கடலம்மா பேசுறங் கண்ணு 31: கடலை வெல்லுதல்!

By வறீதையா கான்ஸ்தந்தின்

மனித நாகரிகம் என்பது அடிப்படையில் கடற்கரை நாகரிகம். பதிவுபெற்ற உலக வரலாறு இதை அடித்துச் சொல்கிறது. புள்ளிவிவரங்களின்படி உலக மக்கள்தொகையில் 60 சதவீதம் கடற்கரைகளில் வாழ்கிறது.

உற்பத்தி, வணிகம், சரக்குப் போக்குவரத்து ஒட்டுமொத்தமாக துறைமுகங்களைச் சார்ந்திருக்கிறது. அணுகுவதற்கு அஞ்சி தொலைவில் நின்று வேடிக்கை பார்த்து நின்ற மனித இனத்துக்குக் கடல் எப்படி ஆடுகளமானது?

முதல் அனுபவம்

பொருட்களைச் சுமந்து செல்ல விலங்குகளைப் பயன்படுத்திய மனித இனம் நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்ல மரக்கட்டைகளைப் பயன்படுத்தியது. மிதக்கும் தட்டையான தளம். மனிதர்களது கட்டுப்பாட்டை மீறி ஆற்றின் வேகமும் ஓதங்களின் இழுவிசையிலும் சிக்குண்டு கழிமுகத்துவாரம் வழியாக மனிதர்கள் கடலை அடைந்திருக்க வேண்டும். திகிலூட்டும் முதல் கடலனுபவம் அது.

படிப்படியாகக் கடலை, அதன் பிரம்மாண்டப் பரப்பை ரசிக்கத் தொடங்கினான். அதன் அளவற்ற வளங்களால் ஈர்க்கப்பட்டான். கடற்பயணத்தின் மீது ஆசை கொண்டான். கடல் கடந்து பிற நிலங்களைக் கண்டான். அவ்வாறு மனிதகுல வரலாற்றின் உயர்வு தாழ்வுகளில் கடலுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

ஆபத்து குறைந்த பரப்பு

மனித இனம் கடலுக்குள் போன கதை சுவாரசியமானது. உணவு சேகரிப்பதும் வேட்டையாடுவதுமே ஆதிமனிதர்களின் வாழ்வாதாரமாக இருந்தன. கட்டைகளை அடுக்கிக் கட்டி, அதன்மீது தண்ணீரில் மிதந்தவாறு பயணிக்கும் சாகசச் சாதனையை மனித இனம் ரசித்து நிகழ்த்தத் தொடங்கியது பழங்களையும் கொட்டைகளையும் தேடித்தான்.

கடல் ஒரு விரிந்த, ஊடறுப்புகளற்ற சீரான பரப்பு. அடர்வனங்களில் இருப்பதுபோல் கொடிய விலங்குகளின் தாக்குதல் அபாயம் கடற்கரைகளில் இல்லை. வனங்களில் வேட்டை நிகழ்த்துவதைவிட மீன் பிடித்தல் எளிதானதும் அபாயம் குறைந்ததுமாகத் தோன்றியது. மூங்கில் கழிகளும் மரக்கட்டைகளும் மிக எளிதாகக் கிடைத்தன. ஒரு தெப்பத்தை, கட்டுமரத்தை உருவாக்குவது எளிதாகச் சாத்தியப்பட்டது.

அவ்வாறாக, பனையோலைகளையோ துணிகளையோ செங்குத்தாக நிமிர்த்திய மூங்கில் கழிகளில் கட்டி, காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி நீர்நிலைகளின்மீது எளிதாக நகரவும் மனித இனம் பழகிக்கொண்டது.

பரதவர் குடிலின் அரண்

தமிழின் முதற்பதிவுகளிலிருந்து தேடினால் கடலோர நன்னீர்நிலைகளான அத்தங்கள் பற்றி ஏராளமான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. வாழ்வாதாரத்தின் பொருட்டு அந்தக் காலத்துத் துறைவர்கள் கடலுக்குள் போகவேண்டிய தேவை எழவில்லை. முகத்துவாரங்களில், கழிவெளிகளில் ஏராளமாக மீன்கள் கிடைத்தன. அவர்களது அன்றாடப் பசி தீர்க்க அந்த வளங்கள் போதுமானவையாக இருந்தன.

திமிலில் உட்கடல் புகுந்து கொம்பன் சுறாவை வேட்டையாடும் பரதவர் குறித்தும் பதிவுகள் உள்ளன. ஆனால், அது அரிதானது. கடலொட்டிக் கிடந்த அத்தங்களை நோக்கியவாறு பரதவர் குடில்கள் அமைந்திருந்தன. குடில்களுக்கு அரணாக கடல் நோக்கியவாறு எக்கர் என்னும் மணல்மேடுகளும் இருந்தன.

(அடுத்த வாரம்: வரலாற்று மறுநிகழ்த்தல்!)

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: vareeth59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்