வாழ்க்கையில் வெற்றிபெற நம்பிக்கையும் அவசியம். நம்பிக்கையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, நாம் நம் மீது வைக்கும் நம்பிக்கை. இரண்டு, நாம் பிறர் மீது வைக்கும் நம்பிக்கை. இவை இரண்டுமே சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
நம்பிக்கை இரண்டு வகை என்று சொன்னேன். நம் மீது நமக்கு முழு நம்பிக்கை வேண்டும். ஒரு செயலை நம்மால் முடிக்க முடியும் என்று முழுமூச்சோடு செயலில் இறங்கிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்.
‘உனக்கு ஒரே நண்பன் நீயே, ஒரே பகைவனும் நீயே. உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை. நம்பிக்கை குறையும்போது ஒவ்வொரு மனிதனும் தவறான வழியில் செல்கிறான்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
உயிரோட்டத்தை அழிக்கும் கருவி
தன்னை நம்பாத ஒருவன் எப்படி தன்னைச் சுற்றி இருப்பவர்களை நம்ப முடியும்? தன்னையும் நம்பாமல், சுற்றி இருப்பவர்களையும் நம்பாமல் எப்படி ஒருவனால் வெற்றி பெற முடியும்?
சாத்தான், ஒரு முறை தன் வியாபாரத்தில் இருந்து வெளிவர நினைத்தான். தன்னுடைய அத்தனை கருவிகளையும் விற்பனைக்கு வைத்தான். கோபம், காமம், பேராசை, பொறாமை, வெறுப்பு, தீவிர இச்சை போன்ற அனைத்தையும் விற்பனைக்கு வைத்தான்.
மக்கள் அவை அனைத்தையும் வாங்கிவிட்டனர். அப்படியும் சாத்தானுடைய பையில் ஏதோ கொஞ்சம் மிச்சமிருப்பதை ஒருவர் பார்த்துவிட்டார்.
“சாத்தானே, பையில் இன்னும் என்ன மிச்சமிருக்கிறது?” என்று கேட்டார்.
அதற்கு சாத்தான், “இவையெல்லாம் என்னுடைய மிகத்திறமையான கருவிகள். ஒரு வேளை நான் மீண்டும் வியாபாரத்தில் இறங்கினால், இவை எனக்குத் தேவைப்படும். அதனால், இவற்றை நான் விற்பனைக்கு வைக்கப் போவதில்லை. ஒரு மனிதருக்குள் இருக்கும் உயிரோட்டத்தை அழிப்பதற்கான மிகச் சிறந்த கருவி அது” என்றான்.
“என்ன அது” என்றார் கேள்வி கேட்ட நபர்.
அதற்கு சாத்தான், “நம்பிக்கையின்மை” என்றான்.
நம்பிக்கை இல்லாததுதான் ஒரு மனிதனின் தோல்விக்கு முக்கியமான காரணம். நம் மீது நாம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது என்பது சாதாரண விஷயம். கொஞ்சம் முயன்றால் போதும், நமக்குள் நம்பிக்கையை ஊற்றெடுக்கச் செயலாம்.
தொட்டுவிடும் தொலைவில் வெற்றி
ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், உங்களுக்குள்ளேயே கவனம் செலுத்துங்கள்.
உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எழுதிக்கொண்டே வாருங்கள். எழுதி முடிக்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அட, ‘நம்மிடம் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கின்றனவா’ என்று தோன்றும்.
இந்த உங்கள் நல்ல விஷயங்களைப் பார்த்தாலே உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்துவிடும். இந்த நம்பிக்கையை மேலும் வளர்த்துக்கொள்ள சில வழிமுறைகளைச் செயல்படுத்துங்கள்.
‘உங்களிடம் ஏற்கனவே என்ன இருக்கிறது, என்ன இல்லை என்றெல்லாம் யோசித்து கொண்டிருக்காதீர்கள். உங்களிடம் இருப்பதில் சிறந்தது இல்லாவிட்டால், அதை எவ்வளவு ஆவலோடு தேடுவீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்’ என்கிறார் ரோமன் தத்துவ அறிஞர் மார்க்கஸ் அரேலியஸ்.
அலுவலகத்திலோ வீட்டிலோ புதிய பொறுப்புகளை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தபட்சம் ஐந்து விஷயங்களையாவது புதிதாகக் கற்றுக்கொள்ள முயலுங்கள். வெட்கத்தையும் கூச்சத்தையும் விட்டொழித்து எல்லோரிடமும் சகஜமாகப் பழகத் தொடங்குங்கள்.
‘நீங்கள் சிறந்த வெற்றியாளர்’ என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த உங்கள் தோற்றத்தைக் கம்பீரமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனத்தில், ‘வெற்றியின் இலக்கை அடைய, இன்னும் கொஞ்சம் தொலைவுதான் இருக்கிறது’ என்று நினைத்துக்கொள்ளுங்கள். ‘என்னிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. என்னால் நிச்சயம் வெற்றியாளராக இருக்க முடியும்’ என்பதை உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.
எல்லாமே சிறப்பு!
மாமிசம் விற்கும் கடைக்கு வந்த ஒருவர், கடைக்காரரைப் பார்த்து, ‘உங்களிடம் உள்ளதிலேயே நல்ல மாமிசமாகக் கொடுங்கள்’ என்றார். அதற்குக் கடைக்காரரோ, ‘என்னிடம் உள்ள எல்லாமே சிறந்ததுதான்’ என்றார். வாங்க வந்தவரோ, ‘அது எப்படி எல்லாமே சிறந்தது என்கிறீர்கள்?’ என்றார்.
அதற்குக் கடைக்காரர், ‘என்னிடம் இருந்தாலே அது சிறந்ததுதான். ஏனென்றால், நான் சிறந்ததை மட்டுமே வைத்திருப்பேன்’ என்று சொல்லவும், வாங்க வந்தவர் மறு பேச்சில்லாமல் வாங்கிச் சென்றார்.
நாமும் அந்தக் கடைக்காரரைப் போல இருக்க வேண்டும். நம்மிடம் எல்லாத் திறமைகளும் இருக்கின்றன என்கிற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
அந்தத் திறமைகள் அனைத்தும் நம்மை வெற்றியின் பாதையில் பயணிக்கச் செய்யும் என்கிற நம்பிக்கையும் வேண்டும்.
நம்பிக்கையை விடவே கூடாது! நம்பிக்கையை கைவிட்டுவிட்டால் நாம் சராசரி மனிதனைவிடச் சாதாரண மனிதனாகிவிடுவோம். நம்பிக்கை இழந்த மனம், நம்மை அதளபாதாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.
தப்பிக்க முயலாத யானைகள்
வேடன் ஒருவனுக்கு யானைகளைப் பிடிப்பதுதான் தொழில். அவன் பல இடங்களில் குழிவெட்டி, அந்தக் குழியில் விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச் சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டிவிடுவான். அவை கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும். தப்பிக்க முயலும். ஆனால், காலப் போக்கில் அப்படி முயல்வதில் எந்தப் பலனும் இல்லையென அமைதியாகிவிடும்.
அவற்றுக்கு நேரத்துக்குச் சாப்பாடு போட்டுவிடுவான் வேடன். அதை விரும்பிச் சாப்பிடும் குட்டிகள் கொஞ்ச நாளில் சமாதானமாகித் தப்பிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிடும். அந்தக் குட்டி யானைகள் வளர்ந்து பெரிதான பின், அவற்றைச் சங்கிலியில் இருந்து விடுவித்துக் கயிற்றில் கட்டிவிடுவான் வேடன். யானைகளும் சாதுவாக இருக்கும்.
ஒருமுறை தன் மகனுடன் வேட்டைக்கு வந்த அந்நாட்டு அரசன், ‘குட்டி யானைகளைச் சங்கிலியிலும் பெரிய யானைகளைக் கயிற்றிலும் கட்டி இருக்கிறாயே! பெரிய யானைகள் கயிற்றை எளிதாக அறுத்துவிடுமே!’ என்று வேடனிடம் கேட்டான்.
அதற்கு வேடன், “மன்னா! கயிற்றில் கட்டப்பட்டுள்ள இந்த யானைகள், குட்டியாக இருந்தபோது சங்கிலியில்தான் கட்டப்பட்டன. இப்போது அவற்றுக்கு இந்த இடம் பழகிவிட்டதால் பெரிதான பிறகும், வேறிடத்துக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என நம்பிக்கையை இழந்து தப்பிக்காது. எனவே, கயிற்றில் கட்டியிருக்கிறேன்” என்றான்.
இந்த யானையைப் போலத்தான் நமது மனமும். நம்பிக்கையை இழந்த மனம் நம்மை முன்னேறவிடாது. ஒரு வட்டத்துக்குள்ளேயே நம்மைக் கட்டிப்போட்டுவிடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago