டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 19

By செய்திப்பிரிவு

இந்திய வரலாறு - 8
முகலாயப் பேரரசு - 1


பாபர்
பாபர் என அழைக்கப்படும் சகீரிதீன் முகமது (பொ.ஆ.1483 -1530) முகலாயப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் ஆவார். தந்தை உமர்ஷேக் மிஸ்ரா II (தைமூர் வம்சம்). தாயார் குத்லூக் நிகார் கானும்(செங்கிஸ்கான் வம்சம்).

பொ.ஆ.1504 இல் தனது தனிப்பட்ட ஆதரவாளர்களுடன் காபூலை கைப்பற்றிய பாபர் பொ.ஆ.1519 இல் பஞ்சாபில் முதல் தாக்குதல் நடத்தியபோது சுல்தான் இப்ராஹிம் லோடி டெல்லியில் சற்று பலமாக இருந்தார். பஞ்சாப் மீது ஐந்து முறை தாக்குதல் நடத்திய ராணுவ மேதை பாபர் பொ.ஆ.1526 இல் முதலாம் பானிபட் போரில் துருக்கிய சக்கர யுத்திகளை கையாண்டு இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து அவரைக் கொன்றார்.

முதன்முதலில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டது பாபரின் காலத்தில்தான். போருக்குப்பின் ஆக்ராவில் ஒரு அழகிய தோட்டம் பாபரால் உருவாக்கப்பட்டது. மேவார்(தற்போது உதய்ப்பூர்) ராணாசங்காவை போரில் தோற்கடித்து அப்பகுதியையும் தனது ஆட்சியுடன் இணைத்துக் கொண்டார். பொ.ஆ.1528இல் சாந்தேரி கோட்டையை கைப்பற்றிய பாபர் பின்னர் மஹ்மூத் லோடியையும் வென்று வங்காளம் வரை தனது பேரரசை விரிவுபடுத்தினார். செல்லும் இடமெல்லாம் தோட்டங்களை நிர்மாணித்த இயற்கை நேசர் பாபர்.

‘பாபர்நாமா’ எனும் தனது சுயசரிதையை சாகதேய துருக்கி மொழியில் எழுதியுள்ளார். தான் சந்தித்த மக்கள், வாழ்க்கை முறை, அரசியல், இலக்கியம், கலை, வரலாறு, புவியியல் ஆகியவற்றைப் பற்றி அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். தன்னம்பிக்கையை மட்டுமே நம்பி ஒரு பேரரசை நிறுவியவர் பாபர் எனலாம். பொ.ஆ. 1589இல் அக்பரது ஆட்சி காலத்தில் பாபர்நாமா பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.ராமச்சந்திர குஹாவின் India after Gandhi என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்த கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர். பி. சாரதி என்பவரால் ‘பாபர்நாமா’ 2014இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பாபரின் மகன் ஹுமாயூன் நோய்வாய்பட்டது பாபரின் மனதை அதிகம் பாதித்தது எனலாம். பின்னர் ஹுமாயூன் நன்கு குணமடைந்தாலும் அதே வருடம் அதாவது 1530 இல் பேரரசர் பாபர் தனது 47 வயதில் உயிர் நீத்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உருவாக்கப்பட்ட பாக்-இ-பாபர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க பூங்காவில் பாபரது கல்லறை உள்ளது.

பாபரின் மகனான ஹுமாயூன் பொ.ஆ. 1530 முதல் பொ.ஆ.1540 வரையிலும் பின்னர் பொ.ஆ.1555 முதல் பொ.ஆ.1556வரை ஆட்சி செய்த முகலாயப் பேரரசர் ஆவார்.
ஹுமாயூன் நாமா எனும் நூலை எழுதியவர் குல்பதான் பேகம் (ஹுமாயூனின் சகோதரி)

ஷெர்ஷா

சூரி வம்சத்தைச் சேர்ந்த பரீத்கான் எனும் இயற்பெயர் கொண்ட ஷெர்ஷா 1540 முதல் 1545 வரை திறம்பட ஆட்சி செய்தார். அவர் பல நெடுஞ்சாலைகளையும் விடுதிகளையும் அமைத்தார். தற்போது ஜி.டி. சாலை எனப்படும் டாக்காவிற்கு அருகில் உள்ள சோனார்காவிலிருந்து சிந்து நதி வரை 1500 கி.மீ. நீளமுள்ள சாலை இவரது காலத்தில் போடப்பட்டது. கட்டிடக்கலைக்கும் முக்கியமளித்த ஷெர்ஷா டெல்லியில் பழையகோட்டையை கட்டி 1542 இல் அங்கு கிலா-இ-குஹ்னா மசூதியை எழுப்பினார். சசாராமில் (பீகார்) உள்ள அவரது கல்லறை அவர் காலத்து கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


நாட்டின் எப்பகுதியில் குற்றம் நடந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தக்க இழப்பீடு வழங்க இவரது ஆட்சியில் வழிவகை செய்யப்பட்டது.
மத நல்லிணக்கத்துடன் ஆட்சி செய்த ஷெர்ஷா எவ்வித காரணமுமின்றி ரத்தம் சிந்துவதை எதிர்த்தார். நிதி நிர்வாகம் முழுமைக்கும் தானே பொறுப்பாக இருந்து செயல்பட்டார். விவசாயிகளின் மீது தனிக்கவனம் செலுத்தினார். தனது படைகள் மூலம் விவசாய நிலங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தக்க இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தார். தற்போது நாம் பயன்படுத்தும் ரூபாய் நாணயத்தின் முன்னோடி ஷெர்ஷா காலத்து ருபய்யா எனும் வெள்ளி நாணயமாகும். அனைத்து நிர்வாகத்திலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் ஷேர்கான் எனப்படும் ஷெர்ஷா ஆவார். ஹுமாயூன் நிர்மாணித்த தினா- பானா நகரை புதுப்பித்து சேர்கர் என பெயரிட்டார். வரலாற்று தலைநகரான பாடலிபுத்திரத்தை பாட்னா என மாற்றியவரும் இவரே. வரலாற்று ஆசிரியர் ஹெச்.ஜி.கீன் தனது 'மெமாயர்ஸ் ஆஃப் தி ரேசஸ் ஆஃப் தி நார்த் வெஸ்ட் ஃபிரான்டியர்' என்ற புத்தகத்தில், "ஷெர்ஷா எப்போதும் தனது குடிமக்களுக்கு சிறந்ததையே விரும்பிய முதல் முஸ்லிம் ஆட்சியாளர்" என்று எழுதியுள்ளார்.

அக்பர்

பொ.ஆ.1542 இல் பிறந்த முகலாயப் பேரரசர் அக்பர், பாபரின் பேரன். ஹீமாயூனுக்குப் பின் 13 வயதில் அரியணை ஏறியவர்.
பைராம்கான் அவரது பாதுகாவலர். பொ.ஆ.1556 இல் இரண்டாம் பானிபட் (தற்போது ஹரியானா மாநிலம்) பைராம்கானுக்கும் ஹெமுக்கும் நடந்த போரில் ஹெமு கொல்லப்பட்டார்.

அக்பர் நிர்மாணித்த நகரம் பதேபூர்சிக்ரி.
1581 இல் அக்பர் உருவாக்கிய மதம் தீன்இலாஹி.
1571 இல் மன்சப்தாரி முறையை (பாரசீக நாட்டு ராணுவ முறை)அறிமுகம் சொய்தார். அரபு வார்த்தையான மன்சப்தாரிக்கு தகுதி அல்லது தரம் என்று பொருள்.

அரசவையில் ஒன்பது அறிஞர்களைக் கொண்ட நவரத்தினங்கள் என்ற அமைப்பு செயல்பட்டது. பீர்பால் சிறந்த அரசவைக் கவிஞர். ‘அக்பர் நாமா’, ‘அயினி அக்பரி’ என்ற நூல்களை அபுல் பாசல் எழுதினார். அக்பரது அவையிலிருந்த பீர்பால் நகைச்சுவை ததும்ப அறிவு பூர்வமான கதைகள் எழுதுவதில் வல்லவர். தான்சேன் சிறந்த இசை வல்லுநர். அமைச்சர் தோடர்மால் சிறந்த நிர்வாகி. ‘ராமசரிதமானா’ (இந்தியில் ராமாயணம்) எழுதிய துளசிதாசர் அக்பரின் சமகாலத்தவர்.
ரஸியா (முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மீதான வரி) அக்பர் ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது.

பெண்களுக்கான நூலகம்

25000 நூல்களைக்கொண்ட நூலகத்தை அக்பர் நிறுவினார். பெண்களுக்கென்று தனி நூலகத்தை பதேபூர் சிக்ரியில் நிறுவினார். ராணா பிரதாப் சிங் மற்றும் மான்சிங் ஆகிய இருவருக்கும் இடையே 1576இல் நடைபெற்ற ஹல்திகாட் போரில் ராணா பிரதாப் சிங் தோற்கடிக்கப்பட்டார். இப்போரை முகலாய ராணுவம் முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது. குஜராத்தை கைப்பற்றியதின் நினைவாக பொ.ஆ.1602 இல் புலந்தர்வாசா அமைக்கப்பட்டது. (பாரசீக மொழியில் 'பெருவாசல்' என இதற்குப் பொருள்). இது உலகின் மிகப்பெரிய வாயில் கட்டிடம் ஆகும். அலகாபாத் கோட்டை, ஆக்ரா கோட்டை, லாகூர் கோட்டை, ஹுமாயூன் கல்லறை ஆகியவை அக்பரால் உருவாக்கப்பட்டவை. பொ.ஆ.1605 இல் உயிர் நீத்த அக்பருக்கு ஆக்ராவுக்கு அருகில் சிக்கந்தாராவில் கல்லறை உள்ளது. அக்பரைப்பற்றி இன்னும் பல செய்திகள் உள்ளன.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி
- https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/891215-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-18-4.html

அடுத்த பகுதி நவம்பர் 7 (திங்கள்கிழமை) அன்று வெளியிடப்படும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்