பொ
துவாக, கன்னி இன நாய்கள் கறுப்பு நிறம் அல்லாது வேறு நிறத்தில் வந்தால், அவற்றை சிப்பிப்பாறை என்று அழைக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. இதனால்தான் இரண்டும் ஒரே இனம் என்று கூறப்படுகின்றன.
உண்மையில், இன்று சிப்பிப்பாறைப் பகுதியில் அரிதாகிப்போன சாம்பல் நிற நாய்கள்தான், பின்னாட்களில் சிப்பிப்பாறை நாய் என்று பிரபலமடைந்தது. காலப்போக்கில் அந்தப் பெயரே அந்த வட்டாரத்தில் உள்ள கன்னி இன நாய்களுக்கும் எடுத்தாளப்பட்டது.
குழப்பம் ஏன்?
சமீப காலமாக, கூர்நாசி அமைப்பு கொண்ட கன்னி இன நாய்களுக்கும் சிப்பிப்பாறை என்று பெயர் பெற்ற நாய்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது.
இந்தக் குழப்பத்தைக் களைய தரவுகளை ஆழ்ந்து அறிவது அவசியம். மேஜர் டபிள்யு.வி.சோமன் என்ற ஆங்கிலேயர் 1963-ம் ஆண்டு எழுதிய ‘தி இந்தியன் டாக்ஸ்’ என்ற புத்தகத்தில் சிப்பிப்பாறை நாய் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள், உடலமைப்பிலும் பண்புக் கூறுகளின் அடிப்படையிலும் ஓரளவுக்குக் கன்னி இன நாயை ஒத்ததாக இருந்தாலும், அதில் அந்த நாய்க்கு உதாரணமாகக் கொடுக்கப்பட்ட படமோ கன்னி நாய்க்கும், பட்டி நாய்க்கும் இடைப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறது. இந்த நாய் இனங்களின் பூர்வீகமும் சிப்பிப்பாறை வட்டாரம்தான் என்ற போதும், இவை சிப்பிப்பாறை நாய்கள் அல்ல.
நிறத்தின் அடிப்படையில் பெயர்
கோவில்பட்டி வட்டாரம் அதிக அளவிலான ஆட்டுப்பட்டிகளைக் கொண்டவை. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே அதிக அளவில் கால்நடைச் சந்தைகள் நடந்த இடம் அது. எனவே, இங்குள்ள பட்டிகளில் காவலுக்குப் பயன்படுத்தப்பட நாட்டு நாய்களைப் பட்டி நாய்கள் என்பர்.
அவை அந்த வட்டாரங்களில் உள்ள கூர்நாசி நாய்களுடன் கலந்து புது இனமாக மாறின. அவை பெரும்பாலும் இரண்டு நிறங்களில்தான் வரும். பெரும்பாலும், வெள்ளை நிறத்தில் செவலை நிறம் கலந்தோ, செவலை நிறத்தில் வெள்ளை அதிக அளவில் கலந்தோ தோற்றம் தரும்.
நிறத்தின் அடிப்படையில் அவற்றை வட்டச் செம்பறை, செவலைச் செம்பறை , சாம்பச் செம்பறை என்று கூறுவார்கள். சில பகுதிகளில் ‘செம்மர’ என்றும் கூறுவர். இந்த நாயைத்தான் சோமன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது செம்பறை நாயே ஒழிய, சிப்பிப்பாறை அல்ல!
காலப்போக்கில் இந்தப் பட்டி நாய்கள் அதனுடைய உடல் வலிமை மற்றும் நல்ல வேட்டைப் பண்பு ஆகியவற்றால் கன்னி இன நாய்களுடனே சேர்த்து அந்த வட்டாரங்களில் வளர்க்கப்பட்டன. இந்த நாய்களைப் பற்றித் தனியாக எந்தப் பதிவும் இன்றுவரையில் இல்லை. மிக அரிதான நிலையில் கோவில்பட்டி வட்டார கிராமங்களில் சில தகவல்கள் கிடைக்கின்றன.
வட்டாரப் பெயர் அறியாமல்…
சரி, அப்படியானால் அசலான சிப்பிப்பாறை நாய்தான் எது? இந்தக் குழப்பங்கள் எதனால் உருவாகின்றன?
இதுவரை நாய்கள் தொடர்பாகப் பதிவுகளைச் செய்தவர்கள், குறிப்பிட்ட அந்த ஊருக்கு அல்லது நிலத்துக்கு வராதவர்கள். மிக முக்கியமான அரிய தரவுகளை அவர்கள் திரட்டித் தந்திருக்கும் அதேநேரம், வட்டாரச் சொற்களை அவர்கள் அறிந்திராததால் நாய்களைப் பெயரிடுவதில் சிறு குழப்பங்கள் உருவாகின.
அசலான சிப்பிப்பாறை நாய்கள் என்பவை, நல்ல உடல் கட்டுடனும், பெரிய தலையுடனும், நல்ல உயரமாகவும், பெரும்பாலும் அழுக்கு வெள்ளை அல்லது சாம்பல் நிறத்துடனும், மங்கிய பழுப்பு நிறத்துடனும் இருக்கும். இவையே சிப்பிப்பாறை நாய்கள்!
(அடுத்த வாரம்: வசூலுக்கு வந்தவர்களை விரட்டிய நாய்!)
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago