அலுவலகத்தில் ஏற்படும் கோபத்தை நிர்வகிக்கும் வழிகள்

By முகமது ஹுசைன்

கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டாண்டுகளாக வீட்டினுள்ளேயே முடங்கியிருந்த நாம் மீண்டும் அலுவலக வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறோம். வெளிப்பார்வைக்கு அனைவரும் இயல்பாக இருப்பதுபோலத் தோன்றினாலும், நாம் இன்னும் முழுமையாக இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. பெருந்தொற்றுக் காலம் அந்த அளவுக்கு நம் வாழ்கையையும் உளவியல் போக்கையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட நெருக்கமானவர்களின் இழப்பு, நிச்சயமின்மை, அபரிமிதமான கவலை, பொருளாதார நெருக்கடி போன்றவை எளிதில் கடந்து செல்ல முடியாத பாதிப்புகளை நம் உளவியலில் ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் காரணமாக, இன்று எளிதில் கோபமடைந்து, வெடித்துச் சிதறும் மனநிலையைக் கொண்டவர்களாக நாம் மாறியிருக்கிறோம்.

பொதுவாக இயலாமையாலோ அச்சத்தாலோ ஏற்படும் கோபம் பயனற்ற ஒன்றாகவே இருக்கும். அது நம் மனத்தின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, நம் மகிழ்ச்சியையும் வேலைத் திறனையும் வெகுவாகக் குறைக்கும். முக்கியமாக, அது நம் அலுவலகச் சூழலையும்உடனிருப்போரையும் எதிர்மறையாகப் பாதிக்கும். இத்தகைய கோபத்தை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது? மற்றவர்களின் கோபத்திலிருந்து நம்மை எப்படிக் காப்பது? வெடித்துச் சிதறும் கோபத்தை மடைமாற்றி நேர்மறை எண்ணங்களாக எப்படி மாற்றியமைப்பது? என்பதற்கான சில வழிமுறைகள் இங்கே:

கோபத்தை அடக்க வேண்டாம்

நம்முள் எழும் உண்மையான உணர்வுகளை மறைத்து, வெளித்தோற்றத்தில் எல்லாம் இயல்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வது, கோபத்தைவிட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். நியாயமான காரணம் என்றால், அதற்காகக் கோபமடைவது நம்முள் நேர்மறையான எண்ணங்களையே தோற்றுவிக்கும். பிறரது தவறான புரிதலுக்கோ, நம் மீது அவர் நிகழ்த்தும் முறையற்ற தாக்குதலுக்கோ நாம் அமைதியாக அடங்கிப்போவதைவிட, கோபத்தை வெளிப்படுத்தி எதிர்வினையாற்றுவது நல்லது. வெளிப்பார்வைக்குச் சிறியதாகத் தோன்றும் கோபத்துக்கான காரணி, நம் உள் மனத்துக்குள் ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் திறனுடன் இருக்கலாம். கோபத்தை அடக்குவதால் நம் மனத்துக்கும் உடலுக்கும் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, கோபத்தை வெளிக்காட்டிவிடுவதே சிறந்த தீர்வாக இருக்கும். நியாயமான கோபம் நம் தன்னம்பிக்கையை உயர்த்தும்; சுயமரியாதையையும் நிலைநிறுத்த உதவும். ஆனால், அந்தக் கோபம் கட்டுக்குள் இருக்க வேண்டும். அளவுக்கு மீறிச் சென்றால், அது நம்மையும் சேர்த்தே பாதிக்கும்.

அளவு மீற வேண்டாம்

கோபத்தை மிதமிஞ்சி வெளிப்படுத்துவது ஒருபோதும் பயனுள்ளதாக இருக்காது. இதற்கு மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் 'கோபத்தை வெளிப்படுத்தும் அறைகளே’ (Anger Room) சான்று. மேற்கத்திய நாடுகளில் அந்த அறைகளுக்கும் செல்வது என்பது கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒருவித சிகிச்சைமுறை. மக்கள் அந்த அறைகளுக்குக் கட்டணம் செலுத்திச் சென்று, அந்த அறையிலிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி, கண்ணாடி, கட்டில், வாஷிங் மிஷின் போன்றவற்றை உடைத்தெறிவர். அந்தச் செயல் அவர்களின் கோபத்துக்கு வடிகாலாக அமையும் எனக் கருதப்பட்டது. ஆனால், அந்தச் செயல் கோபத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, கோபத்தை அதிகரிக்கவே பயன்பட்டு இருக்கிறது என்பதை இன்றைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கோபத்தின் மிதமிஞ்சிய வெளிப்பாடு, நம் மனத்தின் கவனத்தைக் கோபத்தை வெளிப்படுத்துவதில் மட்டும் நிலைநிறுத்தும். கோபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வை அடையும் வழிமுறைக்கு நம் மனம் செல்லாது. நாளடைவில் அனைத்துச் சூழல்களிலும் மிதமிஞ்சிய வெளிப்பாடே நம்முடைய இயல்பாக மாறிவிடும். கோபத்துக்குக் காரணமான நபருடன் பேசி, அதற்கான காரணத்தை ஆராய்ந்து, தீர்வை அடையும் வழிமுறையில் மனத்தைக் குவிப்பது நம்மையும், நம் சூழலையும் மேம்படுத்தும்.

உணர்வுக்குப் பின் மறைந்திருக்கும் தேவைகள்

கோபத்துக்குப் பின்னர் மறைந்திருக்கும் நம்முடைய தேவைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றில் மனத்தைக் குவிப்பது, கோபத்தை உள்ளாக்கும் சூழலிருந்து நம்மைத் தள்ளி வைக்கும். இதன் காரணமாக நம் மனத்தின் சமநிலையும் காக்கப்படும். கோபத்துக்கான காரணிகள் குறித்து அறிவதற்கு உதவும் சில கேள்விகள்:

பலருக்கு, அவர்களின் கோபத்தின் பின்னணியில் உள்ள உணர்வாக அச்சமே இருக்கிறது. தம்மிடம் இருக்கும் திறன் போதாமை காரணமாக, அவர்கள் விரும்பும் ஒரு பொறுப்பு அல்லது பணி பறிக்கப்படலாம் என்கிற அச்சம் பலருக்கு இருக்கும். இந்த அச்சமே பெரும்பாலும் நியாயமற்ற கோபமாக வெளிப்படுகிறது. இந்த அச்சத்தைக் கோபமாக மடைமாற்றுவதைவிட, நம் திறனை மேம்படுத்தும் காரணியாக மாற்றுவது, நம் சூழலைச் சீர்படுத்தும்; வாழ்வை மேம்படுத்தும்.

விலகிச் செல்ல பழகுங்கள்

நம்மால் மாற்றமுடியாத நிகழ்வுகளால் ஏற்படும் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குச் சில சமயம் நாம் தள்ளப்படலாம். அந்த மாதிரியான சூழலில், அதிலிருந்து விலகிச் செல்வதே சிறந்த வழி. ஒருவேளை அவ்வாறு விலகிச் செல்ல முடியவில்லை என்றால், நண்பர்கள், நலம் விரும்பிகளின் உதவியை, ஆலோசனையை நாடலாம். அலுவலகத்தில் மேலாளரின் அபரிமித எதிர்பார்ப்பு அல்லது ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு நம்மை மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக்கலாம். அந்த மன அழுத்தம் நம்மைத் திறனற்றவராக, பயனற்றவராகக்கூட உணர வைக்கலாம். அத்தகைய சூழலில், மேலாளரை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தை முடிந்தவரை தவிர்த்து, நெருக்கமானவர்களுடன், ஊக்கம் அளிப்பவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, நம்முடைய திறனை மீட்டெடுக்கும். இழந்த தன்னம்பிக்கையையும் மீட்டுத் தரும்.

கோபத்தை ஆக்கப்பூர்வமானதாக மாற்றுதல்

விளையாட்டு வீரர்கள் மிகுந்த கோபத்தில் ஆக்ரோஷமாகக் கத்துவதைக் கவனித்து இருப்போம். அங்கே அந்தக் கோபமே அவர்களுக்கான உந்தாற்றல். அந்தக் கோபத்தால் ஏற்படும் அபரிமித ஆற்றலே அவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. கோபத்தை வெற்றிக்கான ஒன்றாக, ஆக்கப்பூர்வமான ஒன்றாக மாற்ற முடியும் என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை. ராணுவத்தில்கூட ஆபத்தான சூழலிலிருந்து தப்பிப்பதற்குத் தேவைப்படும் ஆற்றலைக் கோபத்திலிருந்து பெறுவதற்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நாமும் கோபத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். அலுவலகத்தில் நமக்கான நியாயமான வாய்ப்புகளோ, உயர்வுகளோ மறுக்கப்படுகிறது என்றால், அதற்கான கோபத்தை மறைப்பதன் மூலம் நமக்கு என்ன பயன் கிடைக்க முடியும்? இத்தகைய சூழலில், என்ன ஆகுமோ என்கிற அச்சம் காரணமாக அமைதியாக இருப்பதைவிட, துணிவுடன் வெளிப்படையாக நம்முடைய ஏமாற்றத்தை, எதிர்பார்ப்பைப் பதிவுசெய்வதே நம் தரப்பின் நியாயத்தை நிலைநிறுத்த உதவும்.

கோபம் ஓர் அழகான உணர்வு

பொதுவாக, மிதமிஞ்சி வெளிப்படும், கட்டுப்பாடற்ற உணர்வே கோபம் என்று கருதப்படுகிறது. உண்மை அதுவல்ல. அது ஒரு தவறான புரிதல். கோபம் என்பது ஒரு அழகான உணர்வு. அதைக் கட்டுக்குள் வைத்து, அளவுடன் வெளிப்படுத்தினால், அதை விடப் பயனுள்ள வேறு எந்த உணர்வும் கிடையாது. இன்று நாம் அனுபவிக்கும் எல்லா உரிமைகளும், சுதந்திரங்களும் யாரோ ஒருவருடைய கோபத்திலிருந்தே பிறந்தவையே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE