கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி... என மூதுரையில் ஒளவையார் பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் கானமயில் இருந்ததைச் சொல்லும் சான்றுகள் ஒரு சில மட்டுமே. அவற்றில் முதன்மையானது ஜே.ஹெச்.நெல்சன் 1868இல் தொகுத்து வெளியிட்ட மதுரை மாவட்டக் கையேட்டில் உள்ள குறிப்பு. அதில் கானமயில்கள் எப்போதாவது தென்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், அப்போதைய மதுரை மாவட்டம் என்பது ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், பழனி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது.
அதன் பின் ‘ஸ்டிரே ஃபெதர்ஸ்’ இதழில் சார்லஸ் டாஸ்டெம்ஸ் எனும் ஆங்கிலேய ராணுவ மேஜர் 1887 ஜூலை 10 அன்று வெளியிட்ட குறிப்பில் சற்று விரிவான தகவல்கள் உள்ளன. அந்தச் சிறுகுறிப்பில் ‘சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தின் ஒரு பெரிய கிராமமான அருப்புக்கோட்டையின் மேற்கே மூன்று மைல் தொலைவில் ஒரு கானமையிலைச் சுட்டேன். அவ்வேளையில் சுமார் 7-8 கானமயில்களை அங்கு கண்டேன். இந்தப் பறவைகளை அதே இடத்தில் காலை வேளைகளில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
விரிவான பதிவு: அடுத்த குறிப்பு ஆங்கிலேய ராணுவ அதிகாரியும், பெரும் வேட்டைக்காரருமான ஜெனரல் டக்ளஸ் ஹாமில்டன் 1892இல் எழுதிய ‘Records of sport in southern India’ எனும் நூலில் உள்ளது. இந்த நூலில் ஆனைமலை, நீலகிரி, பழனி மலைப் பகுதிகளில் இருந்த வேங்கைப் புலி, யானை, சிறுத்தை, காட்டு மாடு, மான்கள் முதலான பல பெரிய பாலூட்டிகளை அவர் வேட்டையாடிய அனுபவங்கள், நிலவமைப்பு, இயற்கை வளங்கள் ஆகிய தகவல்களைக் கொண்டது. அதோடு, அவரே வரைந்த விவரமான கோட்டோவியங்களையும் உள்ளடக்கியது இந்த நூல். அப்படி ஒரு கோட்டோவியத்தில் வெளிமானை வேட்டையாடும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
வெளிமான் வெட்டவெளிப் புல்வெளிகள், அதிக அடர்த்தி இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்திருக்கும் புதர்ச்செடிகளையும், சிறு மரங்களையும் கொண்ட புதர்க்காடுகளில் தென்படும். இது போன்ற வாழிடங்கள் பொதுவாக மலையடிவாரப் பகுதிகளிலும், சமவெளிகளிலும் இருக்கும். இதையே பாலை நிலம் என்கிறோம். இது போன்ற வாழிடம்தான் அந்தக் கோட்டோவியத்திலும் தென்படுகிறது.
அதில் ஓர் ஓரமாகப் புதருக்குப் பின்னல் ஒரு கானமயிலும், தூரத்தில் இன்னொன்று பறந்து செல்வதுபோலவும் வரையப்பட்டுள்ளது. மேலும், அந்த நூலில் கானமயில்கள் வெட்டவெளிகளில் அவ்வப்போது தென்பட்டதாகவும், அவற்றை வேட்டையாடிய விதத்தையும் அவர் விவரித்திருக்கின்றார்.
பின்னர் 1916இல் வெளியான சேலம் கெசட்டியரில் எப்.ஜே.ரிச்சர்ட்ஸ், காவிரிக் கரையோரம் நீர்மட்டம் குறைவாக இருக்கும் காலங்களில் கானமயில்களைக் காணலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது இருந்த சேலம் மாவட்டம் அதை அடுத்துள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளையும் உள்ளடக்கி இருந்திருக்கும். மேட்டூர் அணை 1925 இல் கட்டத் தொடங்கப்பட்டு, 1934இல் கட்டிமுடிக்கப்பட்டது.
ஆகவே, இந்த கெசட்டியரில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் ஒருவேளை தற்போது மேட்டூர் அணை உள்ள இடம் அல்லது அதனைச் சுற்றியுள்ள சமவெளிப் பகுதிகளாக இருக்கலாம். இதற்கு முன் 1883இல் வெளிவந்த சேலம் மாவட்டக் கையேட்டில் (A Manual of the Salem district in the presidency of Madras) அதை எழுதிய ஹெச். லா ஃபனு, வரகுகோழி இருப்பதைப் பதிவுசெய்திருந்தாலும் கானமயில் குறித்து எதுவும் சொல்லவில்லை. மேற்கண்ட சான்றுகள் எல்லாம் எழுதப்பட்ட குறிப்புகள்.
கடைசி கானமயில்: ஆனால், 1924இல் சி. லீக் எனும் திருச்சி புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த பாதிரியார், ஆண் கானமயில் ஒன்றை வேட்டையாடிகள் சிலர் சமயபுரத்திற்கு அருகில் உள்ள கிராமப்பகுதியில் சுட்டுப் பிடித்து பிப்ரவரி 25 அன்று அவரிடம் ஒப்படைத்ததாக பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இதழில் பதிவுசெய்துள்ளார். அதைப் பாடம்செய்து ஜோசப் கல்லூரி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அடுத்ததாக தியடோர் பாஸ்கரன் ஒரு கட்டுரையில் அவரது நண்பரான பிரதாப் ஷெட்டி என்கிற போர் விமானி 1972இல் கோயம்புத்தூர் அருகில் உள்ள சூலூர் விமானத்தளத்தில் இரண்டு கானமயில்களைப் பார்த்ததாகப் பதிவுசெய்துள்ளார். (கையிலிருக்கும் பூமி, பக்கம் 199). கானமயில்கள் குறித்துப் பல ஆண்டுகளாக களஆய்வு செய்தவர்கள் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆசாத் ரஹ்மானி, ரஞ்சித் மனகடன்.
புலிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் உல்லாஸ் கரந்த் 1983இல் இதே சூலூர் பகுதியில் அவருடைய தம்பி கானமயிலைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். 1986இல் சூலூருக்கு அருகில் உள்ள அப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் (1978வாக்கில்) கானமையிலைக் கண்டதாக இவர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் பிறகு இருவரும் அந்தப் பகுதிகளில் 1986 ஆகஸ்டு மாதத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
எனினும் கானமயில் தட்டுப்படவில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் கடைசியாகக் கானமயில் எப்போது பதிவு செய்யப்பட்டது என்பதை எளிதில் உறுதிப்படுத்துவது சிரமமே. நம்மிடம் உள்ள கடைசி ஆதாரம் திருச்சி புனித ஜோசப் கல்லூரி அருங்காட்சியகத்தில் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ள ஆண் கானமயில்தான்!
வியப்பு தந்த நடப்பு: சமயபுரம் அருகே சுடப்பட்ட அந்த ஆண் கானமயிலைக் காண ஆவல் கொண்டு 2013இல் புனித ஜோசப் கல்லூரி அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்துவந்தேன். திருச்சி சுற்றுவட்டாரத்தில் கானமயில் இருப்பதற்குத் தகுந்த வாழிடம், அதாவது பரந்த புல்வெளிகள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கின்றன. இந்தப் பகுதியை ‘கூகுள் எர்த்’ செயற்கைக்கோள் படங்கள் மூலம் பார்த்தால் தற்போது பரந்து காணப்படும், வயல்வெளிகள் யாவும் ஒரு காலத்தில் புல்வெளிகளாக இருந்திருக்கும் என்பது புரியும்.
பின்னாளில் ஓரிரு முறை பறவைகளை நோக்க இந்தப் பகுதிகளைக் கடந்து செல்லும்போது குமுளூர்-புள்ளம்பாடி (சமயபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. கிழக்கே) ஒரு சிறிய புல்வெளிப் பகுதியைக் கண்டதும் சற்றே வியப்படைந்தேன். அந்த இடத்தின் வரலாறு தெரியவில்லை. ஆரம்ப காலத்திலிருந்து அப்படியே இருக்கிறதா? அல்லது பல மாற்றங்களுக்கு உள்பட்டு புல்வெளிபோல் காட்சியளிக்கிறதா என்பது தெரியவில்லை.
புல்வெளிகள் தனித்தன்மை வாய்ந்த வாழிடங்கள். அவற்றைத் தரிசு நிலம் அல்லது எதற்கும் பயன்படாத இடம் (wasteland) என்று கருதி, அது போன்ற இடங்களை மேம்படுத்துவதாக எண்ணிக்கொண்டு மரக்கன்றுகளை நடுதல், இடத்தை வளைத்துப் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரத்தைப் பெருக்குதல், விவசாய நிலமாக்குதல் போன்ற காரணங்களால் இப்போது பெரிதும் அபாயத்திற்குள்ளான வாழிடமாகிவிட்டன.
அதேபோல், அவற்றைச் சார்ந்துள்ள உயிரினங்களும்தாம். தமிழ்நாட்டில் பல இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக திறந்தவெளிப் புல்வெளிகள் இன்னும் இருக்கின்றன. இதுபோன்ற இடங்களைச்செயற்கைக்கோள் படங்கள் உதவிகொண்டு நிலவரைபடத்தைத் தயார் செய்து, அந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டும்.
கானமையிலை மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவது சாத்தியமில்லை. ஆனால், அவை நடந்து திரிந்த எஞ்சியுள்ள இடங்களையாவது காப்பாற்றி மீட்டெடுக்கலாம். புல்வெளிகளைச் சார்ந்துள்ள பூனைப்பருந்து, கல்கௌதாரி (sandgrouse), கல்பொறுக்கி (Indian Courser), வரகுக்கோழி (Lesser Florican) போன்ற பல வகைப் பறவைகள், குள்ளநரி, கீரி, வெளிமான் போன்ற பாலூட்டிகள், இன்னும் எண்ணிலடங்கா உயிரினங்கள் இதனால் பயன்பெறும்.
அழிவின் விளிம்பில் அழகான பறவை: ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவிக் காணப்பட்ட கானமயில் வேட்டை, வாழிட இழப்பு முதலிய காரணங்களால் இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில்மட்டுமே தென்படுகிறது. புலிகள் பாதுகாப்புத் திட்டம், யானைகள் பாதுகாப்புத் திட்டம் முதலிய திட்டங்களைப் போல இந்திய அளவில் ‘கானமயில் பாதுகாப்புத் திட்டம்’ ஒன்றைத் தொடங்குமாறு பல ஆண்டுகளாக இயற்கை ஆர்வலர்களும், கானுயிர் ஆராய்ச்சியாளர்களும் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் கானமயில் மட்டுமல்லாது பரந்த புல்வெளிகளில் தென்படும் வரகுக்கோழி (Floricans), வெளிமான்கள், ஓநாய்கள், குள்ளநரிகள் முதலான பல்வேறு வகையான கானுயிர்களையும், அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பாதுகாக்குமாறு பரிந்துரைத்தனர்.
எனினும், இதற்கெல்லாம் செவிசாய்க்காமல், காலம்போன காலத்தில் ராஜஸ்தான் மாநில அரசு ‘Project Great Indian Bustard’ என்கிற திட்டத்தை 2012இல் தொடங்கியது. இந்தியாவில் இப்போது எஞ்சியிருப்பது சுமார் 150-200 கானமயில்கள் மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும் பல ‘வளர்ச்சித் திட்டங்களால்’ நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
பசுமை ஆற்றல் என்று சொல்லிக்கொண்டு பரந்த வெளிகளைச் சூரியத் தகடுகளால் நிரப்புவதால் இவற்றின் வாழிடம் அருகியும், காற்றாலைகளின் ராட்சதக் கரங்களால் தாக்கப்பட்டும், உயர் அழுத்த மின்கம்பிகளில் சிக்கியும் கானமயில்கள் கொல்லப்படுகின்றன.
ராஜஸ்தானில் உள்ள பாலைவன தேசியப் பூங்கா பகுதியில் அடைப்பினப்பெருக்கம் மூலம் இவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது இந்த அழகான பறவை.
காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன்: ஒருபுறம் காட்டுயிர் ஆராய்ச்சி, மறுபுறம் அது சார்ந்த தமிழ் எழுத்து என இயங்கிவருபவர். மக்கள் அறிவியல் செயல்திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் பரவலாக எடுத்துச்சென்று வருகிறார். இவர் இணையாசிரியராக இருந்து எழுதிய ‘பறவைகள்: அறிமுகக் கையேடு’ பலரையும் பறவை ஆர்வலர்களாக மாற்றியுள்ளது. காட்டுயிர் சார்ந்த தமிழ் சொல்லாடலை முன்னெடு்ப்பதில் முன்னணியில் இருப்பவர்.
- jegan@ncf-india.org
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago