைக்கான தேவையின் சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

உதாரணமாக ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அன்னமய்யா மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிடச் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 26 சதவீதம் வேலைவாய்ப்புத் தேவை அதிகரித்துள்ளது. அதுபோல் இந்த ஆண்டு மாவட்டத்தில் 36.3 சதவீதம் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்ய சாய் மாவட்டத்தில் வேலைவாய்ப்புத் தேவை 64 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு மழைப் பொழிவு 29.4 சதவீதம் பொய்த்துள்ளது.

இயற்கை விவசாயிகள் ஆண்டு மலர்: பாண்டிய மண்டல வேளாண் பேரமைப்பு ‘வையை’ என்கிற பெயரில் ஆண்டு மலரை வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர்: அ.சவரணகுமார். விவசாயத்தின் பல விதமான அம்சங்களை இந்த மலர்க் கட்டுரைகள் எடுத்தியம்புகின்றன. இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், ‘புதிய வாழ்வுக்குப் புஞ்சைத் தாவரங்கள்’ என்கிற தலைப்பில் மானாவாரி பயிர்களைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

நெல்லின் முக்கியத்துவத்துக்குப் பிறகு ஒதுக்கப்பட்ட வரகு, தினை போன்ற தானியங்களின் முக்கியத்துவத்தை விவரித்துள்ளார். பாண்டியன் பனையேறி, பனையின் முக்கியத்துவம் குறித்து அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில் காத்திரமாக எழுதியுள்ளார். தமிழக இயற்கை வேளாண் முன்னோடியான நம்மாழ்வார் குறித்துச் சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வேளாண்மை குறித்து நன்மை பயக்கும் பல விஷயங்களை இந்த நூல் வாசகர்களுக்கு அளிக்கிறது. விலை: ரூ.150. தொடர்புக்கு: 82205 50688. - விபின்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE