ஒருமுறை என் வீட்டருகில் போதுமான உணவு கிடைக்காத காரணத்தினால் திறந்திருந்த வாசல் வழியே உணவைத் தேடி வீட்டிற்குள் கூட்டமாகப் புகுந்துவிட்டன தவிட்டுக்குருவிகள். திடீரென்று வீட்டிற்குள் எழுந்த உரத்த சத்தத்தைக் கேட்டு உடனடியாக வெளியேறின. அவற்றுள் சரியாகப் பறக்கப் பழகாத குஞ்சுப் பறவை ஒன்று வெளியில் செல்ல முடியாமல் சத்தமிட்டு அங்குமிங்கும் பறந்து பறந்து கீழே விழுந்தது.
நான் அதைக் காப்பாற்றி வெளியே அனுப்பும் வேட்கையுடன் தூக்க முயன்றேன். ஆனால், வெளியேறிய மற்றக் குருவிகள் உள்ளே நுழைந்து தங்கள் குஞ்சுப் பறவையை வெளியே கொண்டு செல்லும் முனைப்போடு கூச்சலிட்டன. எனவே, எனது முயற்சியைக் கைவிட்டு ஒதுங்கிக்கொண்டேன். குஞ்சுப் பறவையை அழைத்துக்கொண்டு அவை வெளியேறின.
மனிதக் குடியிருப்புகளுக்கு அருகில் நெருங்கி வாழ விரும்பும் உயிரினங்களுள் சில பறவையினங்களும் அடங்கும். அவற்றுள் காகம், சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி போன்றவை ஆள் நடமாட்டத்தைக் கண்டு பயமின்றி இயல்பாக வந்துபோகும் தன்மையுடையவை. இவற்றுள் தவிட்டுக்குருவி மற்றப் பறவையினங்களில் இருந்து சற்று மாறுபட்ட இயல்பு உடையவை. தவிட்டு நிறத்தில் உள்ள இவை ஆறேழு குருவிகளாக இணைந்து பறந்து செல்லும்.
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் அமர்ந்து உள்ளே தெரியும் தனது பிம்பத்தை மற்றொரு குருவி உள்ளே சிக்கிக்கொண்டதாக எண்ணிக் கண்ணாடியைக் கொத்திக் கொத்தி ஒலி எழுப்புவதை நம்மில் பலரும் பார்த்திருப்போம். வெடவெடவென இறக்கைகளை அடித்துக்கொண்டு ‘சிலுசிலு சிலு’வென்ற இனிய ஒலியினை எழுப்பியவாறே அங்கும் இங்கும் அது பறந்துகொண்டிருக்கும்.
மிகவும் சுறுசுறுப் பானவை. நிலத்தில் இரு கால்களாலும் தத்தித் தத்திச் செல்லும் இயல்புடையவை. இவற்றின் வால் நீளமானதாகவும் இறக்கைகள் மிகவும் குட்டை யாகவும் இருப்பதால் இவற்றால் உயரமாகப் பறக்க இயலாது. கிட்டத்தட்ட முப்பதடி உயரத்திற்கு மேல் இவை பறப்பதைப் பார்க்க முடிவதில்லை. பல ஆண்டுகளுக்கு உயிர் வாழக்கூடியது இக்குருவி இனம்.
சில பகுதிகளில் பூணில் குருவி, தவிட்டுக்குருவி, சிலம்பன், காட்டுச் சிலம்பன், வெண்தலைச் சிலம்பன், தவிட்டுச் சிலம்பன், மஞ்சள்கண் சிலம்பன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. வேகமாக ஓடும்போது கொலுசு அணிந்த பெண்ணின் கால்களிலிருந்து எழும் சத்தம்போல் அவற்றின் ஒலி இருக்கும். இதனால்தான் சிலம்பன் என்று அழைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
லெயோத்ரிசிடே (Leiothrichidae) எனும் குடும்பத்தைச் சார்ந்த இப்பறவையினம் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாக வாழ்கின்றன. ஆங்கிலத்தில் ’செவன் சிஸ்டர்ஸ்’ என்று அழைக்கப் படுகிறது. இப்பறவை எப்போதும் ஆறேழு பறவைகளாக இணைந்தே எங்கும் அலைவதால் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.
வாழ்க்கைமுறை: இவை பிறந்து மூன்று ஆண்டுகளில்இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடுகின்றன. ஆண்டு முழுவதுமே இவற்றிற்கு இனப் பெருக்கக்காலம்தான். இவற்றின் கூடு சிறிய வளையும் தன்மை கொண்ட குச்சிகள், மெல்லிய நார்களால் குழிந்த கிண்ணம் போன்று அமைக்கப்பட்டிருக்கும்.
குட்டையான அடர்ந்த புதர்களுக்குள்ளும், மரங்களுக்குள்ளும், பிற பறவைகளின் பார்வையில் படாதவாறு தங்களது கூட்டை அமைக்கின்றன. ஒரு முறைக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் வரை இட்டு அடைகாக்கின்றன. ஒன்றிரண்டு குஞ்சுகளே பொரித்துப் பறக்கும் நிலைக்கு வருகின்றன. முட்டைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
தவிட்டுக்குருவிகளின் குஞ்சு வளர்ப்பு முறை மற்றப் பறவைகளிடமிருந்து சற்று மாறுபட்டுள்ளது. இப்பறவையினம், குஞ்சு பொரித்ததும் அவற்றிற்கான உணவை, தாய்ப் பறவை மட்டுமல்லாமல் முந்தைய தலைமுறைகளில் பிறந்து, வளர்ந்த நிலையில் இருப்பவையும் கொண்டுவந்து ஊட்டி வளர்க்கின்றன.
மனிதக் குடியிருப்புகளுக்கு அருகில் அடிக்கடி வந்துபோகும். குஞ்சுப் பறவைகளுக்குச் சிறு தானியங்கள், பழங்கள், சிறு புழுக்கள், மனித உணவின் எஞ்சிய பகுதிகளை எடுத்துச் செல்கின்றன. குஞ்சுகளைப் பறக்கப் பழக்கும் காலத்தில், இரை தேடச் செல்லும் இடங்களுக்கு முந்தைய தலை முறையில் பிறந்து வளர்ந்த நிலையிலிருக்கும் சகோதரப் பறவைகளோடு தற்போதைய குஞ்சு களையும் பெற்றோர் பறவைகள் அழைத்துச் செல்கின்றன. குஞ்சுகளின் மீது பெரும் அக்கறையைக் கொண்டிருக்கின்றன.
வாழ்க்கைப் போராட்டம்: பலம் வாய்ந்த சில பறவைகள் தங்கள் பசியைப் போக்க இத்தகைய சிறு பறவைகளின் கூடுகளில் இருக்கும் குஞ்சுகளை, பெற்றோர் பறவைகளின் கவனக்குறைவு நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தித் தூக்கிச் செல்லும் இயல்புடையவை. ஒருமுறை மரங்கள் அடர்ந்த காடொன்றில் தவிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்து, குஞ்சுகளைக் கீழே தள்ளின காகங்கள்.
தவிட்டுக்குருவிகள் அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறந்து கத்தின. குருவிகளின் அபய ஒலி வாழும் சுற்றுப்புறத்தின் கவனத்தை ஈர்க்குமளவு பெரிதாக இருந்தது. சிலுசிலுவென்ற அவற்றின் தொடர்ச்சியான சத்தம் காட்டில் வாழும் மற்றப் பறவைகளுக்கும் ஆபத்தை உணர்த்தும் ஆற்றல் பெற்றது.
அந்தக் கூட்டிலிருந்து நான்கு சிறு குஞ்சுக் குருவிகள் விழுந்து கிடந்தன. அவற்றுள் ஒரு குயில் குஞ்சும் அடங்கும். கூடு கட்ட அறியாத குயில்கள் சில நேரம் காகங்களின் கூடுகளில் மட்டுமல்லாமல், தவிட்டுக்குருவியின் கூடுகளிலும் முட்டையிடும். ஆசிய பெண் குயில்கள் தவிட்டு நிறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தவிட்டுக்குருவியினம் குயில் குஞ்சைத் தனது குஞ்சுகளோடு சேர்த்து வளர்ப்பதை எங்கும் பார்க்க முடியவில்லை. தவிட்டுக் குருவியின் குஞ்சுகள் அவற்றின் பெற்றோரைப் போன்று தவிட்டு நிறத்திலும் குயில் குஞ்சுக் காகத்தைப் போன்ற கரிய நிறத்திலும் இருந்தன.
காகங்கள் கறுப்பு நிறத்தில் தெரிந்த குயிலின் குஞ்சை, தங்களது இனக் குஞ்சாகக் கருதியிருக்க வேண்டும். எனவே, அவை குஞ்சுகளைத் தூக்கிச் செல்வதை விடுத்து, சத்தமிட்டுக் கரைந்தன. காகங்களின் கூட்டம் அதிகரித்ததும் அங்கொரு பெரும் போராட்டமே நடந்தது. தூக்கிச் செல்லவும் முடியாமல், விட்டுச் செல்லவும் இயலாமல் தவிட்டுக்குருவிகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தன. மாலை நேரம் இரவானதும் அங்கிருந்து அவை கலைந்து சென்றன.
அடுத்த முட்டையிடும் பருவத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்தும் பொறுப்புணர்வுடன் அடுத்த நாளை அவை எதிர்கொண்டிருக்க வேண்டும். இயற்கையின் இத்தகைய விசித்திரங்களை அறிந்து கொள்ள, அதன் மீது நமது கவனம் திரும்பும் பட்சத்தில்தான் உயிரினங்கள் நிறைந்த பெரும் புதையலான இச்சுற்றுச் சூழலை நாம் நேசிக்கவும் பாதுகாக்கவும் முடியும்.
- jansy.emmima@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago