ஒருவன் மலை உச்சியில் நின்று இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தான். திடீரென்று கால் தவறி பாதாளத்தில் விழுந்தபோது, பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைத் தற்செயலாகப் பற்றிக்கொண்டான். பிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம். அவன் இதுவரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, ‘கடவுளே, உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டினான்.
அப்போது வானத்திலிருந்து ஓர் அசரீரி!
அசரீரி: நீ என்னை நம்ப மாட்டாய்.
மனிதன்: கடவுளே, என்னைக் கைவிட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.
அசரீரி: எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன்: கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீதான் காப்பாற்ற வேண்டும்.
அசரீரி: சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டுவிடு.
மனிதன்: வேரை விட்டுவிட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்கவில்லை.
நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதைவிட முக்கியம், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை. நாம் நம் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறோமோ அதேபோல் பிறர் மீதும் நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆனால், அந்த நம்பிக்கை கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருக்கக் கூடாது.
ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைப்பதற்கு முன், அவரைப் பற்றிய முழு விவரங்களையும் ஆராய வேண்டும். நமது நம்பிக்கைக்கு அவர் தகுதியானவர்தானா என்பதைக் கண்டறியவேண்டும். தன்னை நம்பாதவன்தான் பிறரையும் நம்ப மாட்டான்.
ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கைதான் எல்லாவற்றுக்கும் அஸ்திவாரம். கணவன்-மனைவி ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர், பிள்ளைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, உறவினர்களின் நம்பிக்கை, நண்பர்களின் பரஸ்பர நம்பிக்கை எனப் பிறர் மீது வைக்கும் நம்பிக்கைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பேருந்தில் போகிறோம் என்றால் அந்த டிரைவர் நம்மைப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் அதில் பயணம் செய்கிறோம்.
இது பேருந்துக்கு மட்டுமல்ல; விமானம், ரயில், ஆட்டோ, கார் என்று எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு சுழன்றுகொண்டிருக்கிறது. பெரிய வலைப் பின்னல்களைப் போல, ஒவ்வொருவருக்கிடையேயும் மெல்லிய நூலிழை போன்ற நம்பிக்கை இழையோடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கிடையேயும் எந்தப் பந்தமோ உறவோ சம்பந்தமோ இல்லாவிட்டாலும், நம்பிக்கை என்கிற நூலிழையில் எல்லாரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.
உதாரணத்துக்கு, நீங்கள் ஓர் உணவகத்துக்குப் போகிறீர்கள். தோசை ஆர்டர் செய்கிறீர்கள். தோசை வந்தவுடன் சாப்பிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுகிறீர்கள். இந்தச் சம்பவத்தில் ஒரு மெல்லிய நம்பிக்கை இருப்பது உங்களுக்குப் புரிகிறதா?
அந்த உணவகத்தில் உங்களுக்குத் தோசை வார்த்துக் கொடுத்தவரை நீங்கள் முன்னே பின்னே பார்த்தது கிடையாது. அதை உங்களுக்குக் கொண்டுவந்து கொடுத்த சப்ளையருக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும், அவர்கள் கொடுத்த தோசையை நீங்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றிச் சாப்பிட்டீர்கள். நீங்கள் சாப்பிட்ட தோசையில் கெட்டது எதுவும் இருக்காது என்கிற நம்பிக்கையில்தானே அதைச் சாப்பிட்டீர்கள்? இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது? முன்பின் பார்த்திராதவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையை எந்த வகையில் சேர்ப்பது? இதுபோல ஆயிரக்கணக்கான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்!
» துடிக்கும் தோழன் 8 | மருத்துவர்கள் கடவுள் அல்ல
» ஜானி டெப் Vs ஆம்பர் ஹேர்ட் | மீ டூ இயக்கம் முதல் மீம் மெட்டீரியல்ஸ் வரை - 10 குறிப்புகள்
நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும். ஓர் இளைஞன் தன்னைச் சீடனாகச் சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். “என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக்கொள்வேன்” என்றார் அந்த ஞானி.
அதற்கு அந்தச் சீடன், “நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான். “சில நாட்கள் கழித்துப் பதில் சொல்கிறேன். அதுவரை இங்கேயே தங்கியிரு” என்று கூறினார் ஞானி.
மறுநாள் காலை அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான் அந்த இளைஞன். சிறிது தொலைவு போனவுடன், ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன். இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும் மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஓர் ஏமாற்றுக்காரர் என்கிற முடிவுக்கு வந்தான் இளைஞன். அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையைக் கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்தப் பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அந்தப் பெண் அந்த ஞானியின் தாயார். மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.
ஞானி, “நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே? உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை?” என்றார். தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன். “இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல. இது புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது” என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஒருவரை நம்பும் போதோ அல்லது அவரை நம்பக் கூடாது என்று முடிவெடுக்கும்போதோ, ஒரு முறைக்கு இரண்டு முறை தீர ஆலோசித்த பிறகே முடிவெடுங்கள். உங்கள் நம்பிக்கையும் அந்த முடிவும் அப்போதுதான் சரியாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago