தி
ருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே காட்டூர் செல்லும் சாலை நெடுக ஓடும் பி.ஏ.பி. வாய்க்கால். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், 90 நாட்கள் மண்டல வாரியாக ஒரு மடைவிட்டு ஒரு மடை பாசனம் நடக்கும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள பகுதி. வாய்க்காலில் தண்ணீர் கிடைக்காதபோது வறட்சியால் காயும் பகுதியும்கூட.
ஆனால், இதே பகுதியில் இருக்கும் விவசாயி நாகராஜ் தோட்டத்தில் உள்ள 25 ஏக்கர் நிலம் ஒட்டுமொத்தமாக தென்னை, வாழைத் தோப்புகளாகச் செழித்துக் குலுங்குகிறது. இந்தத் தோட்டத்துக்கு மட்டும் எப்படி வந்தது செழிப்பும் பசுமையும்?
அந்த அளவுக்கு இங்கே பண்ணைக் குட்டைகள் அமைத்து மழைக் காலத்தில் சுற்றுவட்டாரத்தில் பெருக்கெடுக்கும் மழைநீரைச் சேமித்து, ஆண்டு முழுக்கப் பயன்படுத்தி வருகிறார் நாகராஜ். பண்ணைக்குட்டையை அவர் அமைத்துள்ள விதம்தான் புதுமையானது!
சேமிக்கப்படும் மழைநீர்
அரை ஏக்கர் நிலத்தில் 140 அடிக்கு 140 அடி நீள அகலத்தில் 25 அடி ஆழத்தில் ஒரு குட்டையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் வெட்டியிருக்கிறார். அதில் தன் தோப்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள 4 ஆழ்குழாய் கிணறு இணைப்புக் குழாய்களையும் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். தானியங்கி மோட்டார் பம்ப் செட் மூலம் அதிலிருந்து எடுக்கப்படும் நீர் இந்தக் குட்டைக்கு வந்து சேர்கிறது. இது மழையில்லாத காலத்தில் மட்டுமே.
மழைக்காலத்தில் தன் நிலத்துக்குச் சுற்றுப் பகுதியில் எங்கெல்லாம் காட்டுத் தண்ணீர் வெளியேறி வருகிறதோ, அங்கெல்லாம் வாய்க்கால் அமைத்து நேரே அந்தத் தண்ணீர் குட்டைக்கு வருமாறு வழிசெய்திருக்கிறார்.
இதன் மூலம் ஆண்டில் நாலு மழை பெய்தாலும் குட்டை நிரம்பி விடுகிறது. அதைத் தன் நிலத்துக்கு ஆறு மாதத்துக்குப் பயன்படுத்த முடிகிறது என்கிறார் நாகராஜ். அதைக் கணக்கில் கொண்டு ஆறு மாதத்துக்கு முன்பும் இன்னொரு அரை ஏக்கரில் மற்றொரு குட்டையும் வெட்டியிருக்கிறார். அதிலும் சமீபத்தில் பெய்த மழையில் வந்த நீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் நாகராஜ்…
அனுபவ நீர் மேலாண்மை
“நான் திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கப் பொறுப்பில் உள்ளேன். அதன் கட்டுப்பாட்டில் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. அந்த அனுபவத்தில் நீர் மேலாண்மை குறித்து அனுபவப்பூர்வமாகச் சில விஷயங்களை அறிந்துள்ளேன்.
இது எங்களுடைய தோட்டம். மொத்தம் 26 ஏக்கர். அதில் முன்பு ஏழெட்டு ஏக்கரில் மட்டுமே விளைச்சல் இருந்தது. அதுவும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டது. அதைப் போக்க ஒரு பரிசோதனை செய்தேன். ஓர் ஆண்டின் மழையளவு எவ்வளவு, எத்தனைக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் வைத்துள்ளோம், அதில் எவ்வளவு தண்ணீர் வருடத்துக்கு வருகிறது, அது எத்தனை காலம் தேங்கியிருக்கிறது, நம்மிடம் உள்ள தென்னை மரங்களுக்கான நீர்த்தேவை பற்றியெல்லாம் கணக்கிட்டேன்.
அதன்படி தென்னை வைக்கப்பட்டிருக்கும் 625 சதுர அடி நிலத்தில் 1 செ.மீ., மழை பெய்தால், 625 லிட்டர் தண்ணீர் தேங்குகிறது எனத் தெரியவந்தது. மொத்தத் தென்னைக்கு ஒரு நாளைக்கான நீர்த்தேவை 100 லிட்டர் மட்டுமே.
ஆக, ஒரு செ.மீ., மழையில் ஒரு தென்னைக்கு 6 நாட்களுக்குத் தேவையான நீர் கிடைக்கும். இப்படிப் பார்த்தால் வருடத்தில் குறைந்தபட்சம் எங்கள் பகுதியில் 50 நாட்கள் மழை பெய்கிறது. அந்த நாட்களில் தோப்பில் நீர்ப் பாய்ச்சத் தேவையில்லை. இந்த நாளில் கிடைக்கும் மழைத் தண்ணீரையும், அதே நாட்களில் கிடைக்கும் போர்வெல் நீரையும் (4 போர்வெல்கள் உள்ளன) ஓரிடத்தில் சேமித்து மழைக் காலத்தில் முறையாக பயிர்களுக்குக் கொடுத்தால் வறட்சி என்பதே இருக்காதே என்று சில கணக்குகள் போட்டேன்.
வறட்சியைப் போக்கும் சொட்டுநீர்
எங்கள் தோப்பில் ஒரு ஏக்கருக்கு 70 தென்னைகள் வீதம் 26 ஏக்கருக்கு சுமார் 1,820 தென்னைகள் இருக்கின்றன. அதற்கு மழையில்லாக் காலத்தில் 4 போர்வெல்கள் மூலம் மட்டும் 1.20 லட்சம் லிட்டர் நீர் கிடைக்கிறது. இதுவே மழைக் காலத்தில் போர்வெல்கள் மூலம் அதே நான்கு மடங்கு தண்ணீர் வருகிறது. அதையும் பக்கத்துத் தோட்டத்திலிருந்து வரும் காட்டுத் தண்ணீரையும், நிலத்துக்குப் போகும் மழை நீரையும் சேமித்தால் குறைந்தபட்சம் 2 கோடி லிட்டர் தண்ணீர் என் நிலத்தில் கிடைக்கும் எனக் கண்டேன்.
இதைத் தேக்கி வைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஒவ்வொரு மரங்களுக்கும் கொடுக்கும்போது, ஆண்டு முழுக்க வறட்சியை சந்திக்கவே வேண்டியதில்லை என்பதை உணர்ந்தேன். அதன்படி ஒரு குட்டையை அரை ஏக்கரில் வெட்டினேன். அதில் நிலத்துக்குள் சென்று நீர் வீணாகாமல் இருக்க, குட்டையின் உட்புறச் சுவர்களில் 3 முதல் 4 அங்குலத் தடிமனுக்கு சாந்து மண் பூசி, அதில் தேங்காய் நார் பதித்து, அதன் மீது பிளாஸ்டிக் ஷீட் பொருத்தியுள்ளோம். இந்த ஏற்பாட்டால் சுமார் 1 கோடி லிட்டர் நீர் ஒரு குட்டையில் தேக்கப்படுகிறது. அதில் 80 ஆயிரம் லிட்டர் ஆவியாகி விட்டால்கூட இரண்டு குட்டைகளிலிருந்தும் 1 கோடியே 80 ஆயிரம் லிட்டர் நீர் 25 ஏக்கர் நிலத்துக்குப் போதுமானதாக இருக்கிறது!” என்றார்.
இந்த முறையிலான நீர்க்குட்டைகளை ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகளும்கூட எளிய முறையில், குறைந்த செலவில் உருவாக்கலாம். நான் 25 ஏக்கருக்கு 1 ஏக்கர் குட்டை வெட்டியிருப்பதுபோல, 1 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் 4 அல்லது 5 சென்ட்டில் அவர்களே ஒரு குட்டையை வெட்டி அதில் நீரைச் சேமிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனமாக அதைச் சேதமின்றிப் பயன்படுத்தலாம்!” என்கிறார்.
விவசாயி நாகராஜ் தொடர்புக்கு: 9442418811
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago