‘நா
ன் சுத்த சைவம். ஆனால் அசைவக் குழம்பிலிருந்து வருகிற மசாலா வாசனை, என்னையும் அறியாமல் நாவில் எச்சில் ஊற வைத்துவிடுகிறது!’ இது, சைவப் பிரியர்களின் ‘பசி’தாப நிலைமை!
“ஒருகாலத்தில் சைவம் என்றால் இட்லி, சாம்பார், சட்னி வகைகள்தான் என்ற நிலை மாறி, அசைவர்கள் சாப்பிடுவதற்கு இணையாக இன்று ‘சைவ குருமா இருக்கா?’ என்று பல ஹோட்டல்களில் கேட்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். அது போன்ற சைவ உணவுப் பிரியர்களின் வரப்பிரசாதம்தான் காளான்!” என்கிறார் வேளுக்குடியைச் சேர்ந்த எஸ். இளங்கோ.
விவசாய இழப்பை ஈடுகட்ட
தற்சமயம் திருவாரூர் மாவட்டத்தில் விற்பனையாகும் காளான்களில் பெரும் பகுதியை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பும் காளான் உற்பத்தியாளர் இவர். கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்துவந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி காளான் உற்பத்தியை அதிகரித்துள்ளார்.
“எதிர்காலத்தில் காளானின் தேவை அதிகம் இருக்கும். வழக்கமாக மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளோடு, இன்னொருபுறம் காளான் உற்பத்தியையும் விவசாயிகள் மேற்கொள்ளலாம். இதனால், ஒருவேளை விவசாயத்தில் இழப்புகள் ஏற்பட்டாலும், காளான் உற்பத்தியிலிருந்து கிடைக்கிற வருமானத்தைக் கொண்டு அதை ஈடுகட்டிவிட முடியும்” என்கிறார் இவர்.
திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, கூத்தாநல்லூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வேளுக்குடி காளானுக்கு தனிமரியாதை உண்டு. மத்திய சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிக்கொண்டே இந்தப் பணியைச் செய்துவந்த இளங்கோ, கடந்த 2002-ம் ஆண்டு முதல் தனது பணிக்கு விருப்ப ஓய்வைக் கொடுத்துவிட்டு முழுமையாகக் காளான் உற்பத்தியில் ஈடுபடுட ஆரம்பித்தார்.
வைக்கோல் மூலப்பொருள்
காளான் உற்பத்தி குறித்து அவரிடம் உரையாடியதிலிருந்து…
“சிப்பிக் காளான், பால் காளான், பட்டன் காளான் என மூன்று வகை உணவுக் காளான்கள் உள்ளன. அதில் நான் சிப்பிக் காளான், பால் காளான் இரண்டையும் உற்பத்தி செய்கின்றேன். அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம்வரை சிப்பிக் காளானும், கோடைக் காலத்தில் பால் காளானும் உற்பத்தி செய்ய உகந்த காலமாகும், இதற்கான மூலப்பொருள் வைக்கோல்தான்.
வைக்கோலைத் துண்டுதுண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை 5 மணி நேரம் ஊற வைத்து, நீராவி மூலம் அவித்து, தொற்று நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் பாலித்தீன் பைகளைக்கொண்டு தொற்று நீக்கப்பட்ட வைக்கோல்களை படுக்கைபோலத் தூவி, அதன் ஒவ்வொரு சுற்றிலும் காளான் விதைகளைத் தூவவேண்டும்.
இப்படிச் சுமார் முக்கால் அடி உயரத்துக்குக் காளான் படுக்கை தயாரித்து, அதன் இடைவெளிகளில் ஊசியால் துளையிட வேண்டும். பின்னர் காளானுக்காக அமைக்கப்படும் குடில்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கும்போது அந்தக் குடிலின் வெப்பநிலை 24 முதல் 28 டிகிரி வரையும் ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதமாகவும் இருக்க வேண்டும்.
காலை மாலை இரு வேளைகளிலும் அரைமணி நேரம் மங்கிய வெளிச்சத்தை, காளான் குடில்களில் ஏற்படுத்த வேண்டும். காளான் படுக்கை போட்ட 20-வது நாளிலிருந்து அறுவடை தொடங்கிவிடும். ஒரு காளான் படுக்கையில் 3 முறை அறுவடை செய்யமுடியும்.
ஒரு படுக்கையிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம். இதன் ஆயுட்காலம் 45 நாட்கள். இதற்காகப் பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் வைக்கோல் படுக்கைகளைப் பின்னர் இயற்கை உரமாகப் பயன்படுத்த முடியும். இந்தக் காளான் உற்பத்திக்குப் பெரும் தொல்லையாக இருப்பது எலிகள்தான். அதைக் கட்டுப்படுத்த வழக்கமான நடைமுறைகளே போதுமானது. காளான் உற்பத்தியின்போது அந்தப் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் இளங்கோ.
காளானின் மருத்துவக் குணம்
காளான் உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், மருத்துவக் குணம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவற்றை மட்டுப்படுத்தும் தன்மை நிறைந்தது. கொழுப்புச்சத்து குறைவு. நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை அதிகம் கொண்டிருக்கும் உணவு காளான். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
40 வயதைக் கடந்தவர்கள் அசைவ உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை, அசைவ உணவை எப்படியெல்லாம் சமைக்கிறார்களோ அதே முறையில் காளானையும் சமைத்து உண்ணலாம். சுவையும் அதிகம். 200 கிராம் அளவில் பாக்கெட்டுகளாகச் சுமார் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“இந்தக் காளான் உற்பத்தித் தொழிலைச் சிறிய அளவில் மேற்கொள்ள சுமார் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவிலான நிலம் போதும். சுமார் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைச் செய்யலாம். 4 தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். வைக்கோலை அறுவடைக் காலத்தில் வாங்கி வைத்துப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். மழையில் நனையாமல் தார்ப்பாய்ப் போட்டு மூடிப் பாதுகாப்பது அவசியம். காளான் உற்பத்தி செய்வதற்கான விதைகள் கடைகளில் கிடைக்கின்றன. நானே தற்போது விதைகளை உற்பத்தி செய்துகொள்கிறேன். இந்த அனுபவம் காளானை உற்பத்தி செய்யத் தொடங்கியவுடன் தானாகவே வந்துவிடும்” என்கிறார் இளங்கோ.
இளங்கோ தொடர்புக்கு: 90038 20600
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago