சோ
லைக் காடுகளை திருவள்ளுவர் அணிநிழற்காடுகள் என்கிறார். ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக அடுக்குமுறையில் அணியாக அமைந்து ஒன்றின் நிழல் ஒன்றின் மீது விழும் வகையில் இது அமைந்திருக்கின்றது. இவ்வாறு பகுதி நிழலில் வாழும் மரவடைகளை காடுகளின் இயற்கை தானாகவே தேர்வு செய்கிறது.
இந்த அணி நிழற்காடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பொதுவாக மழை பெய்யும்போது செம்மண் நிலமெனில் நீர் சிவப்பாகவும், கரிசல் நிலமெனில் பால்போன்ற நிறத்திலும் ஓடும். நிலத்திலுள்ள மேல்மண் கரைந்து செல்வதே இதற்குக் காரணம். இதை மண் அரிமானம் என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகிறது. இந்த மேல் மண்தான் அனைத்துப் பயிரினங்களும் வாழ்வதற்கான ஆதாரம். வளமான மேல்மண் உருவாக நான்கு கோடி ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என்கின்றனர். இந்த மண் அழிந்து போவது நல்லதன்று. இதைப் பாதுகாப்பதே சூழலியல் பாதுகாப்பின் முதன்மைச் செயல்பாடாக இருக்க வேண்டும்.
மண் அரிமானம் இல்லாத இடத்தில் விழும் நீர் நிறமற்று இருக்கும். இதைத்தான் திருவள்ளுவர் ‘மணி நீர்’ என்கிறார். மணி நீர் உருவாவதற்குத் தேவையானது அணிநிழற்காடு என்ற சோலைக் காடுகள். அணிநிழற்காடு உள்ள இடத்தில் மழைத்துளி மண்ணைத் துளைக்காது. வெயில் தரையைத் தொடாது. வளமான மண்ணும், செழிப்பான மலையும், மாசற்ற மணியான நீரும் உறுதியாக இருக்கும். இதுவே ஒரு நாட்டின் அரணாக இருக்கும்.
‘மணிநீரும் மண்ணும்
மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’
என்று திருக்குறள் குறிக்கிறது.
இயற்கை மூடாக்கு
சோலைக் காடுகளின் மண்வளம் மிக வேகமாக அதிகரிக்கும். ஏனென்றால் இங்குள்ள தேக்கு போன்ற இலையுதிர் மரங்கள், தொடர்ச்சியாகப் பருவகால அளவில் இலைகளைக் கொண்ட மண்ணை மூடிவைக்கின்றன. இந்த இயற்கை மூடாக்கு, மண்ணின் மட்கு பெருகவும், சிறு உயிரினங்கள் வாழவும் வாழிடத்தை ஏற்படுத்துகிறது.
‘கழலிலை உகுந்த கால்பொரு தாழ்சினை
அழல்அகைந்தன்ன அம்குழைப் பொதும்பில் புழல்வீ இருப்பை’
(அகம்:351)
இருப்பை (இலுப்பை) என்ற பெரிய மரம் தனது நெருப்பு நிற பழுத்த இலைகளை உதிர்க்கும் காட்சியை சங்கப் பாடல் பதிவு செய்கிறது. செந்நிறப் பூக்கள் (அகம்:497), மஞ்சள் நிறப் பூக்கள் (குறு:233) என்று வண்ண வண்ண ஓவியங்களாக அணிநிழற்காடுகளை அடையாளம் காட்டுகின்றன சங்கப் பாடல்கள்.
ஓவியமாகும் காடு
சீவகசிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் வளத்தைக் குறிக்க வரும்போது தமிழக அணிநிழற்காடுதான் திருத்தக்கத் தேவருக்கு நினைவில் ஓடியுள்ளது.
தென்னையின் பழமான தேங்காய் உதிர்கிறது. அது முற்றிய பாக்கு நெற்றுகளின் மீது மோதி, தேன் நிறைந்த பூக்களைக் கொண்ட வருக்கைப் பலாவின் பழத்தைத் துளைத்து, மாமரத்தின் கனிகளைச் சிதறடித்துவிட்டு, வாழைப் பழங்களையும் சிந்தச் செய்யும் என ஓர் அழகிய அணிநிழற்காட்டை ஓவியமாக்குகிறார்.
“காய்மாண்ட தெங்கின் பழம் வீழ
கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கதமென்றிசையில்
திசைபோயதுண்டே”
ஆகவே குறிஞ்சியின் சிறப்பையும் நுட்பத்தையும் புரிந்துகொண்டு மரங்கள், பழங்கள், காய்கனிகள் என்று அடுக்கு முறை சாகுபடியாக நமது வேளாண்மை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
(அடுத்த வாரம்: முல்லை நில வேளாண்மை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago