வெற்றி மந்திரம் | ஓடினால் தீராது பிரச்சினை

By செய்திப்பிரிவு

டான்சன், எகிடோ இரு புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது.
ஒரு வளைவில் திரும்பும்போது நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒருபுறத்தில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டியிருந்த அழகான இளம்பெண் அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்றுகொண்டிருந்தாள். “இங்கே வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தூக்கிக்கொண்டு சகதியான தெருவின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார்.

அன்று இரவு மடத்திற்குத் திரும்பும்வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான். அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில் செல்வதுகூடத் தவறு. முக்கியமாக இளமையும் அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில் செல்லவே கூடாது. நீ ஏன் அவளைத் தொட்டுத் தூக்கிகொண்டு சென்றாய்?” என்றார். “நான் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டேன். நீதான் அந்தப் பெண்ணை இன்னும் சுமந்துகொண்டிருக்கிறாய்” என்றார்.


இப்படித்தான் நம்மில் பலரும் தேவையில்லாத பல விஷயங்களை, பிரச்சினைகளை, கஷ்டங்களைத் துாக்கிச் சுமந்து கொண்டிருக்கின்றனர். ஒன்று, பிரச்சினைகளை மனதின் உள்ளேயே பூட்டி வைத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்லது பிரச்சினைகளைத் துாக்கிச் சுமந்துகொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம். அல்லது, பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடுவிடுகிறோம். பிரச்சினைகளை மனதில் இருந்து துாக்கியெறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களே வெற்றி எனும் இலக்கை அடைகிறார்கள்.
ஒரு முறை விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கே அவருடைய நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும் நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்துபோன நண்பரின் மனைவி, மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.


பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கே வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
“சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்கிற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது விலங்குகளுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது” என்று முடித்தார்.

இப்படித்தான் நம்மில் பலரும் பிரச்சினைகளைக் கண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் அந்தப் பிரச்சினைகள் இன்னும் வீரியம் கொண்டு பலம் பெற்று நம்மை துரத்தி வீழ்த்தத் துடிக்கின்றன. அந்தப் பிரச்சினையைக் கண்டு நாம் எதிர்த்து நின்றால், அது நம்மிடம் வராமல் தோற்று ஓடிவிடும்.
மனம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நம் மனதில் நல்ல ஆரோக்கியமான எண்ணங்களைப் பூட்டி வைத்தால், நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும். மனதில் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தோன்றினால் உங்கள் வாழ்க்கையில் வெற்றியும் சந்தோஷமும் வந்து சேரும். நம்மில் பலர் கோபம், பொறாமை, பயம், வெறுப்பு போன்ற எதிர்மறையான விஷயங்களையே மனதில் பூட்டுப் போட்டு வைக்கின்றனர்.


கடலில் இருக்கும் கப்பலை, அந்தக் கடல்நீரால் மூழ்கடிக்க முடியாது, கப்பல் உறுதியாக இருக்கும் வரை. அது போலத்தான் நம் மனமும். நம் மனம் உறுதியாக, தெளிவாக இருந்தால், வெளியில் இருந்து யாராலும் நம்மைக் காயப்படுத்த முடியாது. மனதின் இயல்பே அமைதியற்று இருப்பதுதான். எலி ஓரிடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் தாவி ஓடுவதுபோல், மனமும் இங்கும் அங்கும் தாவித் திரியும் இயல்பு கொண்டது. மனதைக் கட்டுப்படுத்த விரும்பினால் அதைக் கட்டிப்போடுவது ஒன்றுதான் வழி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

24 mins ago

சிறப்புப் பக்கம்

49 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

23 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்